புதன், 12 டிசம்பர், 2012

மனதைத் திற - சின்ன சின்ன சந்தோசங்கள்!


   ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்!


  ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!


  வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்?


  முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி!

  மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்!


  எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு வீட்டில் ஆசையுடன் அருகில் வரும் குழந்தையிடம்கூட முகத்தை உம்ம்ம்என்று காட்டி ஓடவைக்கிறோம்! அலுவலகங்களில் அருகில் வரும் நண்பர்களை நான் பிஸி என்று விரட்டிவிட்டு எங்கோ அயல்நாட்டில் உள்ள நண்பர்களை நலம் விசாரிகிறோம்!


  ஒவ்வொருநாளும் இரவு ஒரு மணிவரை வேலைமுடித்து வீடு வருகிறோம்! அலுவலகத்திற்கு ஒரு நல்ல பணியாளராய் இருக்கிறோம்! ஆனால் மனைவிக்கு? குழந்தைக்கு? அலுவலகங்களுக்கு நீயில்லை என்றால் இன்னொரு ஆள்! ஆனால் உன் மனைவிக்கு? குழந்தைக்கு?


  உதாரணத்திற்கு குடும்பம், மகிழ்ச்சி, தூக்கம், அரட்டை, நண்பர்கள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு 40 வருடங்கள் கடுமையாய் உழைத்து உங்கள் குறிக்கோளை அடைந்துவிடுகிறீர்கள். இப்படி இருபது வயதில் ஓட ஆரம்பிது அறுபதாவது வயதில் சாதனையை இலட்சியத்தை அடைந்துவிட்டோம்!


ஆனால் உன் வாழ்க்கை

இந்த ஒரே ஒரு லட்சியத்திற்காகவா உன் அறுபது ஆண்டுகாலம் வீணடிக்கப்பட்டது?


ஒருவேளை இலட்சியத்தை அடையமுடியவில்லை! அல்லது உங்கள் வாழ்க்கை முன்னமே முடிந்துபோய்விடுகின்றது. (யாருமே இறைவனிடம் உறுதி வாங்கி வரவில்லையே?)



ஜென் கதை!


மிகவும் வயதான ஒரு ஜென் துறவி படுக்கையிலிருந்தார். தன் இறப்பிற்கு முன்னர், தன் சீடர்களை யார் வழிநடத்திச் செல்வது என்று தீர்மானிக்க ஒரு சோதனை வைக்கத் தீர்மானித்தார்.


வயது மூப்பினாலும், நோயாலும் அவரது முகம் கடுமையாக வாடி இருந்தது. அனைத்து சீடர்களையும் அருகே அழைத்தார்.




சீடர்களே, எனக்கோ மிகவும் வயதாகிவிட்டது, எனக்குப் பின் இந்த குருகுலத்தை உங்களில் யார் வழிநடத்தப் போகிறீர்கள் என்பதை நான் கண்டறிய வேண்டும். நான் தேர்வு செய்யும் நபர் உங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருப்பார்.


கடந்த பல வருடங்களாக நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள். என்னிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?


எல்லோருக்கும் குழப்பம். ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள்.


ஆசைகளைத் துறக்க வேண்டும்!


கோபம் கொள்ளக் கூடாது.


ஒரு சீடன் ஜென் துறவிக்கு மருந்து கொடுத்தான்.


இதில் எதிலுமே அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.


அப்போது இன்னொரு சீடன் அருகில் வந்தான்.


நீ என்னிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாய்? என்றார் துறவி.


எதுவுமே சொல்லாமல் அவரைப்பார்த்து மெலிதாய் ஒரு புன்முறுவல் செய்தான்.


துறவி தன பிச்சைப்பாத்திரத்தை அவனிடன் கொடுத்துவிட்டார்.



  அதேபோல்தான் வாழ்க்கை என்பது வெறும் ஒருசில லட்சியங்களில் முடிந்துபோய்விடுவதில்லை! வாழ்க்கை என்பது சின்ன சின்ன சந்தோஷங்களில் நிரம்பிருக்கிறது.

  • எதிரில் வரும் மழலையின் சிரிப்பு.
  • சுற்றியிருக்கும் இயற்கை மரங்கள் - அதிலிருந்து வரும் இயற்கையான காற்று.
  • சின்ன சின்ன சண்டைகள்.
  • பக்கத்துவீட்டு பாட்டியின் பாசம் கலந்த நலம் விசாரிப்பு.


   நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கின்றன. நம்மைச் சுற்றியே இருக்கின்றன. நாம்தான் அவற்றை எடுத்துக்கொள்வதில்லை.


  இப்படி எதையும் அனுபவிக்காமல் நாளைய லட்சியங்களுக்காய் இன்றைய வாழ்க்கையை, மகிழ்ச்சியைப் பறிகொடுத்துவிட்டு வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறோம் ரோபோட் போல்!


  லட்சியங்கள் நிச்சயம் தேவைதான்! வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோமே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக