வாழ்ந்து
படிக்கும் பாடங்கள் 10
கடவுள்
காப்பாற்றுவாரா?
ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு
இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும்
செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி
விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது
அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக்
காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன்
நம்பினான்.
வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.
வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.
மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக்
கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக்
கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?”
கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு
வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?”
இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள்
புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது
கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட
வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.
கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக்
கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள்
கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார்.
உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன்
விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார்.
மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி
மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும்
மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான்
சரி.
எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக்
கொள்வதல்ல. முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும்
அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு
உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும்,
என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.
குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக
வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக
மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து
அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக
நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும்
வாழ்ந்து விடக் கூடாது.
முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய
முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும்.
கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்,
கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே
தவிர வேறில்லை.
“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற
உத்திரவாதம் தர மாட்டார்”
என்று ஒரு
பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக
இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம்
மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே
ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம்
முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான்.
எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல்
அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள்
செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம்
அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப்
பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு
கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.
மேலும் படிப்போம்.
- என்.கணேசன்
- நன்றி: வல்லமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக