ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கனவழைந்த தேசம் - தில்லை


Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Nov 10, 2011

கனவழைந்த தேசம் - தில்லை


இரவு முடியும் வரை
என்னோடு இருக்கும் இரகசியங்களை முத்தமிடு
அன்பே ஒரு காலத்தில் போர்வீரர்களின்
மெளனத்தை போலிருந்தது எனது இரகசியங்கள்
கைவிடப்பட்ட அரண்களில் புதைந்த உடல்களை
நூற்றாண்டுகளாக மறைத்து வைத்திருக்கும்
நிலத்தை போலிருந்தது எனது இரகசியங்கள்
நாங்கள் உயிருடன் இருந்தபோது
உடைந்து நொறுங்கிய சிதிலங்களில் வீழ்ந்த அரசு
மீண்டும் உயிர் பிழைத்திருக்கிறது
சிதைக்கப்பட்ட கல்லறைகள்
இரத்தம் தோய்ந்த அடித்தளங்கள்
கொடிய முட்கம்பிகளால் மூடப்பட்ட நகரத்தின் வீதிகள்
முன்பு இதைவிட வடிவானது எனது தேசம்
அன்பே நான் உன்னைக் கேட்கிறேன்
பனியின் நுரையழைந்து வீசும் காற்றில் புதையுண்ட
எனது காதுகளில் இரகசியமாய் சொல்
புதைமணலில் ஒரு நீர்நிலையாகத் ததும்பும்
ஆதி ஊற்றை எங்கிருந்து தூர்வார்வது
சாவோடு நிலத்தைத் தழுவியவாறு உறங்கிக்கொண்டிருக்கும்
என் சகோதரர்களின் புதைந்த கனவுகளும் போராட்டமும்
புகலிடத்திலிருந்து மீண்டும் திரும்பப்போவதில்லை.

04112011

...மேலும்

Nov 3, 2011

கறுப்பு சரித்திரம் - தில்லை


கறுப்பு சரித்திரம்
இரு பலஸ்தீன யுவதிகளை கண்டேன்
வாழ்தலின் மையம் தொலைத்தவர்கள் என்று
அடையாளப்படுத்திக் கொண்டனர்
ஒரு தேசத்துக்காக கடலைத்தந்த
எனது கண்களைப் போன்று
அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது
ஒட்ட ஒட்ட வெட்டப்பட்ட
அவர்களுடைய புன்னகை போன்றே
என்னுடைய புன்னகையும் இருந்தது
என்னை போன்றே மொழி தெரியாத
இரவல் முகங்கள் இரண்டை
அகதிகள் தேசத்தில்
அவர்களும் அணிந்திருந்தனர்
வாழ்விலும் மரணத்திலும்
அவர்களைப் போலவே
நாங்களும் இருக்கிறோம்
இரு தேசங்களின் கறுப்பு சரித்திரமாக

02112011
...மேலும்

Oct 23, 2011

மொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை



1.

உன்னோடான முற்றுப் பெறாத உரையாடல்களால் ஆனது
என் தெரு
சொற்களை உடைத்தும், பெருக்கியும்,
பள்ளங்களை நிரப்பிக் கொண்டு
நடக்கிறேன்

நிராசைகளை பேய்களுக்குத் தின்னத் தருகிறேன்.
பதிலுக்கு அவை எனக்கு கள் வடியும் பூக்களைப் பரிசளிக்கின்றன
அதிலொன்றை உனக்கு சூட்டுகிறேன்.
அதில் என் அக்குளின் வாசம் இருப்பதாக சொல்கிறாய்

கைவிடப்பட்ட தேனடையாய் தொங்கும் பொழுதுகளை பருகுகிறோம்
நீரலை யாய் மோகம்
தாழ்ந்த இசையைப் புனைகின்றது
கலவியில் நீளும் நம் மெல்லிய உடல்களின் பித்தால்
திசை துலங்குகிறது
மேலும் நடக்கிறேன்

ஒரு நெடுங்கனவு போல
நாட்களின் நிறங்கள் கூடுகின்றன


2.

உன்னைத் தெரிந்துக் கொண்ட இரவுகள்
வௌவால்களை போல அறைகின்றன

அவற்றுக்கு
மீன்களைப் பிடித்து தருகிறேன்
கடல் வேண்டும் என்கின்றன

பழங்களைப் பறித்துத் தருகிறேன்
காடு தா என்கின்றன

குகைகளை பெயர்த்து தருகிறேன்
மூதாயை அழைத்து வா என்கின்றன

ராஜப் பூச்சிகளின் சிரசை தருகிறேன்
சூனியத்தைப் பிடித்து தா என்கின்றன

அதன் சுரப்பிகளில் பாலுண்ட என் கனவுகளுக்கு
கண்களை காவு தருகிறேன்

அரக்கு நிற புகை கக்கி எரிகிறது தலை

நன்றி - தினகரன் தீபாவளி மலர், வள்ளிதாசன்


உலகின் அழகிய முதல் பெண்
...மேலும்

Aug 10, 2011

உடலே சினை முட்டையாய் - கொற்றவை


அதிகாரம் பற்றிய உரையாடலை 
நிகழ்த்திக் கொண்டிருந்தேன் 
உடலிடம் 
ஆயுதம் ஏந்திய சிவப்பு தேவதை 
எலும்புகளுக்குள் 
வாள் பயிர்ச்சி செய்யும் நாட்களில் 
சினை முட்டைகளின் இருப்பிடத்தை 
மாற்றச் சொல்லிக் கேட்டேன் 

