திங்கள், 9 ஜனவரி, 2012

வரலாறு - தோழியர்


தோழியர் - 3 print Email
வரலாறு - தோழியர்
வியாழன், 08 டிசம்பர் 2011 10:59
அஃப்ரா பின்த் உபைத்
عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية
பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில் பரவிக் கிடந்தன. குரைஷியர்களில் இறந்தவர்கள்,  சிறைபிடிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் ஓடிப்போயிருந்தார்கள். அயோக்கியன் அபூஜஹ்லு என்ன ஆனான் என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். “அபூஜஹ்லு என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?”
உடனே கிளம்பி ஓடினார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு. சடலங்களுக்கு இடையே தேட, குற்றுயிராகக் கிடந்தான் அபூஜஹ்லு. அவன் மேல் ஏறி அமர்ந்த இப்னு மஸ்ஊத், அவன் தலையைக் கொய்ய, அவனது கதைக்கு பெரியதொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அபூஜஹ்லின் மரணம் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான செய்தி. அவர்களுக்குள் உற்சாகம் தொற்ற வைத்த நிகழ்வு. குரைஷித் தலைவர்களில் ஒருவனான, வலிமையான, அபூஜஹ்லை அந்தப் போரில் வீழ்த்திச் சாய்த்து, உருக்குலைத்தது யார் என்று முஸ்லிம்கள் விசாரிக்க,
“இரண்டு இளைஞர்களாம்; சகோதரர்களாம்” என்று விவரம் தெரிய வந்தது.
“யார் அவர்கள்?”
“முஆத், முஅவ்வித். அஃப்ராவின் மகன்களுள் இருவர்.”
oOo
முஆத், முஅவ்வித் மட்டுமின்றி அந்தச் சகோதரர்கள் அனைவருமே அவர்களின் தாயார் அஃப்ராவின் பெயரால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது இங்கு ஒரு சுவையான தகவல். இன்னாரின் மகன் இன்னார் என்று தந்தையின் பெயரைக்கொண்டே அமைவது அரபு குல வழக்கம். இந்தச் சகோதரர்களுக்கு மட்டும் விலக்காய் அந்தச் சிறப்பு அமைந்தது,
‘எப்பேறு பெற்றாள் இத்தாய்’ !
நபியவர்களிடம் அஃப்ரா கேட்ட ஒற்றைக்கேள்வி அப்படித்தான் சிந்திக்க வைக்கிறது.
அஃப்ரா பின்த் உபைத் மதீனாவைச் சேர்ந்தவர். மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தின் நஜ்ஜார் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாரித் இப்னு ரிஃபாஆ என்பவருடன் இவருக்கு முதல் திருமணம் நிகழ்வுற்றது. இந்தத் தம்பதியருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர் - முஆத், முஅவ்வித், அவ்ஃப். இந்த மூன்று சகோதரர்களுமே முஆத் இப்னு அஃப்ரா, முஅவ்வித் இப்னு அஃப்ரா, அவ்ஃப் இப்னு அஃப்ரா என்றே தாயின் பேறு ('குன்னியத்') பெயரால் அறியப்பட்டிருக்கிறார்கள்.
பின்னர் அல்-ஹாரிதிடம் மணவிலக்குப் பெற்ற அஃப்ரா, மதீனாவிலிருந்து கிளம்பி மக்காவுக்குச் சென்றுவிட்டார். அங்கு மக்காவைச் சேர்ந்த அல்-புகைர் இப்னு அப்து யாலீல் அல்லைதீ என்பவருடன் மறுமணம் நிகழ்ந்திருக்கிறது. இருவருக்கும் நான்கு மகன்கள் பிறந்தனர் - ஆகில், காலித், இயாஸ், ஆமிர். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சிப்பெற்று ரகசியமாய்ப் பரவிக்கொண்டிருந்த ஆரம்பத் தருணங்களிலேயே இந்நால்வரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அதனால் முதல் முஸ்லிம்கள் என்று ஏற்பட்டுப்போன சிறப்பு ஒருபுறமிருக்க, பதின்மூன்று ஆண்டுகள் கழித்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன்களில் இவர்களும் இணைந்துகொள்ள, அவர்களோடு இணைந்துகொண்டது ‘ஹிஜ்ரத்’ சிறப்பும்.
