சனி, 17 டிசம்பர், 2011

இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை


இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை


இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை

நீண்ட தூரம் செல்லும்
என் கனவுகளின் மீது
இன்னும் பாரம் ஏறுகிறது
இலட்சியங்கள் தின்னும்
என்னுள் எதுவோ ஒன்று உடைய...

நீ மட்டும் தொலையாமல் பாரமாகி நிற்கிறாய்....
காலங்கள் கண்டு கொள்ளாமல் போன என்
கனவுகளில் உனக்கென்ன வேலை?
தொலைந்து போ........
இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை
__________________

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது.


எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது.


நூலகங்கள் உலகினை திறந்துவிடும் சாளரங்கள்.

இப்போ அடிக்கடி நூலகம் பற்றி கதைக்கப்படுவதாலோ என்னவோ, எனக்கு எனது பழைய கால நினைவுகள் வந்துவிட்டன.

எங்களூர் நூலகம்,

கல்கியில் இருந்து சாண்டில்யன் வரை தெனாலி தொடங்கி அப்புசாமி கிழவர் வரை எனக்கு அறிமுகம் செய்தது. எங்களூர் நூலகம்தான். தந்தையின் கை பிடித்து நூலகம் சென்ற போது 10 வயதுதான். அன்றிலிருந்து இன்று வரை எங்களூர் நூலகத்தின் மீது ஒரு தீராக்காதல். 

இப்போதும் விடுமுறைக்கு ஊர் செல்லுகின்ற ஒவ்வொரு தடவையும் அங்கு சென்றுதான் வருவேன்.

அன்று மூன்று அறைகளை கொண்ட ஒரு வீட்டில்தான் எங்களூர் நூலகம் இருந்தது. முன் மண்டபம் பத்திரிகைகள். ஒரு அறை இரவல் புத்தக அறை. மற்றையது உசாத்துணைப் பகுதி. எப்போதும் நிறைந்து வழியும் பத்திரிகைப்பகுதியினைத் தாண்டித்தான், மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 

அப்போதிருந்த நூலகர் ஒரு புத்தக பிரியர். நினைவு தெரிந்த நாட்களில் எப்போதும் அவரது கையில், கல்கியின் பொன்னியின் செல்வனோ, வியாச பாரதமோ இருக்கும். அவரது சிறிய கண்ணாடி அறைக்குள் எப்போதும் அதனோடே இருப்பது போல எனக்கு ஒரு பிரமை,

ஒவ்வொரு கால கட்டத்திலும் எங்களூர் நூலகம் எனக்கு வெவ்வேறு வர்சன்களாக பயன்பட்டன. ஆரம்பத்தில் சிறுவர் நூற்கள், வாண்டுமாமா நூற்களில் தொடங்கி ராணி காமிக்ஸ் வரை கிடையாய் கிடப்பேன். வருட இறுதிகளில் பழைய இதழ்களை விற்பனைக்கு வைப்பார்கள், கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கோகுலம், அம்புலிமாமா என வாங்கிவிடுவேன். அந்த உலகின் ரம்யங்கள் ரொம்ப அழகானவை.

அதைத்தாண்டி வந்த போது, பட்டப்படிப்பு பாடசாலைத் தேவைகள் அந்தந்த நூலகங்களில் நிறைவேறினாலும், மாலை நேரப் பொழுதை இனிமையாக்க எங்களூர் நூலகம்தான் எனக்கு துணை. குளம் சார்ந்த ஒரு பகுதியில் அமைவிடம் என்பதால் எப்போதும் ஒரு வித அமைதி சூழ்ந்திருக்கும். பழகிய முகங்கள். தொடர்ந்து வரும் நண்பர்கள் என வாசிகசாலையுடன் தொடர்புடையதாகவே சில நட்புக்களும் அமைந்துவிடும். 

தினசரி பத்திரிகைகளுக்கான கைப்பற்றல்களுக்கு நிறைய போட்டி நடக்கும். அன்றைய பத்திரிகை வந்தவுடன் முதன்முதலாக பிரிப்பதில் உள்ள ஒரு மகிழ்ச்சி… அது அனுபவித்தால்த்தான் தெரியும்.!

நூலகங்களின் நடைமுறைகள் அப்போதெல்லாம் மிக இறுக்கமாக எங்களூர் வாசிகசாலையில் பின்பற்றப்பட்டன. அமைதி!! என்பது எப்போதும் குடி கொண்ட ஒன்றாக இருக்கும். கதிரைகளைக் கூட இழுக்கத் தயங்கும் நண்பர்கள் கூட இருந்தனர். அதோடு , படித்த நூலகர், ஊழியர்கள் புத்தகங்களின் அருமை பற்றி அறிந்திருந்தனர்.

ஆனால், சென்ற முறை ஊரிற்கு சென்ற போது தவறாமல் செல்லும் எங்களூர் வாசிகசாலைக்கு சென்றேன். இப்போது இடம்மாறி மாநகராட்சி கட்டடத்தின் ஒரு மூலையில் தற்காலிகமாக இயங்கிக்கொண்டிருந்தது. மிக மெலிந்து போய்விட்டது. பழைய பார்த்து பழகிய முகங்கள் ஒன்றுமில்லை. ஒரு மீன் சந்தை போல எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தனர். நூலகனும் ( ர் போட மனதில்லை..) யாரோ ஒருவருடன் கதையளந்து கொண்டிருந்தான். 

புதிய ஊழியர்கள். எங்களூர் அரசியல் வாதியின் சிபாரிசில் நியமனம் பெற்றவர்களாம். அனைவரும் அவருக்காக அடிதடி அரசியல் செய்ததற்கு அவர் கொடுத்த பரிசு – நூலக உத்தியோகத்தர் பதவி! எவ்வளவு பாரிய முரண். நிச்சயமாக அனைவருக்கும், நூலகமும் நூற்களும் இங்குதான் அவர்களுக்கு அறிமுகமாயிருக்கும் என்பது எனக்கு உறுதி.

நிறைய நேரம் நிற்க முடியவில்லை. திரும்பிவிட்டேன்.

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது...

இனித்த பெருநாட்கள்


இனித்த பெருநாட்கள்


இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.


புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்


கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு, 
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் (museum)


உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் (museum)

1764 இல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 29,70,214 சேகரிப்புகள் உள்ளன. paintings - 6,851 works of graphic art - 6,22,172 sculptures - 12,623 works of applied art - 3,01,512 archeological objects - 7,38,389 numismatics - 11,32,627 other exhibit items -1,46,040
இந்த இணைப்பில் அருங்காட்சியகத்தின் விரிவைக் காணமுடிகின்றது. http://www.hermitagemuseum.org/html_En/08/hm88_0.html பார்வை நேரம் Tuesdays - Saturdays: 10.30-18.00 Sundays: 10.30 - 17.00 Closed Mondays குறிப்பு Ticket (400 rubles) windows shut one hour before the museum closes. Ticket (200 rubles) amateur photography and video. உபகுறிப்பு First Thursday of each month - free admission to the museum for all categories of individual visitors (for free tickets). அருங்காட்சியகத்தின் இணைய முகவரி http://www.hermitagemuseum.org/html_En/index.html * *

மைஉண்


மைஉண்

October 16th, 2011 § Leave a Comment
தெருவில் நடக்கும்போது
நன்றாக பாருங்கள்….
அதோ ஒரு நடக்க
முடியாத ஒருத்தர்
வியர்க்க வியர்க்க எங்கோ
செல்கிறார்….
சற்று தூரத்தில் அதோ
ஒரு பார்வையற்றவர்
ஊன்றுகோல் துணையுடன்
சென்று கொண்டிருக்கிறார்
நாம் கால்கள் இருந்தும்
சக்தியற்று இருக்கின்றோம்
அவரோ கால்கள் இல்லாவிட்டால்
என்ன, என் முன்னேற்றத்தை
யாராலும் தடுக்க முடியாது
என முன் செல்கிறார்
நாம் கண்கள் இருந்தும்
வெளிச்சம் தெரிந்தும்
இருளை தேடி செல்கிறோம்
அவரோ என் பார்வை தான்
இருளே தவிர என் வாழ்கை
அல்ல என முன்னேறி
செல்கிறார்.
தான் அழகில்லை, தனக்கு
திறமை இல்லை, தன்னால்
முடியாது, என நினைக்கும்
ஒவ்வொருவரும் உங்களை
நிலைகண்ணாடியில் பாருங்கள்
ஏனென்றால் கண்ணாடி
உண்மைதான் பேசும்….

அறையிருட்டு


அறையிருட்டு


எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை
காற்றின் உதவியுடன் புகையாக்கி
ஒளியை விழுங்கியது
அறையிருட்டு.
மனிதவிழிகள் கூட
தனது ஓட்டைகளை
பார்க்க முடியாதென
கர்வம் கொண்டது.
தனது சுயசொரூபத்தை
முழுக்க உணரும்
வேட்கையில்
சன்னலுக்கு
வெளியே படர்ந்திருந்த
பேரிருட்டின் அங்கமானது.
பேரிருட்டு விரியும் திசைக்கு
மாற்றுதிசையில்
பேரிருட்டுப்பாதையினூடே
விரைந்து பறந்தது.
+++++
சில ஆயிரம் மைல்கள் தூரத்தில்
பேரிருட்டின் எல்லை முடிந்தது.
எலலையற்ற தன்மையை
அனுபவமாய் உணரும் பேரார்வத்தில்
சூரியவொளி ஆக்கிரமித்திருந்த
நிலப்பரப்பில் நுழைந்தவுடன்
அறையிருட்டின் ஒருபகுதி
பஸ்மமானது.
வந்த வழி உடன் திரும்பி
பேரிருட்டின் பாதையூடெ
அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில்,
சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி
பேரிருட்டுடன் சேர்ந்து
அறையிருட்டு கரைந்துபோனது.
+++++
பேரிருட்டின் ஆவியுடல்
சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே
அறையிருட்டின் ஆவியுடலும்
அகதியானது.
பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின்
மீண்டும் உயிர்க்கும் போது
அறையிருட்டையும் உயிர்ப்பித்து
அதன் அறையில் சேர்த்துவிடுவதாக
பேரிருட்டு வாக்களித்தது.

யுகங்கள் கடந்தது


யுகங்கள் கடந்தது

முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.

யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்

தளும்பி நின்ற
பேரமைதி கணமிது

எமதுலகில் சூரியனும் இல்லை


எமதுலகில் சூரியனும் இல்லை


 
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட


- ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

நிழல் விமானம்


நிழல் விமானம்

 
 
வெண் திரைத்துனியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
 
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
 
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று  நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம். 

தரக்குடும்பம்


தரக்குடும்பம்



இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்...

இருளில் உருளும் மனம்


10.12.11

இருளில் உருளும் மனம்



இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

வெளிச்சம்


வெளிச்சம்


அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

தூக்கம்


தூக்கம்





இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்

பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்

சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்

பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை

உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.