செவ்வாய், 10 ஏப்ரல், 2012

செலவு செய்வது எப்படி?செலவு செய்வது எப்படி? 
நேற்றைக்கு ஷேருச்சாமியிடம் என் அப்பாவையும் கூட்டிக்கொண்டு போனபோது என் திறமையைப் பத்தி ரொம்பவே கிண்டலாகப் பேசிவிட்டார் சாமி. அதனால் அப்பாவிடம் இருந்து எனக்கு ஓவர் அட்வைஸ்! நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தேன். இன்று என்னைப் பார்த்ததுமே, ''அப்பா ஊருக்குப் போறப்ப என்ன சொல்லிட்டுப் போனாரு?'' என்றார் சாமி.

''எனக்கு பணத்தோட அருமை கொஞ்சம்கூடத் தெரியலையின்னு சொல்லிட்டாரு... அப்படி என்ன சாமி அநாவசிய செலவு பண்றேன்?''

''உங்கிட்ட சி.டி. ப்ளேயர் இருக்கா?''

''ரூம்ல இருக்கு.''

''ஐபாட்?''

''இருக்கே!''

''டிஜிட்டல் கேமரா?''

''ஓ யெஸ்!''

''செல்போன்?''

''நிறைய பாட்டு ஸ்டோர் பண்ணி கேட்கிற வசதியுள்ள 8 மெகா பிக்ஸல் கேமரா போன் இருக்கு.''

''சி.டி. ப்ளேயர், ஐபாட், மியூசிக்/கேமரா மொபைல், டிஜிட்டல் கேமரா... யோசிச்சுப் பாரு, பாட்டு கேக்கிறதுக்காக மூணு பொருள். போட்டோ எடுக்கிறதுக்காக ரெண்டு பொருள்... ஒண்ணை ஒண்ணு டூப்ளிகேட் பண்ணுதா இல்லியா?''

''போட்டு வாங்கிட்டீங்களே சாமி!''

''சரி, எவ்வளவு லோன் வெச்சிருக்க?''

''லட்ச ரூபாய் இருக்கும்--... பைக்குக்கு ஃபைனான்சில ஒரு 50,000. கேமராவுக்கு 0% வட்டியில ஒரு 10,000. ஆபீஸ்ல அட்வான்ஸ் 15,000. நண்பர்கள்ட்ட புரட்டினது ஒரு 25,000...''

''அதான், உன்னை மாதிரி சல்லிசா கடன் கிடைக்கி துன்னு கடன் வாங்கித் தள்றவனுக்கு பணத்தோட மதிப்பு தெரியவே தெரியாது! மாசச் சம்பளத்துக்குள்ளே கட்டுப்பாடா செலவு பண்ணி சேமிக்கணுமின்னு கஷ்டப்பட்டுகிட்டு வாழ்றவன்கிட்டே போய்க் கேளு... பணத்தோட அருமை தெரியும்! பணம் சேக்கணுமின்னா எத்தனை நாளாகும்; எவ்வளவு தியாகம் பண்ணணும்ன்னு சொல்வான்.''

''சரி சாமி... இவனுக்கு ஒரு சொல்யூசன் குடுங்க!'' என்றான் செல்.

''ஒரு பொருளை வாங்கும்போது ஒரு விஷயத்தை மட்டும் யோசிக்கணும். இதை வாங்குற பணத்தை நீ சேமிச்சா அது குறிப்பிட்ட நாளுக்கப்புறம் வளர்ந்து ஒரு மதிப்புல இருக்கும். அந்த எதிர்கால மதிப்பைவிட வாங்கற பொருள் இன்னிக்கு அதிக மதிப்பையோ, இல்லைன்னா அதுக்கு ஈடான உபயோகத்தையோ உனக்கு தருமான்னு பாரு. 'ஆமான்னா வாங்கு. இல்லேன்னா வாங்காதே!' செலவு செய்றதுக்கான சூத்திரம் இதுதான்!''

நான் அமைதியாக இருந்தேன்.

''உங்கப்பா, 'கிடைக்கிற சொற்ப சம்பளத்தில வாழ்க்கையில ஒரு பொருளையுமே வாங்க முடியாது போலிருக்கே'ன்னு கவலைப்பட்டுகிட்டு, செலவைப் பார்த்துப் பார்த்து செஞ்சு காசு சேர்த்திருப்பாரு. ஆனா நீயோ, 'உலகத்துல இருக்கிற அத்தனை பொருளையும் நம்ம சம்பாத்தியத்துல வாங்கமுடியலையே'ன்னு கவலைப்பட்டுகிட்டு செலவு செஞ்சுகிட்டிருக்க! இந்த மாடல் பைக், இந்த ப்ராண்ட் சட்டை, பேன்ட், இந்த டைப் ஷ¨ இதெல்லாம் போட்டாத்தான் உலகம் நம்மை மதிக்குமுன்னு ஒரு தப்பான எண்ணம் வேற உன் மனசுல இருக்கு.

வாழ்க்கையில எவ்வளவு பணம் சம்பாதிக்கிறேங்கிறது மேட்டரே இல்லை. எப்படி செலவை நிர்வாகம் பண்றேங்கிறதுதான் மேட்டர். ஏன்னா செலவைக் கட்டுப்படுத்தலேன்னா எவ்வளவு அதிகமா வரவு வந்தும் பிரயோஜனமில்லே!'' என்று முடித்தார் சாமி.


Thanks to Mr.Mohamed Sathik Emirates bank (AUH)

இலவச தொலைக்காட்சிப் பெட்டி


இலவச தொலைக்காட்சிப் பெட்டி

இலவச தொலைக்காட்சிப் பெட்டி

சமீபத்தில் ஒரு நாள் தமிழக கிராமம் ஒன்றில் ஒரு மறக்க முடியாத
காட்சியினைக் கண்டேன். முதலில் அது ஏதோ கோயில் திருவிழா என்று
நினைத்தேன். பிறகு தான் புரிந்தது, அது அந்த ஊர் மக்களுக்கு அரசு இலவச தொலைக்காட்சி வழங்கும் விழா என்று. சந்தையில் இருந்து கூடைகளைச்சுமந்தபடி பெண்கள் போவது போல அன்று அந்தி சாயும் பொழுதில் சாலையில் இலவசதொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தபடி மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் போவதுவித்தியாசமான ஒரு காட்சியாய் இருந்தது. அவர்களது நடையில் ஓர் அவசரத்தனம்இருந்தது. கொஞ்சம் மெதுவாக நடந்தால் பின்னாலே யாராவது வந்து இதைப்பிடுங்கிக் கொள்வார்களோ என்கிற மாதிரியான அவசரத்தனம். அது என்னுடைய அசட்டுக் கற்பனை என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு அந்தக் கிராமத்தில் நண்பரின் வீட்டிற்குப் போனபோது அவர்களுக்கு
நான்கு இலவச தொலைக்காட்சிகள் கிடைத்திருப்பதை அறிந்தேன். அவர்களிடம் ஏற்கெனவே வண்ணத் தொலைக்காட்சி ஒன்று இருக்கிறது. நேரடி ஒளிபரப்பு நிகழத்தும் கண்ட்ரோல் ரூம் போல அவர்களது வீட்டில் தொலைக்காட்சிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போல கற்பனை செய்து பார்த்தேன். நண்பருக்கு என்னுடைய கற்பனைகள் தெரியாது.

இலவசம் என்கிற வார்த்தைக்குத் தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் மகிமையை சமீப காலமாக அரசியல் கட்சிகள் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றன. மக்களிடையே நல்ல பெயரினை வாங்க நேர்மையான அறிவார்த்தமான முயற்சிகள் தேவையில்லை, இது போன்ற இலவசங்களே போதும் என்பது தான் தேர்தல் முடிவுகள், சில விதிவிலக்குகள் தவிர நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இலவசங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துமா? இந்திய ஜனநாயகத்தின் சோஷலிச நாட்களில் அரசு இயந்திரத்தின் லஞ்ச லாவண்யங்களும் பாபுத்தனங்களும் அடித்தட்டு மக்களுக்காக இயற்றப்பட்ட சில நன்மைகளையும் காற்றில் மிதக்கும் சோப்புக் குமிழ்களாக மாற்றி வைத்திருந்தன. இப்போது முதலாளித்துவத்தை நோக்கி இந்திய ஜனநாயகம் திரும்பும்போது, "பொருளாதார வளர்ச்சி அதாவது ஜி.டீ.பி. உயர்ந்தால் அதன் பலன் சமூகத்தில் எல்லோருக்கும் சென்றடையும்" என்று சொல்லப்பட்டது. ஜி.டீ.பி. உயர்ந்தது. பணக்காரர்களின் நிலை உயர்ந்தது. அந்நிய முதலீடு அதிகரித்தது.

