வியாழன், 8 டிசம்பர், 2011

கவிஞருக்கு நன்றி



ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!
*************************************************************************

நித்தம் உனைக் கண்டதால்
என்னவோ – நீ
சப்தமிட்டாலே;
ஒலிக்கொடுத்து;
ஓடிவருவேன் - உனைத்
துரத்த வருவேன்;
என் வீட்டுமாடியில்
காயும் வத்தலையும்
முறுக்கையும் காக்க!

பாலை வந்த
நாள் முதல் – உனைப்
பார்க்காததால் என்னவோ;
அழகாய் தெரிகிறாய்;
விட்டுவந்த சொந்தங்களை
தொட்டுப்பார்க்க
நினைப்பதுப்போல்;
அருகில் இல்லையென்றால்தான்
அதன் அருமை புரியும் போல..
***********************************************************************
ஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!

ஒட்டியிருக்கும் ஈகோ’
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!

உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
******************************************************************************
ஊன் உறக்கம் மறந்து
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்

ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது

இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே

எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?

அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி

மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது

எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்

அன்புடன் பாயிஸ்
************************************************************************
மழை வரும் அறிவுருத்தலை
மேகங்கள் அணிவகுத்து
கொண்டுவருதலில் சொல்லும்

காற்றலைகள் குழலூதி
வரவேற்கும், மின்னொளிகள்
வாணவெடிகளிட்டு வரவேற்கும்

வாணம் மேளதாளமிட்டு
வரவேற்கும், இயற்கை
ஆடி அசைந்து வரவேற்கும்

மனிதனோ வேறுபடுவான்
சிரித்து விளையாட சிறுவன்
புன்னகைத்து வரவேற்பான்
ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ள
பலர் வாவென்று வரவேற்பர்

தினாந்த கூலி மட்டும் சிரித்தபடியே
வந்திட்டியா வாவென்று அழைப்பான்

உன்னால் ஆனந்தம் அதிகம்
அதைவிட அழிவுகளும் அதிகம்
ஆகவேதான் எப்பவும் போல்
அவ்வப்போது வந்து மறைகிறாயோ...?

ஐம்புதங்களின் ஆட்டத்ததை
அணைய வைக்கும் தன்மையும்
ஆனந்தப்படுத்தி அழவைகும்
அதிசிய தன்மையும் உன்னிடமே...
****************************************************************************
நான் என்னுள்ளே
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில்
ஒரு பொருட்டே அல்ல


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு,
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன்
நழுவி ஓட என் உடலம் மூடிய
வளுவளுக்கும் செதில்களுமாய்
வீரியத்துடன் விரைந்து
வெற்றிடமாய் உறைந்து போன
மனித உருவில் நான்


என் கோரைப்பற்களின்
பயன்பாட்டில் என்னை நான்
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை
சுழற்றிடத் துணிந்த கணத்தில்
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது
கையில் மண்வெட்டியுடன்
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின்
அளவு கொண்டோ
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ
நான் புதையப் போவதில்லை
என்னைப் புதைக்க
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
*************************************************************************
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
****************************************************************************
குச்சு ஊண்டும் வயதிலும்
குடிசையில் இருண்ட வாழ்கை
குடி வாழ இருட்டில் அடுப்பெரிப்பு

அம்மா என்ற மந்திரச்சொல்
உதடுகளில் தாண்டவமாட
கைகள் நீண்டிடும் அத்தருணம்

கைகள் நீளும் போதுஅக்கணமே
சுயமரியாதையும் உதிர்ந்து விடுகிறது
கூனிக்குறுகின்ற பரிதாபமும்
அங்கேதான் நிகழ்கிறது

கொடுப்பவன் மனதிலோ - நான்
கொடையாளன் என்ற கர்வம்
கண்களால் ஏழணப் பார்வை
உதடுகளி்ல் எள்ளிநகைச் சிரிப்பு

ஐயோ பாவமென்று
சிலர் நினைப்பர்
இல்லாதோர் தானும் அவனுடன்
சேர்ந்திடலாமென்று நினைப்பர்

பாவமவர்கள் நிமிர்ந்து நிற்க
தூண்கள் அற்றவர்கள்
விடுகின்ற மூச்சுக்காற்று
யாசகத்தின் பிரதிபலன்கள்

வயிற்றில் பிறந்தவர்கள் வெளிச்சத்தில்
இவர்களைப் பெற்றவர்கள் இக்கஷ்டத்தில்
கண்களில் தீத்தனலோடு தனையன்கள்

வாழ்கை பளகிவிட்டது
வயிற்றுப்பசி வாழ்ந்தாக வேண்டும்
வாசப்படி தாண்டும் நேரம்
நான் சென்று வருகிறேன
********************************************************

பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...

நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில்
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...

பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...

அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...

பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..

நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..
************************************************************
உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
*********************************************************************
பெண் பிள்ளைமீது
பேரவா கொண்ட
அன்பின் அப்பன்தான் நான்
ஆனாலும்
தப்பி பிறந்துவிட்டாய்
தலைமகனாய் எனக்கு.

பல் முளைத்ததைகூட
என் கன்னங்களில்
பதிய வைத்துதான்
உனது
வரலாற்றை துவங்கினாய்.

அம்மாவென்று சொன்னால் ,
மம்மியென்றும்
மம்மி என்று சொன்னால்,
பந்தால் என்னை அடித்தும்தான்
பாடம் கற்று கொடுத்தாய்.

முதல் மாணவனாய்
நீ இருக்க வேண்டும்
என்ற
எனது ஆசையை
மூட்டை கட்டி
வைத்து விட்டேன்.

விளையாட்டு, இசை
கவிதை ,ஓவியம்
ஏதோ ஒன்றிலாவது
ஆர்வம் இருக்குமென்று
கூர்ந்து பார்த்து
நெஞ்சின் மீது
தூங்க வைக்கிறேன்.

சுறுசுறுப்பாய் இருக்கும்
உனது கனவுகள்
பயத்தை எனக்கும்
அல்லவா கற்பிக்கிறது
உனது அழுகையின் ஊடே

பதினைந்து வருடங்களை
பாடுபட்டுத்தான்
கடத்திவிட்டேன்
உனதம்மா நரைமுடிகளோடு
எனது மண்டையை பிய்த்து.

எத்தனையோ
செலவினங்களுக்கு
பின்னர்தான்
முதல் சுப செலவாகியது
அந்த நிகழ்ச்சி.

ரோபாவை எனது
இரண்டாவது பிள்ளையாக
தத்தெடுத்து கொண்ட
போதிலிருந்து
அன்பின் அர்த்தத்தை
வெளிபடுத்தி
வெற்றிக்கான கோட்டையில்
உனது அப்பாவின் பெயரை
சூட்டி நிற்கிறாய்.

உனது அம்மாவின்
கண்ணீர்த்துளிகளுக்கு
நான் நிச்சயம்
கடமை பட்டு இருக்கிறேன்.

எனது சுண்டு விரலை
பிடித்து கொண்டிருக்கும்
கடைக்குட்டி
ரோபாவின்
பாசத்தோடு
நீயும்
அதன்
தோள்மீது கைபோட்டு
அனைத்திருக்கும்
நம் குடும்பம்
வரலாறுதான். 
*********************************************************
மொட்டு விட்ட நம் உறவால்
முட்டி நிற்கும் என் வயிறு;
குறைவான உன் விடுப்பால்
குளமானது என் விழிகள்;

எனக்காக என்று
என்னை விடுத்து
எண்ணெய் தேசத்தில் நீ;

மணம் மாறாப்
புதுப்பெண்ணாய்;புண்ணாகியப்
புன்முறுவலுடன் நான்;

ஏக்கத்துடன்
தூக்கத்தைத் தொலைத்து;
மிச்சமிருந்து வாசணை
வீசும் உன் அழுக்குச்
சட்டையோடுச்
சண்டைப்போடும் உன் மனைவி!
**********************

ஆண்மைக்கு இனிப்புக்கொடுத்து;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
மசக்கை என்று;
பிரிந்துச் சென்ற உதடுகளும்
சுருங்கிப்போன இதயமுமாக நான்!

உறவுகள் குழந்தைக்குப்
பெயர் தேடிப்;
பக்கங்களை திண்றுக்கொண்டிருக்க;
இணையத்திலும்;
இணைந்த நண்பர்களிடமும்
பெயர் வேட்டை
நான் இங்கு நடத்த!