இந்த நான்கு சகோதரர்களும் மக்காவில் பிறந்து வாழ்ந்தவர்கள், இஸ்லாத்தைப் பற்றி அறியவந்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள் என்றால், மதீனாவில் வசித்து வந்தார்களே மற்ற மூன்று சகோதரர்கள், அவர்களும் இஸ்லாத்தைப் பற்றி அறியவந்ததும் உடனே ஏற்றுக்கொண்டார்கள் என்பது மற்றுமொரு சிறப்பு; ஆச்சரியம்!
மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம் கடும் சோதனைகளில் மூழ்கி நெருக்கடியின் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரம். மதீனாவிலிருந்து மக்கா வந்திருந்தார்கள் ஆறு யாத்ரீகர்கள். அவர்களில் அஃப்ராவின் மகன் அவ்ஃபும் ஒருவர். இந்த ஆறு யாத்ரீகர்களும் மக்காவில் தங்களது அஞ்ஞான வழிபாடுகளை முடித்துக்கொண்டபின் மற்றொரு முக்கியக் காரியம் புரிந்தனர். அது நபியவர்களுடன் அவர்கள் நிகழ்த்திய சந்திப்பு. அவர்களை முற்றிலும் மாற்றிப்போட்டது அந்தச் சந்திப்பு. அஞ்ஞானம் அகல மெய்ஞ்ஞானம் புகுந்தது அவர்களுக்குள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மகிழ்வுடன் மதீனா விரைந்தார்கள்.
மதீனா திரும்பிய அவ்ஃப் இப்னு அஃப்ரா தம் இரு சகோதரர்களையும் அழைத்தார். மக்காவில் நிகழ்ந்த முக்கியச் செய்தியைத் தெரிவிக்க, சகோதரர்கள் இருவரும், ‘அட! இது நல்ல செய்தி’ என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். அப்படி ஏற்றவர்கள், வந்தார்கள், வாழ்ந்தார்கள் என்று முடங்கிவிடாமல் வரலாற்றின் சாதனைப் பக்கங்களில் பெரும் அங்கம் வகித்துள்ளனர். அதற்குத் தளம் அமைத்துத் தந்தது பத்ருக் களம்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் முக்கியப் போரான பத்ருப் போர். முந்நூற்றுச் சொச்சம்பேர் கொண்ட முஸ்லிம் படை பத்ரு நோக்கிச் சென்றது. அந்தப் படையில் அஃப்ராவின் அனைத்து மகன்களும் ஆஜர்! தாய்ப்பாலுடன், வீரத்தைக் கலக்கி ஊட்டியிருந்திருக்கிறார் அஃப்ரா ரலியல்லாஹு அன்ஹா.
பத்ருக் களத்தில் ஒருபுறம் ஆயிரத்துக்கும் மேலான போர் வீரர்களுடன் வலிமை வாய்ந்த, வெறிகொண்ட குரைஷிப் படை. மறுபுறம் மிகச் சொற்ப வீரர்களுடன், போதுமான போர்த்தளவாட வசதிகூட இல்லாமல் முஸ்லிம்களின் எளிய படை. ஆனால் அவர்களின் நெஞ்சம் மட்டும் ஈமானிலும் வீரத்திலும் புடைத்திருந்தது. முழுஅளவிலான போர் துவங்குமுன் நடைபெறும் ‘ஒத்தைக்கு ஒத்தை’ மல்யுத்தம் பற்றி தோழர்கள் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இந்த பத்ரு யுத்தத்திலும் அது நிகழ்ந்தது.
குரைஷிகளின் முக்கியப்புள்ளி உத்பா இப்னு ரபீஆ, தன் சகோதரன் ஷைபா, மகன் வலீத் ஆகியோருடன் முன்னால் வந்து நின்று முஸ்லிம்களிடம் அறைகூவல் விடுத்தான். ஒத்தைக்கு ஒத்தை என்பது ‘சாகடி; அல்லது செத்துமடி’. இரண்டில் ஒன்றுதான். எனவே, களமிறங்குவதற்கு சண்டைக் கலையும் துணிவும் சரிசமம் தேவை. அந்த அழைப்பை ஏற்றுச் சண்டையிட ‘திடுதிடு’வென்று ஓடி வந்து நின்றார்கள் மூன்று இளைஞர்கள். வேறு யார்? அஃப்ராவின் மூன்று மகன்களான முஆத், முஅவ்வித், அவ்ஃப். அவர்களை ஏறிட்டுப் பார்த்தான் ஷைபா இப்னு ரபீஆ. மூவருமே மதீனாவாசிகள் என்பதை அறிந்துகொண்டவன், கத்தினான்.
“இதோ பார்! நாங்கள் உங்களிடம் சண்டையிட வரவில்லை. எங்களுக்கு எங்களின் மக்கள் வேண்டும்”
குரைஷிகளின் ஆத்திரமெல்லாம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட தங்கள் இன-சொந்த பந்தங்களின் மீது இருந்தது. இன்றுடன் அவர்களை நசுக்கி அழித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தனர்.
‘உங்களுக்கு அந்த இளைஞர்களே போதும். ஆனால் நாங்கள்தானே வேண்டும். இதோ...’ என்பதுபோல் முன்னால் வந்தனர் வேங்கைகள் - ஹம்ஸா, அலீ, உபைதுல்லாஹ் இப்னுல் ஹாரித், ரலியல்லாஹு அன்ஹும். மூண்டது கடுமையான சண்டை. ‘திடும் திடுமென’ அவர்கள் மோதிக்கொள்ள சுற்றி புழுதி மயம். முடிவில், ஹம்ஸா ஷைபாவைக் கொல்ல, அலீ வலீதைக் கொன்றார். உபைதுல்லாஹ்வுக்கும் உத்பாவுக்கும் இடையில் முடியாமல் நீடித்த சண்டையை உத்பாவைக் கொன்று முடித்து வைத்தனர் அலீயும் ஹம்ஸாவும்.
‘அடடா! நமக்கு அமையவில்லையே இந்த வாய்ப்பு’ என்று இந்தச் சண்டையை துறுதுறுவென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அஃப்ராவின் மகன்கள். போரில் பார்த்துக்கொள்வோம் என்று வேட்கை உள்ளுக்குள் பரபரக்க, சிறப்பாக வந்து அமைந்தது அந்த வாய்ப்பும்.
முஸ்லிம்களின் படை அணிவகுத்து நிற்க, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு இருபுறமும் இரண்டு இளைஞர்கள். இருவரும் அஃப்ராவின் மகன்கள் முஆத், முஅவ்வித். திரும்பிப் பார்த்தவருக்கு சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. வலிமையான எதிரிப் படையை எதிர்கொண்டு நிற்கும்போது, சுற்றி நிற்கும் வீரர்களின் திறமையும் வலிமையும் மிக முக்கியமானவை. மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த முதிர்ச்சியுள்ள தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கு மதீனாவைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அறிமுகமில்லாதவர்கள். அந்த இளைஞர்களின் போர் வலிமை, பராக்கிரமம் எதுவும் அவருக்குத் தெரியாது. எனவே யதார்த்தமான சங்கடம் ஏற்பட்டுப்போனது அவருக்கு.
ஆனால் அடுத்து நிகழ்வுற்ற விஷயங்கள்தான் அவரது சஞ்சலத்தை வியப்பாக மாற்றிப் போட்டன. இருவரில் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம் ரகசியமாகக் கேட்டார்,
“என் பெரிய தந்தையே!” வயதில் மூத்தவர்களை அவ்விதம் மரியாதையுடன் அழைப்பது அவர்களது வழக்கம். “அபூஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்."
வயதில் மிகவும் இளையவர் ஒருவர் குரைஷிகளின் பெருந்தலையைப் பற்றிக்கேட்டது பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. அந்த இளைஞர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு அபூஜஹ்லை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்பதும் புரிந்தது.
“என் சகோதரர் மகனே! ஏன்? அவனை என்ன செய்யப் போகிறாய்?”
பதில் வந்தது. சுருக்கமான துணிவான பதில்: “அவனைக் கண்டால், ஒன்று நான் அவனைக் கொல்வேன்; இல்லையா அந்த முயற்சியில் போராடி மடிவேன். அல்லாஹ்வின் மீது சபதம் இட்டிருக்கிறேன் நான்."
மற்றொருபுறம் இருந்த அவரின் சகோதரரும் அதைப்போலவே, ரகசியமாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம் அதே கேள்வியைக் கேட்டார். அவரும் அதே சபதம் உரைத்தார். அவர்களின் வீரம், திடம், உயிர்த் தியாக உணர்வு அறிந்துகொள்ள இது போதாது? சமிக்ஞை செய்து அபூஜஹ்லை அடையாளம் காண்பித்தார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப். அவ்வளவுதான்!