மத்திய வர்க்கத்தினருக்குப் புதுப் புது தொழில்நுட்ப சாமான்கள் குறைந்த விலையில் கிடைத்தன. இந்தியா வல்லரசாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்கிற ஆனந்த கீதம் விடாமல் வாசிக்கபட்டது. ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு இந்த ஆனந்த கீதம் வெறும் நாடகம் என்பது நன்றாகத்தெரியும்.ஜி.டி.பி.க்கும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை. பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்திய அரசு, நலத்திட்டங்களில் எந்தளவு அக்கறை செலுத்தி இருக்கிறது, வெற்றுக்கோஷங்கள், இலவச கலர்களைத் தவிர. பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது உரையில் முதலாளிகள் புது பொருளாதார வளர்ச்சியில் அடித்தட்டு மக்களுக்குக் கொடுக்கவேண்டிய பங்கினைச் சரியாகக் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அட, அசட்டுப் பய புள்ள என்று தனி டிராக்கில் ஒரு குரல் எனக்குள் அப்போது கேட்டது.

உலகிலே அதிக படிப்பறிவற்ற மக்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.
குழந்தை இறப்பு சதவீதத்திலும் இந்தியாதான் நம்பர் ஒன். இங்கு பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஆரோக்கியமான உணவில்லாமல்தான் வாழ்கிறார்கள். இதை எல்லாம் விட முக்கியமான ஒரு பெரிய தடைக்கல் இருக்கிறது. அது நாளுக்கு நாள் இன்னும் வலுவாகி வரும் சாதி அமைப்பு. இன்னும் கிராமங்களில் தெருக்கள் ஒவ்வொன்றும் சாதிவாரியாகப் பிரிந்துதான் கிடக்கின்றன. உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் தங்கள் பகுதி பக்கம் வந்து விடக்கூடாது என்று சுவர் கட்டி வைத்த கொடுமையும், அதிலே மின்சாரம் பாய்ச்சிய அவலமும் நிகழ்ந்தது. எங்கள் தெய்வத்தை தொடும் தகுதி உனக்கு வந்து விட்டதா என மலம் சாப்பிட வைக்கும் வக்கிரம் இன்னும் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, சமூக மாற்றங்களைக் கூட இந்த சாதிய அடுக்கு கட்டுமானங்கள் அவ்வளவு எளிதில் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கத் தடையாக இருக்கின்றன.

பதினொன்றாவது திட்ட அறிக்கையின்படி இன்று இந்த நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியினை இந்தியா முழுக்க உள்ள அடித்தட்டு மக்களுக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் எடுத்துச் செல்வது ஓர் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இது மிக தாமதமான ஒரு மாற்றம். இது கோஷம் என்கிற அளவில் நின்று விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என சொல்கிறார்கள். இன்றைய முக்கால்பங்கு முதலீட்டாளர் சமூகமாய் மாறி இருக்கும் இந்தியாவில் அரசு தனது பலத்தை வெகுவாக இழந்து கொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் என்பது நாட்டிற்குப் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் பழையகாலத்து தவறான யோசனைகள் என்று இன்றைய பொருளாதார ஜீனியஸ்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அரசு என்பது வணிகன் அல்ல. ஆனால் வணிகங்களின் கை ஓங்கும் சூழலில் அடித்தட்டு மக்களும் விளிம்பு நிலை மனிதர்களும் இன்னும் அதிகமாய் பாதிக்கபடுவார்கள்.

சமூக அளவில் கல்வி இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். கிடைக்கும் கல்வியும் இன்னும் தரமேற்றப்பட வேண்டும். கல்வியும் மருத்துவமும் கொழுத்த லாபம் ஈட்டும் தொழில்களாக மாறிப் போன சூழலில் விளிம்பு நிலை மனிதர்கள் நிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. பண்டைய காலங்களில் நிலப்பிரபுக்கள் ஏழைகளுக்குக் கை நிறைய தானம் அளிப்பார்களாம். வாய் நிறைய வாழ்த்திச் சென்றனவாம் ஏழை உள்ளங்கள். இதுபோன்று இலவசங்கள், தானங்கள், தருமங்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவிடாது. சமூக, கலாச்சார, பொருளாதார அளவில் தொலைதூரப் பார்வையோடு அரசு மற்றும் அதிகாரங்கள், சரியான திட்டங்கள் மற்றும் அணுகுமுறையோடு செயல்பட்டால் மட்டுமே பதினொன்றாவது திட்டத்தின் இலக்கு சாத்தியம் ஆகும்.

ஆனால் அதற்கான பொறுமையும் நேர்மையும் இன்று இருக்கிறதா?
Thanks to Mr.Nizaar Ahamed.J (P.T.M)

நேருவின் பிடிவாதம்


நேருவின் பிடிவாதம்

தொடர்ந்தது நேருவின் பிடிவாதம்-----உடைந்தது ஒருங்கிணைந்த இந்தியா.

இன்று இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாடும் முஸ்லீம்கள் ஆதியிலிருந்தே வறுமையில் வாடுபவர்கள் அல்ல, மாறாக அந்நிய ஆக்ரமிப்பாளர்களாகிய ஆங்கிலேயர்களுக்கெதிராக ஆயுதப்புரட்சியில் ஈடுபட்டக் காரணத்தால் சினங்கொண்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து அபகரித்துக்கொண்டனர் இன்றளவும் முஸ்லீம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடுவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்று வரலாற்றாசிரியர் திவான் அவர்கள் *இந்திய சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் பங்கு* எனும் நூலில் குறிப்பிட்டிருந்ததையும், இன்றைய *ரங்கநாத் மிஸ்ரா அவர்கள்* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடும் முஸ்லீம்களின் வறிய நிலையை ஆய்வு செய்து அரசுக்கு அளித்த அறிக்கையையும் ஒப்பிட்டு கடந்த கட்டுரையில் எழுதி இருந்தோம்.

 ஆங்கிலேயர்களிடம் இழந்த உரிமைகளை இந்தியாவின் புதிய அரசிடமிருந்து அடைந்து கொள்ளலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் முஸ்லீம்கள். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. 1946ல் நடந்த தேர்தலில் அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் வெற்றிப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரமுடியாத நிலை ஏற்பட்டதால் ஜின்னா சாஹிப் அவர்கள் நேருவிடம் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லீம்களுக்கு போதுமான இடஓதுக்கீடு கேட்டார்.

 மஹாத்மா காந்தியின் வற்புருத்தலின் பேரில் ஒத்துக்கொண்ட நேரு அவர்கள், பட்டேல் போன்றவர்களின் தூண்டுதலினால் அதை நடைமுறைப்படுத்த மறுத்தார். நேருவின் பிடிவாதத்தையும் உள்நோக்கத்தையும் அறிந்த ஜின்னா சாஹிப் அவர்கள் வெள்ளையரால் நசுக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்துக் கொடுத்து எதிர்காலத்தில் வறுமையற்ற வாழ்வை உருவாக்க வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்கும் நிலைக்கு ஜின்னாசாஹிப் அவர்களுடன் முஸ்லீம் தலைவர்கள் தள்ளப்பட்டனர்.

*தொடர்ந்தது நேருவின் பிடிவாதம் அதனால் உடைந்தது ஒருங்கிணைந்த இந்தியா.* நேருவின் பிடிவாதத்தினால் முஸ்லீம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் பரிவினை உருவானது பிரிவினையின் போது ஏராளமான முஸ்லீம்கள் பாகிஸ்தானை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆதாரம்
http://www.flipkart.com/book/jinnah-jaswanth-singh-india-partition/8129115409
- மொத்த முஸ்லீம்களும் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றுவிட்டால்
இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய நேரு அவர்கள் இந்தியாவில் தங்கிக் கொள்ளும் முஸ்லீகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக மீண்டும் பொய்யான வாக்குறுதி ஒன்றை அறிவித்தார்.
 நீங்கள் உயிருக்கும் மேலாக நேசித்த இந்திய மண்ணில் தங்கி விடுங்கள், பிரிந்து செல்லாதீர்கள் என்று முஸ்லீம்களை நோக்கி உருக்கமாக காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானில் தங்கிவிட்ட சீக்கியர், மற்றும் ஹிந்துக்களை ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானியர்கள் கொன்று விட்டாலும் கூட இந்தியாவில் தங்கி விட்ட இஸ்லாமிய சிறு குழந்தையைக் கூட ஹிந்துக்களாகிய நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஹிந்துக்களை நோக்கியும் உருக்கமாக காந்தியடிகள் கேட்டுக் கொண்டார்.
நேரு அவர்களின் வாழ்வாதார வாக்குறுதியையும், காந்தியடிகள் அவர்களின் உயிருக்கு வழங்கிய வாக்குறுதியையும், நம்பிய முஸ்லீம்கள் இந்திய மண்ணை நேசித்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தனர்.