 மரணத்தின் கரிய நகங்களைப் பிடுங்கி 
தசைகளுக்கடியில் ஒவ்வொன்றாய் பதித்தாள் தேவதை 
பெண் உடலுக்கும் போர்களத்திற்கும் 
இருக்கும் ஒற்றுமை பற்றிய பாடல் ஒன்று தயாரானது 

 சிதைவுகள் 
முனகல்கள் 
காற்றைக் கிழித்து வரும் ஈனக் குரல்கள் 
பெருக்கெடுத்தோடும் குருதி 
இவற்றால் நிரம்பி வழிந்ததந்த நதி 

 அடித்து தள்ளப்படும் சினை முட்டைகளை 
ஒவ்வொன்றாக 
சேகரிக்கிறாள் மும்முலைக்காரி 

 குழந்தையின் சிரிப்பொலியை 
இசை குறிப்பென பெயர்த்து 
மரப் பொந்துக்குள் குருவியோடு 
பாடல் இசைத்துக் கொண்டிருந்த வேளையில் 
கிடத்தியிருந்த எனதுடலில் எவரும் அறியா வண்ணம் 
முட்டைகளை வைத்து சென்றாள் அவள் 

 உடலே சினை முட்டையாய் மாறிப்போனதை 
பார்த்துக்கொண்டிருக்கிறோம் 
மரப்பொந்துக்குள் இருக்கும் குருவியும் நானும் 

 மாதவிடாய் நாட்களில் 
எரிமலைக் குழம்பென 
வழிந்தோடும் 
 குருதி 
சொற்கள் 
படிமங்கள் 
இவற்றோடு கண்ணீரும் கலக்கையில் 
உறுதி செய்து கொள்கிறேன் இதுவரை நான் எழுதியது கவிதை என்று.


...மேலும்

Jul 7, 2011

"பெண்" - கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை.


இந்த தாய்மையின்
பள்ளமான கசிவுகளில்
ஊற்றாய் சுரக்கிறது
வாழ்க்கை...

தொப்புள் கொடியின் சுருளில்
வெட்டி விலக்கிய நுணியில்
வலித்தது இதயம் பீச்சியது குருதி

புலம்பிய மனதின் ஓலத்தில்
நிழலாக
தொடரும் சுகம்.............

"நாளை பேசும்"
என்ற
எதிர்பார்ப்பு நம்பிக்கை
நகரும் பயணத்தில்
நடை போடுகிறது வாழ்க்கை...

வீதியில்
அகதி முகாம்களில் வாழும்
பெண்களின் பேச்சு
அனுதாபங்களாய் மாறுகிறது..........

பெண்கள் நாட்டின் கண்களென்று
வார்த்தைகள்........
புகழ்ச்சிகள்............
பாராட்டுக்கள்..........
பேசப்படுகிறது.........

பெண்ணுக்கு
பாதுகாப்பு
எப்போது வரும்!
பெண்களை-
பாதுகாப்பது யார்.......?

s.k.risvi@gmail.com
...மேலும்

Jul 5, 2011

அதற்குப் பிறகு - லீனா மணிமேகலை


1.

இந்த செம்போந்து பறவை ஏன் என் கூண்டில் வந்து முட்டை வைத்தது
பால் சுரப்பியான எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
அக்குளிலும், தொப்புளிலும் மாற்றி மாற்றி வைத்து அடை காத்தேன்.
குஞ்சு பொரிந்து வௌவால் பிறந்தது
அதற்குப் பிறகு
தலைகீழாக நடக்கத் தொடங்கினேன்
இரவில் மட்டுமே கண்கள் ஒளிர்ந்தன
தின்று துப்பிய அத்திப்பழ கொட்டைகளையும், நாவற்பழ விதைகளையும்
என் காதலர்கள் பொறுக்கத் தொடங்கினார்கள்
காடு நிறைத்தது
தவளைகளின் இசை


2.
தனிமை நிர்வாணித்திருந்த என் கையின் பங்குனி மலரைத்
திருடிச் சென்றது நெல்சிட்டு
அது பறந்த வயல்களில் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் விளைந்தன
மகரந்த சோறுண்டு பிறந்த உயிர்களுக்கு எல்லாம் மூன்று கைகள்
எதிர்வுகளுக்குப் பழகிய குறுக்கு கோடுகள் உறைந்துப் போயின
கணக்குகள் பொய்த்தன
துரோகிகள் என பார்த்த இடத்தில் நெல் சிட்டுகளைச் சுட
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன
அதற்குப் பிறகு செடிகள் பூக்கவே இல்லை


3.
நான் இடலை மரம்
என் பசிய இலைகள் காற்றசைவிற்கே பற்றிக் கொள்ளும்.

எரியும்போதெல்லாம்
வாகையின் செந்நிறப் பூக்களெனப் பறிக்கப் போய் சுட்டுக் கொள்கிறாய்

உன் தீப் புண்களை அறுவாடென நினைத்து கூடடையும் தேனீக்கள்

இலையுதிர் காலத்தில் தேன் பிழிந்துப் பருகத் தருவாய்
புணர்வாய்
அதற்குப் பிறகு
அகல மறுக்கும் குறியை அணிலாக மந்திரித்து
என்னிடமே விட்டுச்செல்வாய்

வரிகளோடி அணில் துளைகளிட்ட என் குருத்தை
இடைச்சி ஒருத்தி தினந்தோறும்
குழலூதி இசைத்துச் செல்கிறாள்
உனக்கு எப்படிச் சொல்வது
அவள் தான் என் புதிய காதலியென்று

தீராநதி கவிதைகள், ஜூலை 2011

...மேலும்

Jun 30, 2011

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – கவிதா (நோர்வே)


மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது.

கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை.

விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல் மலையக இலக்கியங்களை நாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. உலகம் முழுதும் கவிதையின் பிரவாகம் கட்டுடைத்து செல்கின்ற இந்தக் காலத்தில், மலையக மக்களின் கவிதை இலக்கியம் என்பது எம்மத்தியில் பெருமைப்படுமளவு வளரவில்லை என்ற மலையக இலக்கியம் தொடர்பான சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நாட்டார் பாடல் வடிவில் வளர்ச்சி பெற்றுவந்த மலையகக்கவிதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கவிதை நடைகளில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், இக்கவிதை துறை அதன் ஏற்றத்தை பெரிய அளவில் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இக்கவிதை நூல் என்னிடம் கொண்டு வந்த சேதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட வேறு எந்த நோக்கமும்மில்லாது, என் மீது உட்கார்ந்து கொண்ட மனப்பாரத்தை இதன் மூலம் கொஞ்சமேனும் இறக்கி வைக்கும் முயற்ச்சியாய் சிறு இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.

கொளுந்து பறிக்கும் பெண்களின் பிரம்புக்கூடைகளுள் அடங்கமறுத்து எகிறி விழும் தேயிலைக் கொளுந்துகளாகவும், கூடையின் ஊட்டுக்குள் இருந்து அமுக்கம் தாங்காது எட்டிப்பார்க்கும் தேயிலைக் கொளுந்துகளி;ன் நுனிஇலைகளாகவும் விளிம்புநிலை மக்களின் கோபமும், துயரமும் கவிதைகளாகி ”இசையால் பழியப்பட்ட வீணை” கவிதைத் தொகுதியில் எமக்குக் காணக்கிடைக்கின்றன.
………….
பிலிஸ்தியன் இனத்தைச்சேர்ந்த மகாவீரனான கோலியாத்தின் உயிரையும், ஆணவத்தையும் சிறு கவண்களால் அடித்து வீழ்த்தியது மட்டுமன்றி, கோலியாத்தின் உயிரை எடுப்பவர்களுக்கு அரசையும் மகளையும் தருவதாகக் கூறி ஏமாற்றிய அரசனையும் எதிர்த்து, வென்று தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே அமைத்துகொண்ட தாவீதைத் தொட்டுச்செல்கிறது கீழ்க்காணும் சந்திரலேகாவின் கவிதை வரிகள்.
எனக்கு பாதுகாப்பாய் வாழ
சதுர அடிகூட அதிகம்தான்!
தாவீதுக்கு கவணும் கற்களும்தான்
வீர கவசம்
குறிஞ்சியின் தாவீதுகளுக்கும்!
எனது நிலம் எனது மொழி
எனது இனம் எனது குருதி யாவும்
மாசுபடுகிறதெனில்
மரணம் எனக்கு
மரியாதைக்குரிய வரப்பிரசாதம்!
இன்னும் கற்களைப் பொறுக்கு
கவண்களை உற்பத்தி செய்!
- சந்திரலேகா கிங்ஸ்லி
அமுக்கப்பட்ட ஒரு சிறு சமூத்தின் ஒட்டுமொத்தக் கோபக்குரலாக எழுந்து வருகின்றது சந்திரலேகாவின் இக்கவிதை வரிகள்.
…..
வறுமையே தலையெழுத்தாகிப் போன
மலையகத்திற்கு
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
சவால்களுக்கு மத்தியில் இணைந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் எமது
வறுமையின் நிறம்
இன்னும்
கடுமையாகிக் கொண்டே இருக்கிறது
- மஞ்சுளா
உலகில் எப்போதும் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொடூரமானவை. அதிகார அரசினால் தன் பார்வைக்கு எடுபடாத சிறுபான்மையினத்தவரின் வாழ்க்கைத்தரத்தை வெளிச்சத்திற்கு எடுத்துவருதல் என்ற பொறுப்பை இனி ஒவ்வொருவரும் முன்னெடுத்தாலொளிய, மலையகமக்களின் நிறம் மாறுவதற்கில்லை என்பதையும் தனது வாழ்க்கை முறையையும் மஞ்சுளா சிறப்பாகத் தனது முழக் கவிதை வரிகளிலும் வடித்திருக்கின்றார்.
….
மலையக மக்களின் வாழ்நிலையை மட்டுமல்ல உலகமட்டத்திலும் உள்ள பெண்ணியச்சிந்தனைகளும், பெண்நிலைவாதங்களும் இங்கும் பல கவிதைகளில் காணக் கூடியதாகவுள்ளது. பெருமுற்கள் நிறைந்த பாதைகளில் சலிக்காமல் பயணிக்கும் மலையகப்பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது பற்றி யாரும் பெருமளவில் பேசுவதில்லை. பிற மாநிலங்களில் காணப்படும் வசதிவாய்புகளுடனும், கல்வியறிவுடனும் ஒப்பிடும் போது மலையகப் பெண்கள் தமக்குரிய உரிமைகளைக்கூட அறியாமலேயே வாழ்ந்துள்ளனர். சகலநிலையிலும் பின்தங்கிய மலையகப்பெண்களிடம் இப்படிக் கூறுகின்றார் கவிஞர் புனிதகலா.
அடடா…
அது என்ன உன்
சிறகுகளில் புராணப் பிசுபிசுப்பு?
அறிவுச் சுடரொளியில்
உலர்த்திக் கொள் விரைந்து
…………..
அதே பெண்ணியச்சிந்தனையோடு க.கவிதாவின் கவிதையொன்று இப்படிக் கேட்கிறது.
மலைகளேறி
மழையில் நனைந்து, விறைத்து
கொழுந்து சுமந்து, இறக்கி
களைப்போடு வீடு வருகின்றேன்
வழமை போலவே
வழமைக்கு மாறாக
என்றாவது
ஒரு கோப்பைத் தேனீர் தந்து
அதிர்ச்சியின்பத்தால்
சிலிர்ப்பூட்ட
உன்னிடம் ஏனில்லை
என்னைப் பற்றிய சிறு எண்ணம்
- க.கவிதா
வெளியில் வேலை வாய்ப்பென்று பெண்கள் கொளுந்து கிள்ளப் போனாலும் வீட்டிலும் வேலைகளைப் பெண்களே தம் முதுகில் சுமக்கும் பெண்களின் யதார்த்தமான ஒரு கேள்விதான் இவருக்கும் வந்திருக்கிறது. அண்மைக்காலங்களில் மலையகப்பெண்களின் வாழ்வுநிலை சிறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது, தேயிலை பறிப்பதை தவிர்த்து கல்வி தரத்தினை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பான்மையினர் உரிமை, வலிமை, கல்வியனைத்தையும் ஆதிக்க சக்தியிடம் அடகு வைத்திருப்பவர்களாகவே வாழ்கின்றனர்.
…….
தாய்ப்பாசம் என்பது பொதுச் சொத்து. இக்கவிதை நூலின் ஒரு கோடு போல பல இடங்களில் தாய்பாசம் இழையோடுகிறது. சாதரணமாக தன் உயிரை வயிற்றில் சுமப்பவளிடம் ஏற்படும் தாய்ப்பாசம் ஒவ்வொரு உயிருக்கும் உடைய ஒன்று. மலையகத்துத் தாயின் வலியை அறிந்த ஒரு பிள்ளையின் பாசம் சுமந்த வரிகள் மீனால் செல்வனின் கவிதையில் கரைகிறது. தேயிலைக் கொளுந்து பறிக்கும் கூடையைத் தலையில் தினமும் சுமந்து செல்வதால் தாயின் தலையில் ஏற்பட்ட பள்ளத்தை காட்டி எம் மனதில் வடுவை ஏற்றிப் போகிறார் கவிஞர். தம் பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் ஏற்றுவதற்காக வாழ்க்கையோடு போராடும் தாய்மார்களின் வலி ஊறிய வாழ்க்கையோட்டம் பல கவிதைகளில் மனக்குருதியாய் பீறிடுகிறது.
என்னைத் தேடாத பணத்தை
நான் தேடி
ஓய்வில்லாதோடி
கூடுவாரோடு கூடி
பலரிடம் பாசாங்காய் பல்லிளித்து
கழுத்துக்குமெல் மட்டுமே
அதிகமாய் வாழ்ந்து
தலைகீழாய்த் தொங்குகின்ற
வெளவாலின் வாழ்வன்ன போதுகளில்
தசாப்தங்களைக் கடத்திவிட்ட நான்
இன்றிரவில்
உன்னை நினைக்கிறேன் தாயே!
மண்டையோட்டில் மாறாத பள்ளத்தையும்
அடிவயிற்றில் ஆழியாத கோடுகளையும்
போட்டுக்கொண்ட தாயே
- மீனால் செல்வன்
………..
நாமெல்லாம் துணிகளுக்காய்
பிய்த்துக் கொண்டிருக்கையில்
அம்மணமாய் ஒருவன்
அரங்கேறி விடுவான்
- சந்திரலேகா கிங்ஸ்லி
சந்திரலேகாவின் இந்த நான்கு வரிகளில் வலிசுமந்த வாழ்க்கையை ஆயிரம் கோணங்களில் காணமுடிகிறது. துன்பியல் கட்டங்களால் நிரப்பப்பட்ட இம்மக்களின் வாழ்க்கைவட்டம் ஆதிக்க அதிகார சக்தியினால் முடக்கப்பட்டிருப்பதும், வந்தேறு குடிகளென தமிழர்கள் நாமே அவர்களை புறக்கணித்து வருவதும் இன்றும் நடைமுறையில்க்காணும் நாம் வெட்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
…..
அட்டைக்கடி பொறுத்து அந்த
கங்காணி கத்தல் பொறுத்து – உன்
அப்பன் உதை பொறுத்து
பொருளாதார இடி பொறுத்து – கண்ணே
உணவு உடை தந்திடுவேன் – நல்
உயர் கல்வி தந்திடுவேன் – என் சொத்தே
நீ எனக்கு தருவாயோ – நம்
இனத்தின் விடிவுதனை என்றென்றும்
என் கருவறைக் கூலியாய்!
- சு.உஷாநந்தினி

பாகுக்கும் பருப்பிற்குமாய் சங்கத் தமிழைக் கேட்ட ஒளவை போல. தன்பிள்ளையிடம் கருவறையில் சுமந்த கூலி கேட்டுப் தன் குழந்தையிடம் பேரம் பேசும் தாயின் இக்கொடிய யதார்த்தத்தை நாம் எப்போது இல்லாதொழிக்கப் போகின்றோம். கவிஞன் வாழும் சூழ்நிலையே கவிதைகளை வழிநடத்துகின்றன என்பதற்கு இக்கவிதையே ஒரு நற்சான்று.
சமூகத்தினரின் துயரங்களும், பிரச்சனைகளுமே பாடுபொருளாகக் காணப்படும் இத்தொகுதியில் முண்டாசுக் கவிஞன் பாரதியின் பாதிப்பையும் கோபத்தையும் இம்மக்கள் மத்தியில் பெரிதும் உணரக்கூடியதாக உள்ளது. இக்கவிதை நூலைப் படித்துமுடித்த தருணம் இதில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் மலையகப்பெண்களின் வாழ்வியலை எத்தனை தூரம் எடுத்தியம்பி ஆழமாய்ப் பதித்திருக்கிறது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதையும் தாண்டி மலையகப் பெண்களின் கவிதைகளை சேகரித்து அதை தொகுத்து, பின்தங்கிய உலகினை முன்னோக்கி நகர்த்தும் ஒருசிறு முயற்சியாக ”இசை பிழியப்பட்ட வீணை” தொகுதியை இச்சமூகத்திற்கு கையளித்த ஊடறு வெளியீட்டிற்கு வாழ்த்துக்களும் மனம் நிறைந்த நன்றிகளும்.

அலங்கரித்து வரும் வெறும் வார்த்தை ஜாலங்களால் பின்னப்பட்டதல்ல இக்கவிதைகள். ஒவ்வருவரின் மனக்குமறல்களும் பிரசவித்துப்போட்ட கோபக்கங்குள் வாசகனின் விரல்களை வழி நெடுகச் சுடுகின்றன. தினசரி தேவைகளுக்கே வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்ப் போராடும் பின்தங்கிய சமூகத்துப் பெண்களிடம் நாம் எவ்வளவு தூரம் கவியாளுமையை எதிர்பார்க்கமுடியும்? கவித்துவம் நிறைந்ததா, சூழலையும் வலியையும் எத்தனை ஆழமாய்ப் பேசுகிறது, என்ற அளவீடுகளை இத்தருணத்தில் புறந்தள்ள விரும்புகிறேன். இதற்குரிய விடைபோல வரும் ஆர்த்தியின் சில வரிகளோடு இப்பகிர்வை தற்போது நிறுத்துகின்றேன். இன்றை நாளின் மழையும் சிறுதூரல்களோடு தன்னை நிறுத்திக்கொண்டது
இத்தோடு.
மரத்தில் கவிந்த இருளை
கலைக்க முயற்சிக்கும்
மின்மினியாய் என் மனசு
எருமையின் முதுகில்
எண்ணி எண்ணி
உண்ணி பொறுக்கும்
மைனாவாய் சிலநேரம்
கற்பனைப் பையுடன்
தட்டேந்திய கவிஞன்
கவி புனையத் தோன்றவில்லை – என்
பேனை மூடிக்கொண்டது முகத்தை..

