சலிப்படைந்தால் சாதனை இல்லை!
வாழ்ந்து
படிக்கும் பாடங்கள் 9
சலிப்படைந்தால்
சாதனை இல்லை!
ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு
இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த
சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள்
சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக்
கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில்
கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக்
கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு
நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக்
கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.
திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால்
உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண்
தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம். திறமையும்
முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு
விஞ்ஞானி எடிசன் ”1% திறமையும் 99%
உழைப்பும்” வெற்றிக்குத் தேவை
என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க
முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.