வல்லூறு தெரியுமில்லையா? படு வேகமாய்ப் பறந்துசென்று இரையைத் தாக்கும் வல்லூறு! அதனிடம் வேகமென்றால் வேகம் அப்படியொரு வேகம். அதன் வகைளில் ஒன்று மணிக்கு 320 கி.மீ. வேகம்கூட பறக்கக் கூடியது. அப்துர் ரஹ்மான் கைகாட்டிய அடுத்தநொடி, இரையைக் கண்டுவிட்ட வல்லூறுகள் போல் பறந்தார்கள் சகோதரர்கள் இருவரும். மிகையில்லை. அந்நிகழ்வை அப்துர் ரஹ்மான இப்னு அவ்ஃப் அப்படித்தான் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
பாய்ந்துசென்ற அதே வேகத்தில் அவர்கள் அபூஜஹ்லைத் தாக்கினார்கள். ஒருவர் அவன் காலைத் தம் வாளால் பலம்கொண்டு வெட்ட, பாதாம் கொட்டை உடைந்தால் வரும் ஓசை போன்ற சப்தத்துடன் வெட்டுண்ட அந்தக் கால், உடைந்த கொட்டையிலிருந்து அந்த பருப்பு பறப்பதைப்போல் காற்றில் பறந்து விழுந்தது. அதைப் பார்த்த அபூஜஹ்லின் மகன் இக்ரிமா பாய்ந்துவந்து முஆதின் தோளில் தாக்கினார். முஆதின் கை துண்டிக்கப்பட்டது. ஆனால் அது முழுவதும் கழன்றுவிழாமல் எஞ்சிய சதையுடன் தொங்க ஆரம்பித்தது.
குருதி சொட்டச்சொட்டத் தொங்கிக்கொண்டிருந்த கையைப் பற்றிச் சட்டை செய்யாமல் அதை பின்னால் இழுத்துக்கொண்டே போரைத் தொடர்ந்துகொண்டிருந்தார் முஆத். ஆனால் போரில் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வெட்டுண்ட வலியோ, பொங்கியெழும் குருதியோ அவருக்குச் சங்கடமாகத் தோன்றவில்லை. தொங்கி ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் கையின் இடைஞ்சல்தான் அவருக்குப் பெரும் இடைஞ்சலாகத் தோன்றியது. ஒரு கட்டத்திற்குமேல் பொறுக்க இயலாமற் போக, ஒரு காரியம் செய்தார் முஆத். தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கரத்தைத் தம் காலால் மிதித்துப் பிடித்துக்கொண்டு பிடுங்கி எறிந்தார் அந்த அங்கத்தை. ரலியல்லாஹு அன்ஹு. நம்மில் எத்தனைப் பேருக்கு இதைச் சிந்தித்துப் பார்க்கவே துணிவிருக்கும் என்று தெரியவில்லை.
இவர்களின் தாக்குதலால் கால் இழந்து, தரையில் வீழ்ந்த அபூஜஹ்லு துவண்டு செயலற்றுப்போனான். மேற்கொண்டும் தாக்கப்பட்டு, குற்றுயிராகக் கிடந்தவனின் சிரம் கொய்து அவனது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.
போரில் குரைஷிகளில் எழுபதுபேர் கொல்லப்பட்டு, எழுபதுபேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். முஸ்லிம்களின் தரப்பில் இழப்பு, பதினான்கு தோழர்கள். பதினான்கில் மூன்று பேர் அஃப்ராவின் மகன்கள் - முஆத், முஅவ்வித், அஃகீல்.
“நம் சமுதாயத்தின் பிர்அவ்னைக் கொல்வதற்குப் பங்காற்றிய அஃப்ராவின் இரு மகன்களின் மீதும் அல்லாஹ் தன் கருணையைப் பொழிவானாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள். அவனைக் கொல்வதில் வேறு யார் யார் பங்காற்றினார்கள் என்று கேட்கப்பட்டபோது,
“வானவர்களும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும்.”