நன்றி - இனியொரு
...மேலும்

Jun 19, 2011

நீ மூழ்கி இறந்த இடம் - (தமிழில் - ஃபஹீமாஜஹான்)


நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும் அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப் பறந்து செல்கிறது

நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....

உற்றார் உறவென்று யாருமற்ற
இடையச் சிறுவனொருவன்
இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும்
தண்டனையின் நிமித்தம் இழந்தவனாக
தொலைந்துபோன மாடொன்றைத் தேடியவாறு
இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து
உடைந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை
தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது இன்னும்

மூழ்காமல் இருந்திடத் தனது கை கால்களை அடிக்கும் வேளை
நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை
இக்கரையை அடைந்த யாரோ மூச்சிரைத்தவாறு
ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம்,
சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி,
பெயரைத் தானும் அறிந்திராத தனது தாய் தந்தையரிடம்
துயரத்தைச் சொல்லி தனியே விம்மும்
அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல்
எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர்
அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு.

பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே
கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது
அந்த அனாதைப் பிள்ளையின் சடலம்.
ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.

கூடியிருந்த யாவரும் கலைந்து சென்றதன் பின்னர்,
எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து
வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்பதற்காக
உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை
நானும் பின் தொடர்ந்தேன்
அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்

பள்ளிக்கூடம் போய்வரும் இடைவழியில்
பிஸ்கட்டுகளை
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு
கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே
மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச் சிரித்தவாறு கையசைக்கும்
உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து...
நின்று பார்க்கையில்
மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும்
நீ அணிந்திருந்த கந்தல் சட்டை
உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட
ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன்
பல காலம் சென்ற பின்பும்

இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்போழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ
நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே
மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ......
தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில்
சேற்றினிடையே ஒளிந்து கொண்டு,
இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.....

- அஜித் சி ஹேரத்

தமிழில் - ஃபஹீமாஜஹான், இலங்கை
...மேலும்

Jun 16, 2011

"ஆதியில் விடுபட்டக் கனவு" அனாரின் கவிதைகள் - ஒரு பார்வை - தேன்மொழி (இந்தியா)


திருவாரூரில் பிறந்த தேன்மொழி வேதியியலிலும், வரலாற்றிலும் முதுநிலை பட்டம் பெற்றவர். தற்போது களப்பிரர் காலம் குறித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.தஞ்சையில் இலக்கியச் சோலை என்ற அமைப்பை நிறுவி பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு களம் அமைத்துத் தந்திருக்கிறார். திருநங்கைகளின் படைப்புகளைத் தொகுத்து ‘ மாதவப் பிழை ’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் வெளியாகி கவனத்தை ஈர்த்தவை. அவை ’துறவி நண்டு’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளன( காலச்சுவடு 2008)
நெற்குஞ்சம் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பை மணற்கேணி பதிப்பகம் ( 2009) வெளியிட்டுள்ளது. இவரது அடுத்த கவிதைத் தொகுப்பு ‘ தினைப் புனம் ‘ மார்ச் மாதம் வெளிவரவுள்ளது.
மணற்கேணி இதழின் இணை ஆசிரியராக இருக்கும் தேன்மொழி இப்போது வணிகவரித் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிகிறார்

ஈழம் என்ற சொல் சங்க காலத்திலிருந்து தொடர்வது. இன்று அதன் பொருள் திரிபடைந்து நிற்கிறது. ஈழம் என்றாலே போர்க்களம் என அர்த்தம் கொள்ளக் கூடியதாக அந்தச் சொல் ஆக்கப்பட்டுவிட்டது. வீரம் என்று அதைக் கொண்டாடுபவர்களும் சரி; துயரம் என்று அதைப்பற்றிப் புலம்புவர்களும் சரி அந்தச் சொல்லின் பொருளை ஒற்றைத் தன்மை கொண்டதாகத் தட்டையானதாகச் சுருக்கிக் கொச்சைப்படுத்திவிட்டார்கள்.அதனால்தான் ஈழப்போரின் இறுதிக்கணங்களில் கைக்குழந்தைகளோடு தவித்தப் பெண்களைப் பார்த்தபோது அவர்களின் முகம் சுளித்தது.’ இந்தச் சூழலிலும் எப்படி இவர்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது? ‘ என அருவெறுப்போடு அந்தக் குரல்கள் வெளிப்பட்டன.