ஆணா!பெண்ணா என
ஆராய்ச்சி நடக்க;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
வந்திடுங்க!

சொன்னதும் சோகம் வெடிக்க;
சிரித்துக்கொண்டே
ஆறுதல் சொல்வேன் உனக்கு!

கேட்டுக் கேட்டு
அலுத்துப்போனாலும்;
அழுதுக்கொண்டேக்
கேட்பாய் மீண்டும்!

ஒட்டியிருக்கும் சோகங்களைப்
போர்வைக்குச் சொந்தமாக்கி;
எல்லோரும் உறங்கியப்பின்னே
எழுந்து அழுதுவிட்டு;
வீங்கியக் கண்ணைத்
துடைத்துவிட்டுத்
தூங்கச் செல்வேன்!
*********************************************


பண வீக்கம் என்று;
எங்கள் பணப்பைகள்
சுருங்கிக் கொள்ள;
விலை உயர்வால்
கவலைக் கிளைகள் படர;
தோய்ந்த முகத்தால்
துன்பங்கள் தொடர;
அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாக!

அத்தியாவசியப் பொருட்கள்
அரக்கவிலையில்;
இறக்கமே இல்லாமல் அரசு;
அரக்கன் நிலையில்;
ஏறியப் பொருட்களால்
என் வீட்டுக்கொல்லை;
காய்கறிகளால் செழிக்க;
பயிரிட்ட நான்
பணத்தைச் சேமிக்க;
சுயத்தொழிலால்
என் பக்கம் மெல்லமாய்
காற்று வீச!
************************************************************************
பெயரில் மட்டுமே
முகம் கொண்டு;
மெய்யா;பொய்யா என
முகம் கண்டு;
இனம் காண முடியா;
புதுவித நோய்!

நல்ல விசயங்கள்
பகிர்ந்தாலும்;
சாக்கடையின் மேல்
பறக்கும் கொசுக்களும்;
ஏமாந்துப் போகும்
அறிவாளிகளும் இங்கே
**********************************************************************
மணல் பூசிய
குளத்தாமையின்
ஒற்றையடி பாதையில்
இருக்கிறோம்

கரையேற துடிக்கும்
சில நீர்த்துளிகளோடு
காற்று
கதைக்கும்போது
இடைமறித்து கொள்கிறது
நம் சுவாசம்

தூக்கணாங்குருவிகள்
உதிர்த்துவிட்ட
ஒரு புல் சருகில்
பூத்துவிடுகிறது
நமக்கான அன்பு

கலைந்துவிட்ட
குளத்தாமையின்
மற்ற காலடிசுவடுகளில்
தேடிகொள்கிறோம்
நம் பாதையை
***********************************************************************
வாழ்த்துவான் உணர்ந்து வளம் காண்பான்
வையத்தில் என்றும் நிலைத்து

செல்வநெறி சீர்கொடையும் செய்வான் புகழ்ந்து
உள்ளறிவில் இறை காண்க.


(குறிப்பு : நான் எழுதும் திருக்குறள் பொருட் கவிதை பயனாய் இக்குறட் கவிதைகள் எழுத தூண்டியது )
******************************************************************************
ரிப்பீட்டு சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாணவச்செல்வங்களே வாழ்க வழமுடன் அன்பு மலர்

உறவாகி வந்துவிடுவாய்
சில நினைவுகளை
வாழ்க்கையாக்கிவிட்டு சென்றுவிட

இதுவரை பெண்ணாக
பாடிய கவிஞர்கள்
உனக்கு சோறு ஊட்டி பார்த்தார்களா ?
தெரியவில்லை.

இப்போதும் கூட்டாஞ்சோற்றில்
பூமி மண்ணை
ஊற்று நீரில்
ஒரு சில வியர்வை துளிகளுடன்
குழைத்து
சேர்த்து சமைத்து இருக்கேன்

பால் நிலவொளி என்று
மூத்த கவிஞர்கள் சொல்லலாம் .....
....
பனைமரம் தாண்டி
நீ ஏறிவருவதாக நினைத்து கொள்கிறேன்

இன்றைய நாள் என்னவென்று தெரியாது
இரவிற்கு உன்னுடன் சாப்பிட
கனவின்றி இருக்கிறேன்
வருவாயா ?
***************************************************
அறியாத வயதில் உனை
அணைத்துக்கொண்டு
உன் தந்தை என் மீது
நகர்வலம்!