மூன்று மகன்களை இழந்த சோகத்தில் இருக்கும் அஃப்ராவின் இல்லத்துக்கு நபியவர்களின் மனைவி அன்னை ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா சென்று ஆறுதல் கூறி உதவியிருக்கிறார். ஆனால், உயிர்த் தியாகிகளுக்கான ஒப்பற்ற மறுமை வாழ்வைப்பற்றி கேட்டு உறுதி பூண்டிருந்த அஃப்ராவுக்கு இந்த இழப்பு அளித்த தாக்கத்தைவிட, தம் மூன்று புதல்வர்கள் உயிர்த் தியாகிகளாகிப் போனது ஆறுதலாகவும் பெரும் ஆனந்தமாகவுமே இருந்திருக்கிறது. அவரது கவலையெல்லாம் போரிலிருந்து உயிருடன் திரும்பிவிட்ட மற்ற மகன்களைப் பற்றி என்பதுதான் பேராச்சரியம்.
நபியவர்களைச் சந்தித்த அஃப்ரா வினவினார். ஒற்றைக் கேள்வி. “அல்லாஹ்வின் தூதரே! உயிருடன் இருக்கும் என் மகன்கள் இறந்துபோன என் மகன்களைவிட தாழ்ந்தவர்களா?”
“இல்லை” என்றார்கள் நபியவர்கள்.
அந்த ஒற்றை பதிலில் நிம்மதி அடைந்தது அந்தத் தாயின் நெஞ்சு!
மகன்கள் பட்டம் பெறவேண்டும்; பெரும் பதவி அடைய வேண்டும்; செல்வந்தனாக வேண்டும்; அப்படி ஆக வேண்டும்; இப்படி ஆக வேண்டும் என்பது போன்ற இகலோக குறுகிய நோக்கங்கள் எதற்குமே அவர்களது அகராதியில் இடம் இருந்திருக்கவில்லை. இறைவனுக்காகவும் அவன் தூதருக்காகவும் தம் உடல், பொருள், உயிர், என்பதெல்லாம் மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளையும் அணிவகுத்து அனுப்பி மகிழ்ந்திருக்கிறார்கள் அந்த அன்னையர். பிள்ளைகளின் மனத்திலும் உடலிலும் வீரத்தைப் பூசிப்பூசி உரமேற்றியிருக்கிறார்கள்.
அதனால்தான் இறந்துபோன மகன்களை நினைத்துப் பெருமிதமும், உயிருடன் மீந்து நிற்கும் மகன்களை நினைத்து வருத்தமும் அடைந்திருக்கிறார் தியாகிகளின் வீரத்தாய் அஃப்ரா பின்த் உபைத்.
பிற்காலத்தில் யமாமா, மஊனாக் கிணறு போர்களில் மற்ற நான்கு மகன்களும்கூட வீரமரணம் எய்தியாகக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
‘எப்பேறு பெற்றாள் இத்தாய்’ !
ரலியல்லாஹு அன்ஹா!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.


<தோழர்கள் | தோழியர் - 1>

உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்!


உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்!

நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.
உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் கூற,
“இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்” (அல்குர்ஆன் 69:40, 41)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அடுத்து இவர் ‘ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் நான் கூற,
“(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 69:42, 43) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து,
‘உமரே நீ எங்கு செல்கிறாய்?’ என்று கேட்க,
‘நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.’ என்றார்.
அதற்கு நுஅய்ம் ‘நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?’ என்று அச்சுறுத்தினார்.
அவரை நோக்கி ‘நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது’ என்று உமர் கூறினார்.
அதற்கு நுஅய்ம் ‘உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்’
என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.
அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள ‘தாஹா| எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர்,
‘உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?’ என்று கேட்டதற்கு
‘நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை’ என்று அவ்விருவரும் கூறினார்கள்.
அப்போது உமர் ‘நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார்.
அதற்கு அவரது மச்சான் ‘உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?’ என்று கேட்க,
உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.
கோபம் கொண்ட உமரின் சகோதரி,
‘உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது.
‘உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கு அவரது சகோதரி ‘நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்’ என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார்.
பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் ‘ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்’ என்று கூறி, தொடர்ந்து ‘தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு ‘இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!‘ என்று கேட்டுக் கொண்டார்.
உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து,
‘உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, ‘அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்’ என்றுரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் ‘உமர் வந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். ‘ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!’ என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி
‘உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!’ என்று கூறினார்கள்.
உமர் (ரழி) ‘அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்’ என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.)
இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
“முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” நூலிலிருந்து.  ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி  தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி
நன்றி : சுவனத்தென்றல்.காம்