போர் விளையும் நிலங்களில் பெண்களின் இருப்புப் பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகிறது. போர் நிலத்தில் வாழும் பெண்கள் அதனால் சீரழிக்கப்பட்டதற்கு மட்டுமின்றி, போரைக் கண்டு நடுங்கி ஒடுங்கிவிடாமல் அதை எதிர்கொண்டார்கள் என்பதற்கும் எழுது கோல் தாங்கிய விரல்களே சாட்சிகளாக இருக்கின்றன.போரின் உறைவாள் போர் மறந்து உறங்க, வெற்றிக் கொள்ளப்பட்ட மண் தேவைப்படுவதுபோலவே, அடிமைகொள்ளப்பட்ட பெண் உடல்களும் தேவைப்பட்டன. போரும் விடுதலையும் சமதள இணைக்கோடுகளாக பயணிக்கும் வேளையில், பெண்கள் போரிலிருந்தும், மரபின் ஒடுக்குதலிலிருந்தும், சுயக் கட்டுப்பாடுகளிலிருந்தும், ஆணின் அதிகாரப்பிடியிலிருந்தும், சமூகச் சிக்கல்களிலிருந்தும் விடுபட அவர்களுக்குக் கிடைத்த எதிராயுதம் எழுத்து மட்டுந்தான்.தம்மைத் தற்காத்துக்கொள்ளவும், தாம் பட்டக் காயங்களுக்கு மருந்திட்டுக்கொள்ளவுமான சூட்சுமத்தை எழுத்துக்குள் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். போர் நிலத்திலும், அடிமைத் தனத்திலும் புரண்டழும் மனது, மழைக்கு வளைந்து நிற்கும் தாவரம். மழையின் நீரை இலை வடிய விடுவது போல் சோகங்களையும், துக்கங்களையும் வடியவிட்டு நிமிர்ந்த திடத்துடன் அது எழுந்து நிற்கிறது. தன் மீதே தனக்கு அபரிமிதமான நம்பிக்கை எழும்போது மட்டும்தான் வழுக்கு நிலத்தில் காலூன்றல் சாத்தியமாகிறது.ஈழப் பெண் எழுத்துக்கள் போரின் அவலங்களையும்,அடிமையாய்ப் பூட்டப்படும் அருவெறுப்புகளையும் எழுதும் அதே நேரத்தில் சுயம் சார்ந்த விடுதலை மொழிகளையும் பதிவுசெய்துள்ளன.அவர்கள் ஒரே சமயத்தில் இருவிதமானப் போரை நடத்தியிருக்கிறார்கள். இன விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி தமது சுயத்தை மீட்பதற்கான இன்னொரு விடுதலைப் போராட்டத்தையும் அவர்கள் ஒருசேர நடத்தினார்கள். ஆயுதம் ஏந்திப் போரிட்ட யுத்தகளத்தில் பல பெண் போராளிகள் தமது உயிர்களை இழந்தனர். அதுபோலவே தமது அடையாளத்தை மீட்பதற்கான போரில் செல்வி, சிவரமணி முதலிய கவிஞர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.உணர்தலுக்கும், எதிர்த்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில் நாம் காண முடியவில்லை. புலம்பலும், போராட்டமும் ஈழப் பெண் எழுத்துக்களில் ஒரே கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.இந்தப் பண்பை நாம் ஈழத்து ஆண் கவிஞர்களிடம் பார்க்க முடியவில்லை.எவ்வளவுதான் கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தாலும் ஈழத்து ஆண் கவிஞர்கள் இன்னொரு நிலையில் ஆணாதிக்கம் என்னும் ஒடுக்குமுறை மனோபாவத்தின் தாங்கிகளாகவே செயல்பட்டார்கள் என்று சொல்வது குற்றச்சாட்டு அல்ல.

1986-ல் வெளியான “சொல்லாத சேதிகள்” (பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணம்) அன்றைய பெண் கவிஞர்களின் சில கவிதைகளைத் தொகுத்து முன்வைத்தது. அ .சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, உ.ஒளவை, செல்வி, மசுறா ஏ.மஜீட், பிரேமி, ஊர்வசி, மைத்ரேயி போன்றவர்களின் தோந்தெடுக்கப்பட்ட இருபத்து நான்கு கவிதைகள் அத்தொகுப்பில் பிரசுரமாகியுள்ளன. ” அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன” என்று கோபத்தோடு ஆணாதிக்க மனோபாவத்தைச் சாடும் அ.சங்கரியின் கவிதையோடு ஆரம்பிக்கும் அந்தத் தொகுப்பு, ‘ ' ' மனிதகுலத்தின் அரைப்பகுதியனராகியத் தம்மை மனிதம் அற்ப வெறும் இயந்திரங்களாகவும்,கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேண்டும்’என்ற நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டது.ஆனாலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் பொதுவான பெண்ணியக் கவிதைகளின் தன்மையையே கொண்டிருந்தன . உ.ஒளவையும்,சன்மார்ககாவும் போர் குறித்த கொடுமைகளைத் துயரத்தில் நனைந்த சொற்களால் அதில் வரைந்துள்ளனர்.வேறுசிலர் நாட்டின், இனத்தின் விடுதலையை முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார்கள்.ஒருசில கவிதைகளில் நாம் பெண்களின் தனித்துவத்தைத் தரிசிக்கமுடிகிறது. ஊர்வசியின் இன்னும் வராதா சேதியில் ( பக்கம் 41)போர் நிகழும் காலத்திலும்கூடக் காதல் மனம் விழித்திருப்பதைப் பார்க்கிறோம்:

”புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம் தான்
எங்கேனும்
கோடை மழைக்கு காட்டுமல்லி
பூத்திருக்கும் ….”

