மழை
மழை என்பதுமேகத்தின் பூரிப்பு
வாயில் நீர் ஒழுக
கார்மேக பெண்ணின் சிரிப்பு!
கடலிலிருந்து கைநீட்டி
கார்மேகம் தொடும் பயிற்சி
கடல் பெற்ற கடனை
மேகத்தின் மூலம் அடைக்கும்
முயற்சி
நீருக்குத்தான் எத்தனை வேஷம்?
அருவியாய்... ஆறாய்...
கண்ணீராய்.. கடலாய்..
நிற்க.
நீர் என்பது சிவாஜி கணேசன்!
கடலுக்கும் காதலுக்கும் ஓர்
ஒற்றுமை உண்டு..
கடலை இறைக்க முடியாது
காதலை பிரிக்க முடியாது!
அவதாரம் மழைக்கும் உண்டு
அறிவீரா?
அருவியிலிருந்து
அறுந்து கீழே விழும்போழுது
கண்ணாடி துகள்களாய்...புகையாய்..
கண்களிலிருந்து கண்ணீராய்
கன்னத்தில் வழியும்போது
இந்திய மேப்பிற்கு கீழே தொங்கும்
இலங்கையாய்..
புற்களோடு
புனரும்போது பனித்துளியாய்..
ஆலங்கட்டி,கல்மாரி.
அதுபோக இன்னும் எத்தனையோ??
மனிதர்களா! ஏன் ஓடுகின்றீர்?
சில்லறை காசுகளை
விண்ணிலிருந்து மேகம்
வீசியெறியுமே..
வானமும் பூமியும்
நீரென்ற நூலில்
நெசவு செய்யுமே....
அதற்காகவேனும்
மழை காண வாரீர்!
குடிநீராய் ....குளியலாய்....
கண்ணிராய்..காதலாய்..
சிசு மூச்சு விடும்
சிறுநீராய்..
என்ன குறை வைத்ததிந்த மழை?
குறை வைக்காத மழைக்கெதிராக ஏன்
குடை பிடிக்கும் போராட்டம்?
உடலுக்கும் பூமிக்கும்
உள்ள ஒற்றுமை தெரியுமா?
இரண்டுமே எழுபதுசதவீதம்
நீரால் ஆனவை..
காலுக்கு கீழே நீர்!
தலைக்கு மேலே நீர்!
உடலை கிழித்தால் நீர்-எங்கும்
உற்று நோக்கினால் நீர்!
இதை உணர்வீரா நீர்??
கடல் என்பது பலகோடி
தண்ணீர் துளிகளின் ஒற்றுமை!
மழை என்பது மேகம்
மனிதர்கள் போல் காணும் வேற்றுமை!
சரி..இப்போது சொல்லுங்கள்..
நீங்கள் கடலா?மழையா
- ஷேக்
விவசாயம்
மூட மூடையா விளயுமின்னுமூட நம்பிக்கைல வித விதச்சேன்
மழை ஒரு சொட்டு விழலையே
உலை வீட்டில் எரியலையே
வறப்பு வெட்ட முதல்ல
வளையல் அடகு வச்சேன்
களை புடுங்க பிறகு
கம்மல காவு வச்சேன்
பூமிக்கடியில தண்ணி
புள்ளியா போச்சு
இப்படியே போனா
இனி நின்னுடுமோ மூச்சு?
இன்று வருமோ இல்ல நாள வருமோ?
இல்லாட்டி போனா
கடைசில என் சாம்பல
கரைக்கும் வெள்ளமா வருமோ?
சோலக்காட்டு பொம்மைக்கே
ஆடைக்கும் அலங்காரத்துக்கும் துப்பிருக்கு
சோலையம்மா மவ எனக்கு
கண்ணுல மட்டும் உப்பிருக்கு
கல்யாணத்துக்கு வரச்சொன்னா
குழந்தைக்கு பேர்வைக்க வந்தது போல
புசுக்குன்னு ஒருநாள்
பொல பொலன்னு பெஞ்சுது மழ
அடிச்ச பேய் காத்துல வீட்டுகூர
ஆகாயம் போயிடுச்சி
வீணா போன மழையால வீடுகரஞ்சி
வீதிக்கு வந்திருச்சி
கடைசியா உயிர்வாழ
வெதச்ச நெல் மிச்சமிருக்கு
அதுவும் கைகூடுமோ என
அச்சமும் நெஞ்சிலிருக்கு
விதச்ச நெல் விளஞ்சி ஒருநாள்
வீதிக்கு வந்ததையா!