*இந்திய அரசியல் சாஸன சட்டம்* ஹிந்து, கிருஸ்தவ, சீக்கிய, முஸ்லீம் மதங்களையுடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டக் குழுவில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பனித்துக் கொண்ட அம்பேத்கர் போன்ற மாமேதைகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களால் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பையும், வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் வழிபாட்டுத் தலங்கள் சுதந்திரத்திற்கு முன்னுள்ள நிலைத் தொடரும் என்றும், எழுதி வைத்தனர். இதைக்கேட்டு சந்தோஷம் அடைந்த முஸ்லீம்கள் அதற்கடுத்து வரிசையாக நடந்த வெறுக்கத்தக்க நிகழ்வுகள் மூலமாக ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனைப் பட்டனர். -

இந்தியாவை நேசித்து இந்தியாவுடன் தங்கிக்கொள்ளும் இஸ்லாமிய சிறு
குழந்தைக்கும் கூட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றுக்கூறியதுடன், பாகிஸ்தானுக்கு  வாக்களித்த 55 கோடியை வாங்கிக் கொடுப்பதற்காக உண்ணா விரதம் இருந்த காந்தியடிகளை முஸ்லீம் வேடமிட்டு சுட்டு சாய்த்தான் கொடியவன் கோட்சே, காந்தியடிகளின் உடல் மண்ணில் சாய்ந்து அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்குள் எண்ணிலடங்காக அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்து காந்தியடிகளின் சவக்குழியில்
சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், மதச்சார்பின்மைiயும் சேர்த்தேப் புதைத்து விட்டனர்.  வாழ்வாதார உரிமைகளும், வழிப்பாட்டு உரிமைகளும் வழங்கப்படுவதாக வாக்களித்தப் பிரதமர் நேரு அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலை வைக்கப்பட்டு அரசியல் சாஸன சட்டத்தில் *வழிபாட்டுத் தலங்கள் சுதந்திரத்திற்கு முன்னுள்ள நிலைத் தொடரும் என்று எழதப்பட்ட மை காய்வதற்குள்* வரம்பு மீறி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை மண்ணில்  புதைத்தனர், பட்ட இடத்திலேயேப் படும் என்பது போல் வெள்ளையர்களால் பொருளாதாரத்தில் திட்டமிட்டு நசுக்கப்பட்ட முஸ்லீம்களை அதற்கடுத்து உருவான அரசும் நம்பிக்கை துரோகமிழைத்து கைவிட்டதால் இன்று இரண்டு ஆடைகளைக் கூட அடைய முடியாத நிலையிலும், ஒரு வேளை உணவுக்கு திண்டாடக் கூடிய நிலையிலும், நிலையான தங்குமிடமின்றியும், வெட்ட வெளியில் கழிப்பிடங்களை நோக்கி செல்பவர்களாகவும் தள்ளப்பட்டனர்.  

பொடா, தடா, போன்ற அனைத்து பயங்கரவாத தடுப்பு சட்டங்களும் ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாத அப்பாவி முஸ்லீம்களின் மீதே திட்டமிட்டு பாயச்செய்கின்றனர் கோட்சேயின் வாரிசுகள்.  ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாத அப்பாவிகளை தீவிரவாதிகள் என்ற முத்திரைகுத்தி என்கவுன்டரில் ஈவிறக்கமின்றி சுட்டுத் தள்ளுகின்றனர். வரி செலுத்துவது குடியுரிமையை நீட்டிப்பதற்கு பெறுவதற்கு மட்டுமே, இந்திய மண்ணில் விளையும் செல்வங்களை அனுபவிப்பதற்கல்ல. என்பதை வாழ்வாதார உரிமைகள், மற்றும் வழிபாட்டு உரிமைகள் நேருவில் தொடங்கி இன்றைய மன்மோகன்சிங் வரை மறுக்கப்டுவதன் மூலம் உணர்த்தி விட்டனர்.

 வாடகை செலுத்திக் கூட வாழ்ககை நடத்த வசதி இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் கோடிக் கணக்கான இந்தியக் குடிமக்கள் தவியாய் தவிக்கும் பொழுது கோடி, கோடியாக கொள்ளயடித்து கணக்கில் காட்ட முடியாத கருப்புப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் புதைக்க இடமில்லாமல் திரியும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பழைய மாமல்லபுரத்தில் *50** **ஏக்கர் நிலம்* ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றார் சிறுபான்மை காவலர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் நாம் வரி செலுத்தி இந்திய குடிமக்களாக இருந்தாலும் அகதிகள் போல் நடத்தப்படுவதை உணர்நத முஸ்லீம்கள் அந்நிய நாட்டில் பிழைப்புத் தேடுவதற்காக பாஸ்போட் எடுத்து டுபாகூர் ஏஜன்டுகளிடம் பணத்தைக்கட்டி அதில் கரை கடந்தவர்கள் சிலர், மூழ்கியவர் பலர்.  கரை கடந்தப் பலரின் நிலையோ இன்னும் அங்கே அந்தோப் பரிதாபம். கெந்தக பூமியின் சுட்டெக்கும் பாலை வெயிலில்

*ஆடு, மேய்ப்பவர்களாக,

* கட்டடம் கட்டுவதற்கு கற்களை சுமப்பவர்களாக,

* ரோடு கூட்டுபவர்களாக,

* சுமை தூக்கும் கூலிகளாக ,

* கார் கழுவுகின்றவர்களாக,

* கக்கூஸ் கழுவுகின்றவர்களாக,

* உணவகங்களில் டேபிள் துடைப்பவர்களாக, எச்சித் தட்டை     கழுவுகின்றவர்களாக,

* வீட்டு வேலைக்காரர்களாக,

* தோட்டக்காரர்களாக,

கால் நூற்றாண்டுகளைக்கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை அடைந்து தாயகம் திரும்புகினறனர்.  இதில் இன்னும் வேதனை என்னவென்றால் ? இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்புகின்ற பலருக்கு சொந்த வீடு இருக்காது. வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் கடமைகள் முடிவதில்லை. கப்பலுக்கு சென்றதால் கைநிறைய சம்பாதிக்கின்றான் என்ற கணிப்பில் கடன்காரன் கால்நூற்றாண்டுகளாக கரந்து கொண்டிருப்பான். ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் படிக்க முடியாதக் காரணத்தால் படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடிச் சென்று மேற்காணும் வேலைகளில் மிகவும் குறைந்த சம்பளத்தில் சேருவதால் லட்சக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை, குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் வாகன விபத்துக்கள் மூலமும், ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர். தலைமாட்டருகே நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக்கூட நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை. என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று வாளேந்தி போர் புரிந்து சுதந்திரம் பெற்றுந் தந்த வாரிசுகள் இன்று என்றுத் தனியும் எங்கள் வறுமை நிலை என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

Thanks to Mr.J.Nizar Ahamed (P.T.M)

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு


யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

  


 “யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை.ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.


கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர்.

அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

நன்றி : kalaiy.blogspot.com

முஸ்லிம் தீவிரவாதிகளும் -- காவி பயங்கர வாதிகளும்


முஸ்லிம் தீவிரவாதிகளும் -- காவி பயங்கர வாதிகளும்

நிழலும் நிஜமும் - வெ. ஜீவகிரிதரன் கட்டுரை

ஹைதராபாத் நகரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் - லஷ்கர் அமைப்பின் கைவரிசை என போலீஸ் சந்தேகம்  15-5-2010 சனிக்கிழமை ஹிந்து நாளிதழின் தலைப்பு செய்தி இது. நாட்டின் எந்த மூலையில் துப்பாக்கி வெடித்தாலும், வெடிகுண்டுகள் வெடித்தாலும், படுகொலைகள் நடந்தாலும் உடனே ஏதேனும் ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்.

பல ஆண்டு காலம் பிணை மறுக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே அந்த இளைஞர்கள் சிறைகளில் வாடுவார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, பழி பாவங்களைச் சுமந்து சீரழியும். ஐந்து வருடங்களோ, பத்து வருடங்களோ வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து தடா, பொடா என்ற பயங்கரவாத தடுப்பு சட்டங்களாலும் பதம் பார்க்கப்படும். ஊடகங்களும் தத்தம் ஊகங்களை செய்திகளால் வெளியிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். இறுதியில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போதுதான் தெரியும் கைதான இளைஞர்கள் நிரபராதிகள் என்று!