நடைப் பழகியக் காலத்தில்
உன் இடையைச் சுமந்து;
மூன்றுச் சக்கரமாய் நான்
ஊர்வலம்!

ஓடும் வயதில்
நீ ஓரமாய்;
குரங்குப்பெடல் போட்டு
கல்லுக்கும் முள்ளுக்கும்
நீ முத்தமிட்டக் காலம்!

பள்ளிக்குச் செல்லும்
காலம் அது;
பந்தயமிட்டு எனை
மிதித்து எடுப்பாய்;
வேகத்தில் அழுத்தி எடுப்பாய்!

மண் பட்டாலும்
மல்லுக்கு நின்று
சுத்தம் செய்தக் காலம்;
சுத்தமாய் நீ மறந்து;
இப்போது
ஆவியாகும்
எரிபொருளை நிரப்பி;
ஆவியாக்கி நிற்கிறாய்
உன் ஆரோக்கியத்தை;
தேமே என்று நான்
மூலையில் ஒதுங்கி ஒடுங்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஓரத்தை!
*********************************************************************

ஆராரோ ஆரிரரோ
உண்மை உறவின்
உயிரொலி தாயின் தாலாட்டு

தரணியில் நான் பிறக்க
தாயே நீ தாங்கிய
தியாகங்கள் எத்தனை எத்தனை

என் தாயின் தியாகமே நான்.,
நான் எதை தியாகம் செய்தேன்
என்னை ஈண்டவரான அன்னைக்கு

கருவறையில் நான் வாழும் போது
தன்னை நொநது கொண்டே
என்னை வளர்த்த தாய்

தாயின் தொப்புல் கொடியின்
தொடர்பில்தான் என்னுடல்
உலகுக்குச் சொந்தமானது

ஒரு முள கொடியில்
எனதுயிர் உருவம் பெற
கருவறையிலையே உயிர்
ஊற்றிய உறவு தாய்

எனதுயிர்ப்பாலம் கிள்ளியெறிந்த
ஒரு துண்டு தொப்புல் கொடியே...!
அதில் ஈருயிர்கள் பிறந்தன
நான் பிறக்கையில் என்னுடன்
என் தாயும் பிறந்தார்

அன்னையே உன்னையே
உறவுகளில் உயர்த்திப்பார்கிறேன்
என்னையும் அப்படியே பார்க்கிறாய்

அன்னையே உன்
இடைவெளிகள் நிறப்ப
இங்கு வேறேனும்
உயிர்கள் உண்டோ...?
********************************************************************
கம்மந்தட்டைகளை
மேய்ந்து கொண்டிருக்கும் கரையான்கள்
புற்று கட்டும் பதத்தினை
மண்வாசனையில்
பார்த்து கொள்கிறது

காலையின் மிதவெப்பமும்
குட்டையின் அப்பாலும்
மூங்கில் நிழலினை
கொஞ்சிக் கொள்கிறது

கருடனுக்கு பயந்து
ஒடுங்கிய கொழிகுஞ்சின்
மூக்கு பொத்தலில்
தென்றல் நுழைந்து
சேதி சொல்கிறது

நகங்கள் நீளமாய்
வளராவிட்டாலும்
சீய்த்து பார்க்கும் உறுதியோடு
பரபரத்து கொள்கிறது
கொழிகுஞ்ச்ன் கால்கள்

கருடனின் கண்களும்
கோழி குஞ்சின் கண்களும்
ஒரே நேர்கோட்டில்
கரையானின் வெளிபடுதலில்
..........................
இரையாகும் நேரம்
மண் வாசைனையை
நோக்கியே மறைகிறது 
*********************************************************************
சொந்தங்கள் சோலைவனம்போல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை

கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய சடங்குகளா உறவுகள்..?

மாதங்கள் ஒன்றோ,
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும்
தொலை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்

அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு

கட்டணமே இல்லாத
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும்
அழைத்திட மனம் நினைத்ததுண்டா

மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று

கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்

கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?

நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........

இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
(((((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக