| ||||||||||||
புதிய மடி
கிடைத்தது புகுந்தோடி தவழ்ந்தேன்; உயரமான தோள்கள் கிடைத்தது உலகை ஏறிப் பார்த்தேன்; பாச விரல்கள் கிடைத்தது பற்றிக்கொண்டேன் பயமின்றி; பைசா காசுகள் கிடைத்தது பையுடன் செலவழித்தேன்; விழாகாலத்தில் சொக்காய் கிடைத்தது விடியவிடிய போட்டுக் கொண்டேன்; பணவாசனையால் சீட்டுகிடைத்தது படித்துப் பட்டம் வாங்கினேன்; வேலைக்கு தேவை வந்தது வெளிநாட்டு குழுமத்தில் சேர்ந்தேன்; மணவறை யோகம் வந்தது மணாலனாக மாலையிட்டேன்; பாசம் வசதிக்கு இடர்தந்தது பணம்கட்டி முதியோரில்லத்தில்விட்டேன்; எனக்கென்று புதுவுறவுகிடைத்தது உத்தமப்புத்திரனுக்கு தந்தையானேன்; அவனுக்கும் பாசம் இடருதோ? தாத்தாப்பாட்டியின் காப்பக முகவரிக் கேட்கிறான். |
புதன், 14 டிசம்பர், 2011
கவிதை : என்னைப் போல ஒருவன்
அலைகள் காத்திருக்கும்...
அலைகள் காத்திருக்கும்...
எழுத்து / வகை : நாகராஜன் அமர்தலிங்கம்
பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை
உதிர்ந்த வண்ணம், ஒரு சிறகுடன்
மீண்டும் தேடி மீட்ட போது
பூச்சி சொன்னது "நொண்டுவது
நான் மட்டுமல்ல
காலத்தில் கரைந்து போகும் நீயும் தான்,
நொண்டினாலும்,பாடி பறந்து திரிவேன்
நான் "
என்ற பூச்சியை பார்த்து சொன்னென்
"நான் மானுடன்-Man can be destroyed ,but not
deafeted."
13.12.11
காதல் கவிதைகள்
எழுத்து / வகை : சின்னப்பயல்
கொஞ்சம்
காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என
பதிப்பாளர்
என்னிடம்
கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும்
என் கனவில்
வந்து போக
விருப்பமா ?
ஏற்கனவே
பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும்
உங்கள் நினைவுகளும்
என் காதல்
கவிதைகளில்
நிச்சயம்
இடம்பெறும்
என்பது
உறுதி.
என் கனவுகளில்
என்றும்
நிலைத்திருக்க
வேண்டிவரும்
என்று
அஞ்சத்தேவையில்லை.
அச்சில்
வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள்
தேறும் வரையே
உங்களின்
நினைவுகள்
எனக்குத்
தேவைப்படும்
நான்
உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து
என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான்
விழித்திருக்கும் நேரம்
நுழைய
நேர்ந்தால்
எப்போதும்
அழியாமல்
தங்கிவிட
வாய்ப்புண்டு.
தூக்கம்
எழுத்து / வகை : அழகியசிங்கர்
இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்
பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்
சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்
பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை
உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.
எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..
எழுத்து / வகை : இளங்கோ
*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது
வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய்
உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு
சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக்
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது
10.12.11
வெளிச்சம்
எழுத்து / வகை : தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே
இஸுரு சாமர சோமவீர
இருளில் உருளும் மனம்
எழுத்து / வகை : குமரி எஸ். நீலகண்டன்
இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது.
இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.
தரக்குடும்பம்
எழுத்து / வகை : ந.பெரியசாமி
இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்...
நிழல் விமானம்
எழுத்து / வகை : கணேஷ்
வெண் திரைத்துனியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.
8.12.11
எமதுலகில் சூரியனும் இல்லை
எழுத்து / வகை : இலங்கை, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட
- ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே
யுகங்கள் கடந்தது
எழுத்து / வகை : ரவிஉதயன்
முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.
யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்
தளும்பி நின்ற
பேரமைதி கணமிது
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.
யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்
தளும்பி நின்ற
பேரமைதி கணமிது
28.11.11
அறையிருட்டு
எழுத்து / வகை : கணேஷ்
எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி
சுடரை
காற்றின் உதவியுடன்
புகையாக்கி
ஒளியை
விழுங்கியது
அறையிருட்டு.
மனிதவிழிகள்
கூட
தனது
ஓட்டைகளை
பார்க்க
முடியாதென
கர்வம்
கொண்டது.
தனது
சுயசொரூபத்தை
முழுக்க
உணரும்
வேட்கையில்
சன்னலுக்கு
வெளியே படர்ந்திருந்த
பேரிருட்டின்
அங்கமானது.
பேரிருட்டு விரியும்
திசைக்கு
மாற்றுதிசையில்
பேரிருட்டுப்பாதையினூடே
விரைந்து
பறந்தது.
+++++
சில ஆயிரம் மைல்கள் தூரத்தில்
பேரிருட்டின் எல்லை
முடிந்தது.
எலலையற்ற
தன்மையை
அனுபவமாய் உணரும்
பேரார்வத்தில்
சூரியவொளி
ஆக்கிரமித்திருந்த
நிலப்பரப்பில்
நுழைந்தவுடன்
அறையிருட்டின்
ஒருபகுதி
பஸ்மமானது.
வந்த வழி உடன்
திரும்பி
பேரிருட்டின்
பாதையூடெ
அறைக்கு மீண்டு வர
எத்தனிக்கையில்,
சூரியவொளியின் நீளும்
கரங்களில் சிக்கி
பேரிருட்டுடன்
சேர்ந்து
அறையிருட்டு
கரைந்துபோனது.
+++++
பேரிருட்டின்
ஆவியுடல்
சரண் புகுந்த ஏதொவோர்
இடத்தினிலேயே
அறையிருட்டின்
ஆவியுடலும்
அகதியானது.
பேரொளியின் ஆட்சி
ஒய்ந்தபின்
மீண்டும் உயிர்க்கும்
போது
அறையிருட்டையும்
உயிர்ப்பித்து
அதன் அறையில்
சேர்த்துவிடுவதாக
பேரிருட்டு
வாக்களித்தது.
26.11.11
எதையாவது சொல்லட்டுமா.........62
எழுத்து / வகை : அழகியசிங்கர்
சமீபத்தில் நான் ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.
அவர் பெயர் ரவி. என் சிறிய நோட் புத்தகத்தில் ரவி என்று பெயரிட்டு எழுதியிருந்த
தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து போன் செய்தேன். ரவிதான் எடுத்தார். ஆனால் நான்
எதிர்பார்த்த ரவி அல்ல அவர்.
உண்மையில் நான் பேசவே நினைக்காத ரவிதான் அவர்.
''நான் ரவி பேசுகிறேன்,'' என்றவுடன். ஐய்யயோ
தவறு செய்துவிட்டோ மே என்று தோன்றியது. பின் சமாளித்தேன்.
''எப்படிம்மா இருக்கே?'' என்றேன்.
''நல்லாயிருக்கேன்..''
''பெண்ணெல்லாம் செளக்கியமா?''
''ம்..ம்--''
''பூனா போவதுண்டா?''
''ம்...ம்.. சரி, நான் அப்புறம் பேசறேன்...'' என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது. உண்மையிலேயே நான் பேச விரும்பாத ரவிதான் அவர். தெரியாமல் பேச்சைத் துவங்கினாலும், பின் ஏன் அவர் துண்டித்துவிட்டார். அவருக்கும் என்னுடன் பேசுவதில் ஒருவித சலிப்பு உண்டாயிருக்கும்.
வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே வங்கியில் இருவரும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர்கள். அவர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வார். பின் அதைப் பற்றி பிரமாதப்படுத்திப் பேசுவார். எனக்கு அதுமாதிரி பேச வராது. நான் அவரிடம் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றைப் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்தப்பிறகு ஐயப்பன் கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். நான் படிப்பதோ வேறு. என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். அந்த ரவி காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு தில்லியில் போய் இருந்தார். பின் வேலையை விட்டுப் போய்விட்டார். லீகல் தொழிலிக்குப் போய்விட்டார். ஒருமுறை அவர் எனக்குப் போன் செய்து அவர் பெண் திருமணத்திற்கு என்னை அழைத்தார். அந்தத் திருமணத்திற்கு சுவாமி மலைக்குச் சென்றேன். அத்துடன் நின்றுவிட்டது எங்கள் நட்பு. நாங்கள் பார்ப்பதே இல்லை. பேசுவது என்பது இல்லவே இல்லை. ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய நட்பு ஏன் நின்றுவிட்டது. வயது ஒரு காரணமா?
வயதாக ஆக நம்முடன் பேசுபவர்களுக்கும் வயதாகிக்கொண்டே போகும். பின் பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து போய்விடும். யாரும் நட்புடன் தொடர்ந்து இருக்க மாட்டார்கள். ஒருமுறை Driveinல் பிரமிளைச் சந்தித்தேன். அவர் யாரோ சிலருடன் டீ அருந்தி கொண்டிருந்தார். பின் என்னைப் பார்த்தவுடன் என்னைக் கூப்பிட்டார்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபிறகு அவர்
சொன்னார் : ''அமெரிக்காவிலெல்லாம் இப்பப் பேச்சுத் துணைக்குக்கூட பைசா கொடுத்தா ஒரு
மணி நேரம், இரண்டு மணிநேரம் என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள்,''
என்றார்.
அவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகத்திற்கு
வருகிறது. ஒரு காலத்தில் Intensive ஆக இருந்த நட்பு என்பது நீர்த்துப்
போய்விட்டது. யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில்லை. பேசுவதில்லை. அப்படியே
பார்த்தாலும் பேசினாலும் ஏதாவது சில வார்த்தைகள்தான் தேறும். உண்மையில் உறவினர்
வட்டம் காணாமல் போய்விட்டது. நட்பு வட்டம்கூட நீர்த்துப் போய்விட்டது.
அலுவலகத்தில் பழகியவர்களெல்லாம் அலுவலகத்தோடு
நின்று விடுவார்கள். அப்புறம் என்ன? நாம் யார்? நாம் தனி ஆளா? அல்லது ஆள்கூட
இல்லையா?
பட்டியல்
எழுத்து / வகை : ப.மதியழகன்
பாதையில் கிடந்த
கருவேல முள்ளை
ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன்
புட்டத்தை வாலால் மறைத்தபடி
ஒரு நாய்
என்னைக் கடந்து செல்கிறது
மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது
இனி எந்த மரக்கிளையில்
கிளிகள் வந்தமரும்
மேகங்கள் எங்கே சென்றன
நடவு செய்பவர்களை
வெயிலில் காயவிட்டு
மாடுகள் தின்பதற்காகவாவது
உதவட்டும்
இந்த சுவரொட்டிகள்
அக்கரைக்கு நீந்திச் செல்ல
நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால்
போதாது
எப்போதாவது செல்லும்
விமானத்தை
வேடிக்கைப் பார்க்க
சொல்லியாத் தரவேண்டும்
காலம் முடிந்து
குருக்கள் கிளம்பிவிட்டார்
சாமி எங்கே போகும்.
பயம்
எழுத்து / வகை : சின்னப்பயல்
திருவிழா
விடுமுறையின்
கடைசி நாள்
இரவில்
வரும் அடுத்த
நாள்
பள்ளிக்கூடப்பயமும்,
ஞாயிறு இரவு
சினிமாவின்போது
வரும்
அடுத்த
நாள்
அலுவல்
பயமும்
ஒன்றாகத்தான்
தோணுகிறது.
மௌனங்களை இழைப் பிரித்துத் தொங்கும் நிறம்..
எழுத்து / வகை : இளங்கோ
மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்
மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்துக்கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன
அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்
காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்
******
23.11.11
கவிதை
எழுத்து / வகை : சின்னப்பயல்
அடித்து,
திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை
முறுக்கி,
மடக்கி,
நீட்டி,
வைத்து,
எடுத்து
சரி செய்து
கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என்
கவிதைகளை
22.11.11
குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்
எழுத்து / வகை : முத்துசாமி பழனியப்பன்
பாப்புக்குட்டி
-
சிரிக்குது
அழுகுது
கை
கால்களை ஆட்டுது
குப்புற
விழுது
சலவாய்
ஒழுக்குது
ங்கா
ங்கூ ஆ பேசுது
விரல்
சப்புது
வெறிக்க
வெறிக்கப் பாக்குது
தூங்குது
சுற்றிக்
கிடக்கும் பொம்மைகள்
குழந்தையை
விட்டு எங்கும் போவதில்லை
கனவென்று தெரிந்திருந்தால்
எழுத்து / வகை : ப.மதியழகன்
கிணற்று நீரில்
நிலா பார்ப்போம்
தண்ணீர் உனைப் பருகி
தாகம் தீர்க்கும்
குழலோசை
செவியினில் இனிக்கும்
கண்களுக்கு நீ எதிரில் வருவது
மிகவும் பிடிக்கும்
மரத்திலிருந்து விழுந்த
பழுத்த இலையொன்று
உன் மீது உரசியதால்
தீப்பற்றி எரியும்
வீதியில் நீ
நடந்து வந்தால்
வெண்மேகம் குடைபிடிக்கும்
வரம் கொடுக்கிறேன் என்று
கடவுள் நேற்று
உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே
கல்லூரியில் நீ
வரலாறு படித்தாய்
தெருவெல்லாம் நானல்லவா
மரம் நட வேண்டியிருக்கிறது.
19.11.11
பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...31
எழுத்து / வகை : தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்
கணேஷ்
பூனைகள் ஜாக்கிரதை
அடுப்பில் பால் கொதிக்கிறது.
அது கொதிக்கும் சத்தம் கேட்காமல்
தொலைக்காட்சிக்குள் என்னை
அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது.
சமையலறையில் பாலாறு.
தொலைக்காட்சியின் கைதியாய்
தொடர்ந்து இருந்தேன்.
வீடு திரும்பிய மனைவி
சமையலறை பார்த்தவுடன்
ஆனந்த கூக்குரலிட்டாள்.
துடைத்து விட்டார் போல சமையலறை.
பூனையொன்று பாலாற்றை குடித்து
தரையை சுத்தம் செய்துவிட்டது.
சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி
பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.
என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.
என்னை விட்டுவிடும்படி தொலைக்காட்சி யை கேட்டேன்
பதில் கிடைக்கவில்லை.
மின்சார வெட்டு !
பூனைகள் என் வாழ்வை சூறையாடுவதை எங்ஙனம் தடுப்பது?
மின்சார வாரியத்துக்கு
யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் !
ஆறரை மணி செய்திகள் முடிந்தால்தான்
தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.
காதல் திசை
எழுத்து / வகை : சின்னப்பயல்
வலமிருந்து
இடம் தான்
தமிழும்
இன்னபிற மொழிகளும்
எழுத
வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
க
த்
தா
ன்
சைனீஸ் எழுத
வேண்டும்,
ன்தாம்லவ
துந்ருமிடஇ
அராபிக் எழுத
வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான்
எந்தத்திசையில்
எழுத வேண்டும்
?!
-
முகம்
எழுத்து / வகை : ந.பெரியசாமி
ஊரின் முகத்தை தீர்மானிக்க
அலையத் துவங்கினேன்
மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும்
கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும்
வடக்கிருந்து வர தெற்கும்
தெற்கிருந்து இறங்க வடக்குமென
எதிரெதிர் துருவங்கள்
முகப்பாய் மாற்றம்கொள்ள
தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன்
நிலைக்கண்ணாடி
ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை...
எதிர் விளையாட்டு
எழுத்து / வகை : செல்வராஜ் ஜெகதீசன்
இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும்
ஒரு
விளையாட்டின்
பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.
‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க
வேண்டும்
உட்கார் என்றால் எழ
வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார
வேண்டும்.’
அனேகமாய் எல்லா
நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய்
அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக்
கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே
போனேன்.
அடுத்த நாள் வந்த ஸ்கூல்
டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
'பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே
இருக்கிறான்’
என்று.
பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..
எழுத்து / வகை : இளங்கோ
*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்
விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில்
தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்
தன் பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்
******
18.11.11
சாலை விதி
எழுத்து / வகை : குமரி எஸ். நீலகண்டன்
ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.
வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.
இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.
உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.
ழ 5வது இதழ்
எழுத்து / வகை : பிரம்மராஜன்
இப்பொழுது
கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்
காற்றைப்போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது
உடனே புதிய ஊற்றுக்களின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறுவிரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்
மாற்று புதியதொன்றை மணத்துடன்
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு
பார்வை விரிய பாதை வளரட்டும்
முன்பே ஒன்றிருந்தால் -
உடைத்த கைகள், உளி,
கல்துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்
சக்கரம், நெரிசல்,
மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண்முன்
எப்பொழுதும் தா.
(டிசம்பர் 1978 ஜனவரி 1979)
17.11.11
நிலைப்பாடு
எழுத்து / வகை : பிரம்மராஜன்
ழ 5வது இதழ்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
பசிக்கொண்டு நிதம் செல்லும்
பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும்
சாலை மரங்கள் சற்றே
உறங்கிப் போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பு
நினைவுக்குள் புகை மூட்டும்
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளைபிடித்து
குடையெனப் பாவனை செய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக்கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாட்கள் கழியும்
வேர்கொள்ளாக் கால்கள்
பகற்கானலில் சாம்பலாகும்
கட்டிடங்களுக்கப்பால்
நீலத்தொடுவானம் தேடிச்செல்ல
வழிமரங்கள் தாம்பெற்ற
ராகங்களின் நிரந்தரமறியாது
உடல் சிலிர்த்துப் பாதையை
நிறைக்கும்
கந்தல் நிழல் கண்டு
16.11.11
பல்லி
எழுத்து / வகை : அழகியசிங்கர்
பாத்ரூமில்
ஒரு பல்லி எதிர்ப்பட்டது
குட்டிப் பல்லி
துண்டை எடுத்துக்கொண்டு
போன எனக்கு
அதன்மீது அருவெறுப்பு
நான் அதையே
பார்த்துக்கொண்டிருக்க
அது
இங்கும் அங்கும்
தலைதெறிக்க ஓடியது
வேடிக்கை என்னவென்றால்
அது என்மீது
விழுந்துவிடப் போகிறதென்று
நடுங்கிக் கொண்டிருந்தேன்
என் பயத்தின்
எதிரொலியாய் அது
ஓடி ஓடிப் போனது
குட்டி பாத்ரூமில்
அதன் எல்லை
பரந்து விரிந்திருக்கிறது
என் எல்லை
குறுகலாகத் தெரிகிறது
15.11.11
உன்மத்தம்
எழுத்து / வகை : ப.மதியழகன்
கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.
14.11.11
அழகன்
எழுத்து / வகை : ராமலக்ஷ்மி
அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்
ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின
தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது
தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை
கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்
இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்
நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று
பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்
நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை
அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.
12.11.11
எதையாவது சொல்லட்டுமா.........61
எழுத்து / வகை : அழகியசிங்கர்
சமீபத்தில் நான் இரண்டு விழாக்களுக்குச்
செல்லும்படி நேரிட்டது. இரண்டுமே எனக்குத் தெரிந்து நெருங்கிய உறவினர் வீடுகளில்
நடந்த விழா. விழா என்பதை விட விருந்து என்று சொல்லலாமா என்பது எனக்குத்
தெரியவில்லை. இரண்டு குடும்பத்தினரும் பத்திரிகை அனுப்பி அழைத்திருந்தார்கள்.
முதல் அழைப்பு ஒரு கல்யாண அழைப்பிதழ். நங்கநல்லூரிலுள்ள ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய
ஹாலில் நடைப்பெற்றது. கல்யாண சத்திரம் அமர்களமாக இருந்தது. நான் சீர்காழி
ரிட்டர்ன் என்பதால், மாலை வேளையில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த இடமே
அமர்களப்பட்டது. பெண் வீட்டார் அதிகமாக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
லைட் மியூசிக் வேறு. சத்தம் அலறியது. விதவிதமா உணவு வகைகள் மாடியில்
பரமாறிக்கொண்டிருந்தார்கள். நினைத்தபோது காப்பிகளும், குளீர் பானங்கள்
வினியோகப்பட்டிருந்தன. கூட்டத்தில் யாரையும் யாரும் பார்க்கக்கூட முடியாது
போலிருந்தது. அப்போதுதான் அந்த உறவினர் சில தினங்களுக்குமுன் எனக்கு போன் செய்தது
ஞாபகத்திற்கு வந்தது.
நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குமுன் என் பெண்
திருமணத்தை நடத்தியிருந்தேன். அப்போது வந்திருந்த அதே சமையல்காரர்தான் உறவினர்
கல்யாணத்திற்கும்.
உறவினர் கேட்டார் : ''உங்கள் பெண்
திருமணத்தின்போது, சாப்பாட்டிற்கு எவ்வளவு ஆயிற்று?'' என்று.
நான்,''ரூ11/2 லட்சம்,'' என்றேன்.
அவர் சொன்னார் : ''இப்போது 5 லட்சம்,''
என்று.
கேட்கும்போது திகைப்பாக இருந்தது. பின் கல்யாண
சத்திரத்தின் வாடகை என்றெல்லாம் உறவினருக்கு ரூ.30 லட்சம் வரை செலவு
இருந்திருக்கும்.
அன்று இரவு நான் ரயில் பிடித்து சீர்காழி
வந்தபோது, என் வயிறு சரியாயில்லை. சரியாக சில நாட்கள் ஆயிற்று.
இன்னொரு உறவினர் விழாவிற்கு நான் போகாமல் இருக்க
முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு சத்திரத்தில் இந்த விழா. வளைகாப்பு, சீம்மந்த
விழா இது. ஒரு நாள் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றார்கள். எனக்கு அங்குதான்
உதைத்தது. சத்திரத்தில் படுத்தால் தூக்கம் வராது. 'எதாவது ஓட்டலில் அறை இருந்தால்
தங்குகிறேன்,' என்றேன். ஆனால் இறுதியில் என் முடிவை மாற்றிக்கொண்டது தப்பாகப்
போய்விட்டது.
மாடியில் உள்ள அறை ஒன்றில் நான் தங்க ஏற்பாடு
செய்தார்கள். அறை முழுவதும் தூசியாக இருந்தது. அறைக் கதவை உள்ளே சாத்திக்கொண்டு
படுத்துக்கொள்ள முடியவில்லை. பின் அறையில் உள்ள பாத்ரூம் மோசத்திலும் மோசமாக
இருந்தது. அங்கும் கதவு இல்லை. சத்திரம் முழுவதும் உள்ள எல்லா பாத்ரூம்களும்
சரியில்லாமல் இருந்தது. சீமந்தம் என்பதால் கூட்டம் குறைவு. மேலும் மழை.
சென்னையிலிருந்து வரவேண்டிய உறவினர்கள் வரவில்லை. பெண் வீட்டிலும் சரி, பிள்ளை
வீட்டிலும் சரி கூட்டம் இல்லை.
அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை
என்பதோடல்லாமல், அடுத்தநாளிலும் என் உடலில் அதிர்வு ஏற்பட்டது. ஆனால் மன்னார்குடி
பெரிய கோவிலில் உள்ள இராஜகோபால் சுவாமியை மிக நெருக்கமாக தரிசிக்க முடிந்தது.
இந்த இரண்டு விழாக்களிலிருந்து தெரிந்துகொள்வது
என்னவென்றால், முதல் திருமண வைபவம் மிகக் குறைவாக செலவை பலவலாறு குறைக்க
முயற்சிக்கலாம். இரண்டாவது சீமந்த விழாவை சத்திரத்தில் வைத்திருக்க வேண்டாம்.
வீட்டிலேயே மிகக் குறைவான செலவுடன் செய்து முடித்திருக்கலாம். பெண் வீட்டார்,
பிள்ளை வீட்டார் போதும். வீணான ஆடம்பரம் செலவை மட்டும் ஏற்படுத்தவில்லை கூடவே
கலந்துகொள்பவர்களையும் தொந்தரவு செய்து விடுகிறது.
பொம்மலாட்டம்
ப.மதியழகன்
சருகுகள் பாதையை
மூடியிருந்தன
பழுத்த இலைகள்
தன்னை விடுவிக்கும்
காற்றுக்காக காத்திருந்தன
மொட்டைப் பனைமரத்தில்
காகம் ஒன்று அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை உதிர்த்துச் சென்றது
வண்டுகளின வருகைக்காக
பூக்கள் தவம்கிடந்தன
திருட்டுக் கொடுக்க
என்னிடம் காலணிகள்
மட்டுமே இருந்தன
அருவியில் குளிக்கிறார்கள்
பணப் பித்து பிடித்தவர்கள்
இல்லை என்பவர்கள் மீது
ஒளிக்கிரணங்கள் படுவதில்லை
உண்டு என்பவர்கள் வீட்டில்
தீபங்கள் அணைவதில்லை
பொம்மலாட்ட பொம்மைகள்
எது செய்தாலும் தவறில்லை
ஆட்டுவிப்பவன் கைகளுக்கு
எது சரி எது தவறென்று
தெரியவில்லை.
மகனின் தீபாவளி
சோமா
பொட்டடுப்பில் வெந்நீர் வைத்து
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்கப்படவே இல்லை.
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்கப்படவே இல்லை.
10.11.11
மெட்டமார்ஃபஸிஸ்
எழுத்து / வகை : சின்னப்பயல்
எனக்கே
தெரியாமல்
எனது அறைக்குள்
ஒரு பச்சோந்தி
நுழைந்து
விட்டது,
என்னிடம்
அனுமதி கேட்கவுமில்லை
அதை அது
எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட
பெரும்பாடாயிற்று.
சில நாட்கள்
கழித்து
பின்னர்
அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும்
நுழைந்து விட்டது,
சரி
பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும்
என்று
எனக்குள்
மகிழ்ந்து கொண்டேன்
சில நாட்களாக
பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும்
உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால்
காண நேர்ந்தது.
சரி உண்டு
விட்டது என்று
நினைத்து
மகிழ்ந்த போது
பாம்பின் நிறம்
மாறிக்கொண்டே வந்து
மீண்டும்
பச்சோந்தியாகி விட்டது.
இப்போது
பச்சோந்தியிடம்
பாம்பாக
மாறும்
வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு
செய்யாதீர்கள்.
9.11.11
அக்கறை/ரையை யாசிப்பவள்
எழுத்து / வகை : எம்.ரிஷான் ஷெரீப்
அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்
6.11.11
பறவைகளின் திசை
எழுத்து / வகை : சின்னப்பயல்
அன்று
அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண்
பறவைகள்
திரும்பத்திரும்ப
முன்னும்
பின்னுமாகப்பறந்து
கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக
தெளிவாகத்தெரிந்தன
நானும் பல
தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த
தெருக்களில்
சுற்றிக்கொண்டு
எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே
அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது
எனக்கொன்றும்
புரியவில்லை
எப்போதும்
அம்மா சொல்வாள்
அவை என்றும்
திசை அறியக்கூடியவை
ஆதலால்
ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை
என்று
மேலும் அவை
நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை
என்றும்
கடல்
கடந்தும்
பறக்கக்கூடியவை
என்றும்
அம்மா
சொல்லக்கேட்டிருக்கிறேன்
அன்று நள்ளிரவு
கடந்தும்
நானும்
அம்மாவும்
வீட்டு
வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற
வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த
கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன்
முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.
-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)