பஞ்சத்துக்கு பாதி!
பங்கு போனது மீதி!
- ஷேக்
இரயில் பயணங்களில்
இருக்கை எண் உறுதியானாலும்இன்னொருமுறை
பட்டியலில் பார்க்கும்வரை
பாடாய் படுத்தும் மனசு..
அதிகாலை ஜன்னலின் வெளியே
அருகினில் இருந்தாலும்
விடிந்த பின்பே
விழிதிறக்கும் இமைகள்..
தடக்..தடக்..தடக்..தடக்..
அருகிலிருக்கும் அந்த
அறியாத மனிதரிடம்
வார பத்திரிக்கை ஒன்றை
வாசிக்க கேட்கலாமா? வேண்டாமா?...
வயிறு பசிக்கிறதே..
கடந்துபோன
காப்பி வியாபாரியும்
வெள்ளரிக்காய் பாட்டியும் திரும்ப
வருவாரோ? மாட்டாரோ?
தடக்..தடக்..தடக்..தடக்..
தூக்கம் வரவில்லை...
பக்கத்து சீட்டு குழந்தையின்
அழுகையை அடக்க
அம்மாவிற்கு தெரியவில்லையோ?
கொசுவைபோல் நினைவுகளும்
நினைவுகள்போல் கொசுக்களும்
மாறி மாறி கடிக்கிறதே!
தடக்..தடக்..தடக்..தடக்..
ஆனால்..
மனிதர்களைபோல் தன்பாதையில்
மாறுவதில்லை இந்த புகை வண்டி
நிறுத்தங்கள் வளைவுகளிருந்தாலும்
ரொம்ப ஸ்ட்ரைட்ஃபார்வர்டாக்கும்!
தடக்..தடக்..தடக்..தடக்..தடக்..
தடக்..தடக்..தடக்..தடக்..தடக்..
- ஷேக்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்புடன்
ஷேக் முஹைதீன்
தலைக்கு மேலே நீர்!
உடலை கிழித்தால் நீர்-எங்கும்
உற்று நோக்கினால் நீர்!
இதை உணர்வீரா நீர்??
அந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. என்ன ஒரு எழுத்து நடை.இரயில் பயணங்களில் கவிதையில்
ரொம்ப கரெக்ட். அண்ணா. அப்படியே ரயில் பயண நிகழ்வை கண் முன் நிறுத்திய வரிகள்.கொசுவைபோல் நினைவுகளும்
நினைவுகள்போல் கொசுக்களும்
மாறி மாறி கடிக்கிறதே
மனிதர்களைபோல் தன்பாதையில்
மாறுவதில்லை இந்த புகை வண்டி
நிறுத்தங்கள் வளைவுகளிருந்தாலும்
ரொம்ப ஸ்ட்ரைட்ஃபார்வர்டாக்கும்
இந்த வரிகள் எல்லவற்றையும் விட நச்.
விவசாயம் கவிதை அனைத்து வரிகளும் அருமை.
என்றென்றும் நட்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
உண்மைய சொன்னா அந்த சம்பவம் எனக்கு நடந்தவைகளே!
சில விடயங்கள் எல்லோருக்கும் போதுவாய் இருக்கும் இரயில் பயணங்களில்..
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஆனாலும் வாக்கியாமைப்பு,நடை,கற்பனை..இவைகளுக்கு உரிமையாளர் நான் மட்டுமே!
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கொசுவைபோல் நினைவுகளும்
நினைவுகள்போல் கொசுக்களும்
மாறி மாறி கடிக்கிறதே!
வயிறு பசிக்கிறதே..
கடந்துபோன
காப்பி வியாபாரியும்
வெள்ளரிக்காய் பாட்டியும் திரும்ப
வருவாரோ? மாட்டாரோ?
எங்கள் இலங்கையையும் கவிதைக்குள் சேர்த்துக்கொண்டீரே
கண்களிலிருந்து கண்ணீராய்
கன்னத்தில் வழியும்போது
இந்திய மேப்பிற்கு கீழே தொங்கும்
இலங்கையாய்..