விடுதலை செய்யப்பட்ட பாவப்பட்ட அந்த இளைஞர்கள் தங்களின் இளமையை, குடும்பத்தை, வாழ்க்கையை இழந்த நிலையில் சிறையை விட்டு வெளிவரும் போது, ஊடகங்களால் ஹஅறிவ+ட்டப் பட்ட இச் சமுதாயம் அவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து, தப்பித்து வெளிவந்துள்ள பயங்கரவாதி களாகவே பார்க்கிறது. நீதிமன்றங்களால் நிரபராதி கள் என அறிவிக்கப்பட்டாலும் இச்சமுதாயம் அவர்களை புறக்கணித்து, தனிமைப்படுத்துவதன் மூலம் கழுவேற்றிக் கொன்று விடுகிறது.


 
உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் போல் இந்திய நாட்டை உலுக்கியது 26-11 மும்பை தாக்குதல். இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு, தாக்குதல் இலக்குகளை வரைபடங்களாக தந்துதவி செய்ததாக பஹீம் அன்சாரி மற்றும் சலாவுத்தீன் அஹமது அகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் போலீஸ் தரப்பில் காட்ட இயலவில்லை. நீதிமன்றம் அந்த இருவரையும் நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கேள்விக்குரியதாக்கிய மிகக் கொடூரமான மும்பை தாக்குதல் வழக்கில் கூட பாரபட்சமற்ற புலன் விசாரணை நடத்த போலீசால் இயலவில்லை. காரணம் ஏற்கனவே அவர்களின் மூளைக்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வு

டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 14 வருட காலம் சிறையில் வாடிய கஷ்மீரை சேர்ந்த சகோதரர்கள் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மும்பை வழக்கின் தீர்ப்பு சொல்லப்பட்ட நான்காம் நாள் நடந்தது. கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது செய்யப்பட்டிருந்த மவுலானா குலாம் யஹியா என்பவர் 4 வருடங்கள் சிறையில் வாடிய பின்னர் கடந்த சனவரி மாதம் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். டேராடூன் இந்திய ராணுவ அகாதமியை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இப்திகார் முல்லிக் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த சனவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். இப்திகார் முல்லிக் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். டேராடூனிலே பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருந்த மாணவன். லஷ்கர் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக் கப்பட்டதால் படிப்பை இழந்து, வாழ்க்கையை இழந்து, நிரபராதி என நீதிமன்றம் கூறினாலும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இன்று சிறை மீண்டிருக்கிறார்.

2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என கூறப்பட்டது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணம் எனக் கூறி கைது செய்யப்பட்ட 21முஸ்லிம் இளைஞர்கள் ஏறக்குறைய இரண்டு வருட சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதிகன் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்தியது காவி பயங்கரவாதிகள்தான் என சி.பி.ஐ. தற்போது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதல்கள் நடந்த உடனேயே வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹஹியுஜி - என்ற அமைப்பு தாக்குதலை நடத்தியதாக கூறி அஜ்மீரில் சில வங்கதேசத்தை சேர்ந்தவர் களை போலீஸ் கைது செய்தது. மராட்டிய, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து சில மவுலானாக்களையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், அவர்கள் அனைவருமே தற்போது நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006 மலேகான் குண்டுவெடிப்பு 2007 ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல் அஜ்மீர் குண்டுவெடிப்பு இவை அனைத்திலுமே தாக்குதல் நடந்த உடனேயே சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் போலீசாரால் சொல்லப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கை செய்யப்பட்டனர். அனைத்து ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதம் ,ஜிகாத் ,புனிதப்போர்,இந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று ஆகியவை குறித்து பட்டிமன்றங்களை நடத்தின.

முஸ்லிம்களின் வணக்கத் தலங்களை முஸ்லிம்களே தாக்க முடியுமா என்ற சந்தேகங்களை போக்கும் வகையில் வஹாபி, சூஃபி இடையிலான முரண்பாடுகளை முன்னிறுத்தினர். ஹைதராபாத் இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு நிஜாமுதீன் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்பது முஸ்லிம்களின் நோக்கம் என பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், இன்று இத் தாக்கு தல்களை முன்னின்று நடத்தியது காவி பயங்கர வாதிகளே என கண்டறியப்பட்டுள்ளது. 2006- ஏப்ரல் மாதம் நடந்த நான்டெட் குண்டு வெடிப்பு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவரின் வீட்டுக்குள் நடந்தது. புலன் விசாரணையில் அது பஜ்ரங்தள் தொடர்பானவர்கள் நடத்தியது என தெரிய வந்தது. அவர்கள்தான் பர்பானி, ஜல்னா மற்றும் ப+ர்ணா பள்ளிவாசல்களின் வெளியே நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என கண்டறியப்பட்டது. தென்காசியிலும், கான்பரிலும் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு உள்ளதை நாமே அறியும். ஹஅபினவ் பாரத் என்ற ஹகாவி பயங்கர வாத அமைப்பு நடத்திய செயல்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தியுள்ளார். சனாதன சனஸ்தா என்ற காவி பயங்கரவாத அமைப்பு கோவா, தானே மற்றும் பான்வெல் குண்டுவெடிப்பு களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திலும் இந்த காவி பயங்கரவாதிகள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதம் மராட்டிய மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், புனே குண்டுவெடிப்புக்கு இந்து அமைப்பு களே காரணம் என ஏ.டி.எஸ். (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) தலைவர் கூறுவாரேயானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ். தலைவர் கே.பி. ரகுவன்ஷி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பதவியிலே தற்போது குற்றப்பிரிவு தலைவரும், மும்பை 26ஃ11 தாக்குதல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியுமான ராகேஷ் மரியா அமர்த் தப்பட்டுள்ளார். இந்த ராகேஷ் மரியா என்பவர் திருட்டு வழக்கில் கைதான முஸ்லிம் ஒருவரை சோட்டா ஷகில் குழுவைச் சேர்ந்தவர் என்றும், மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர்களை கொல்ல அனுப்பப்பட்டவர் என்றும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி அதனால் மும்பை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளா னவர். இவர் தான் இனி புனே மலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளிலே புலன் விசாரணை நடத்துவார்.

முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களாக சித்தரித்து அவர்களின் மேல் தொடர்ச்சியாக பல்வேறு பொய் வழக்குகளை போடுவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயர் கெடுவதோடு மட்டுமல்லாமல் பிற சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுடனான முஸ்லிம்களின் உறவும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்பாவி மக்களைக் கொல்லும் கொலைகாரர்களாக இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர். சிறைகளில் இவர்கள் அடைக்கப்படும் போது அங்குள்ள மாற்று சமூகத்தைச் சார்ந்த கொலைக் குற்றவாளிகள் கூட இவர்களை ஒதுக்கியே வைக்கின்றனர். இவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும் கூட சமூகம் இவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களை மட்டுமல்ல இவர்கள் சார்ந்த சமுதாயத்தையே சந்தேகத்துடன் பார்க்கிறது. இவையெல்லாம் ஊடகங்களின் முழு ஆதரவுடனும், ஒத்துழைப்புடனே நடக்கிறது. 

காவிமயமாதல் என்பது சமூகப் புற்றுநோய். மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நாலாந்தர வியாபார ஊடகங்கள் இந் நோய்க் கிருமிகளை மிக லாவகமாகவும், வேகமாகவும் பரப்புகின்றன. போலீசும், அதிகாரவர்க்கமும் அதற்கு துணை நிற்கின்றன. முதல் பத்தியில் நான் குறிப்பிட்டுள்ள ஹிந்து நாளிதழின் தலைப்பு செய்தியே இதற்கு சான்று.

ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் நாளித‌ழ்

அஞ்சல்  : திரு.J .நிஸார் அஹமது (P .T .M )

உலக மொழிகள் ( World's Languages )


உலக மொழிகள் ( World's Languages )


 உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?

1. ஆங்கிலம் 2. ஸ்பானிஷ் 3. சீன மொழி 4. பிரெஞ்ச்...?

சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).

உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - ஆங்கிலம்? என்றால் இல்லை,

ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.

இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது. இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.

திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?

தெலுங்கு.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர். உலக அளவில் பதினைந்தாவது இடம்.

தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது. உலக அளவில் பதினெட்டாவது இடம்.

மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. உலகில் அளவில் முறையே 29-வது, 31-வது இடங்களில் இருக்கிறது.

சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை உலக அளவில் இடம்
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி 1
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி 16
மின் நான் (Min Nan) 4.9 கோடி 21
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி 22
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி 28
ஹக்கா (Hakka) 3.4 கோடி 30
கான் (Gan) 2.06 கோடி 45

இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.

குறிப்பு:
நாடுகளைப் பட்டியலிடும் போது 1%க்கும் குறைவாக அந்த மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும் இது ஒரு உத்தேசக் கணக்கீடு.

நன்றி : களஞ்சியம்