அருமை அருமை ...........மேன்மேலும் பல கவிதைகள் தர வாழ்த்துக்கள்,
மழைத்துளிகளில் முதலில் வந்ததும் கடசி வந்ததும் எல்லாமே அழகுதான்..வாசகர்கள்,விமர்சனம் செய்பவர்களும் மழைதுளிகள் போலவே..
நீங்கள் ஊட்டிய உற்சாகத்தில்(அருமை அருமை)இன்னும் இங்கே இருக்கிறேன்..எழுதுகிறேன்!
உங்கள் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தது..நன்றி!
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஆடைக்கும் அலங்காரத்துக்கும் துப்பிருக்கு
சோலையம்மா மவ எனக்கு
கண்ணுல மட்டும் உப்பிருக்கு//
இந்த வரி ரொம்ப டச்சிங் அண்ணா
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆமினா
மாறுவதில்லை இந்த புகை வண்டி
நிறுத்தங்கள் வளைவுகளிருந்தாலும்
ரொம்ப ஸ்ட்ரைட்ஃபார்வர்டாக்கும்!
அருமையான வரிகள் ஷேக்! மனதைத் தொட்டு விட்டது....ஆனால் அந்த கடமையைச் செவ்வனே செய்யும் ரயிலையும் தடம் புரள வைத்து விடுகிறார்களே சில அராஜக மனம் கொண்ட மனிதர்கள்....
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உங்களின் கவிதை படித்ததும் எனக்கு வைரமுத்துவின் கவியரங்கத்தை கண்டுவந்த சிலிர்ப்பு. அதையும் தாண்டி ஒரு லயிப்பு. யதார்த்தமான வார்த்தை விளையாட்டு. தஞ்சை கதம்பமாய் மணக்கிறது. வாழ்த்துகள்
எப்போதும் சிரித்திரு
ஆனால் கவியரங்கம்..வைரமுத்து இலக்கியம் அப்படி இப்படின்னு சொல்லி நயாகராவை நச்சுன்னு என் தலையில் இறக்காதிங்க மேம்..நான் ரொம்ப சின்ன பையன்..நல்லவேளை..அறுசுவையின் பெருங்கவிஞர்கள் யாரும் இதை பார்க்கவில்லை..
எனிவே தேங்க் யூ சோ மச் மேம்
அன்புடன்
ஷேக் முஹைதீன்
எல்லா கவிதைகளும் சூப்பர்
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உங்கள் கவிதயை இன்று தான் என்னால் படிக்க முடிந்தது.
மிகவும் ரசித்து வியந்து போனேன்.மழை நீரை கொண்டு நீங்கள் எழுதிய கவிதை மிக மிக அருமை அண்ணா....
ஒவ்வொரு வரியுமே ரசிக்கும்படி இருந்தது.இனி மழையை கண்டாலே உங்கள் கவிதையை நினைவுக்கு வராமல் இருப்படில்லை போலும்.
அதே போல் இன்றைய சூழ்நிலைக்கு தக்கவாறு விவசாயம் பற்றிய கவிதை இருந்தது.அவர்கள் படும் கஷ்ட்டத்தை அழகாய் விவரித்துள்ளீர்கள்.
இரயில் பயணம் ஒரு வித அழகிய அனுபவம்.அவற்றை உங்கள் கவிதை வரிகளால் மேலும் அலங்கரித்திருப்பது அருமை....
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் சகோதரரே...
என்றும் அன்புடன்,
அப்சரா.
*****ஒவ்வொரு வரியுமே ரசிக்கும்படி இருந்தது.இனி மழையை கண்டாலே உங்கள் கவிதையை நினைவுக்கு வராமல் இருப்படில்லை போலும்.****
அப்படியா?ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு பா...ஒரு கவிதை மூலமாக மழையை உங்களுக்கு என் கவிதை நியாபகபடுத்தும் என்பதைகேட்டு
சிலிர்த்து போனேன்..
உங்கள் நினைவு பரண்களில் என்னையும் ஒருவனாக வைத்து,என்னை அடிக்கடி பாராட்டி ஊக்குவிக்கும் என் அருமை சகோதரிக்கு என் கோடான கோடி நன்றிகள்!
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்புடன்
ஷேக் முஹைதீன்