இந்த வரிகள் ஈழப் பெண் எழுத்துக்களின் செழுமை மற்றும் வளர்ச்சியின் முன்னோடிக் குரலாக விளங்குகின்றன.
அ.சங்கரியின், இடைவெளி என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்:

”அக் காதலை,
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன் ” (பக்கம் 6)

என்ற வரிகளைப் படிக்கும்போது ஒரு முதிர்ச்சி தெரிகிறது. தனது காதலைத் தோழிக்கு மட்டுமே எடுத்துக் கூறி நின்ற சங்ககாலத் தலைவியிலிருந்து வேறுபட்டு இக்கவிதையின் ஊடாக வெளிப்படும் பெண், சமூகத்தின் முன்னால் சுய உணர்வோடு கூடிய மொழியில் காதலைத் துணிவோடுப் பேசுகிறாள்.

1983ஜூலைக் கலவரத்துக்குப் பிறகு வீரத்தையும், காதலையும், புலம்பலையும் ஒரு சேரப் பேசிய ஈழத்துப்பெண் குரல்களின் தொடர்ச்சியாகத்தான் 2004 ல் “ஒவியம் வரையாத தூரிகை” என்ற தொகுப்பில் வெளிப்பட்ட அனாரின் குரலைக் கேட்க முடிகிறது. தன் விளக்கங்களாகவும், சுய இரக்க மொழியாகவும்,புலம்பல்களாகவும் அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனாரை அன்றையக் காலக்கட்டத்தின் பொதுத் தளத்தில் வைத்துத்தான் பதிவு செய்ய முடிகிறது. சமகால ஈழத்துப் பெண் எழுத்துக்களின் உட்பிரிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படும் ஒரு தொகுப்பாகத்தான் இருக்கிறது ஓவியம் வரையாத தூரிகை.

சூரியனைப் பற்ற வைக்க
உன்னால் முடியாது … (பக்கம் 17)

உனது பணிப்பின் பேரில்
நான் பிறக்கவில்லை … (பக்கம் 54)



இறகுகளால் நெய்த
உன் பஞ்சுக் கூட்டுக்குள்
இந்த நெருப்பை வரவேற்காதே
……………………………..
பனித்துளிக் கோலம் போட
சூரியனால் முடியாது (பக்கம் 49)
என அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனார்,

கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்
என்ன செய்வது
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால்
அந்த உச்சிக்கு
வர முடியாதே

………………… (சொல்லாத சேதிகள் பக்கம் 8)

எனப் பகிரங்கப்படுத்தும் அ.சங்கரியின் தொடர்ச்சியாகத் தான் தென்படுகிறார்.

இயலாமை என்பது உனக்கும் உள்ளது, ஆளுமை என்பது எனக்கும் உரியது என அதிகாரத்தோடு உரத்து முழக்கமிடும் குரலைக் கீழ்க்கண்ட வரிகளில் நாம் காணும்போதுதான் அவரைப்பற்றிய நம்பிக்கைத் துளிர்விடுகிறது:

யாருமற்றதோர்
பாழ்வீட்டில் கண்ணீர் இழை எடுத்து
………………………………………
கனவுகள் சுரந்து
உறக்கத்தை மீறி வழிகிற
இரவுகள் என்னுடையவை (பக்கம் 51)

தழும்புகளைச் செதுக்கிடும்
உளிகளின் சப்தங்களும்
கரு நீல இருளிற் தெறித்து விழுகின்றது (பக்கம் 48)

எதார்த்தச் சிக்கலிலோ, எழுத்துச் சிக்கலிலோ, கருத்துச் சிக்கலிலோ தளைபடாமல், வெடித்துக்கிளம்பும் ஒரு புதிய குரலை அனாரின் அடுத்தத் தொகுப்பு நமக்குக் காட்டுகிறது. ’ஒவியம் வரையாத தூரிகை’யில் வெளிப்படாத அந்தக் குரல் அவரது இரண்டாவது தொகுப்பில் வெளிப்படுகிறது. விதைக்குள் உறைந்திருக்கும் விருட்சம் போல் வெளி வரக் காத்திருக்கும் ஒரு கவிதை மனத்தை இந்தத் தொகுப்பில் நாம் பார்க்கிறோம்.இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புனைவுகளற்ற அனாரின் எழுத்துக்கள் அவரது சாத்தியப்பாடுகள் குறித்தான எதிர்பார்ப்புகளைக் கூட்டுகின்றன.

சாபங்கள்
என் பூமியில் கொட்டும் மழை
சோகங்கள்
என் வானில் பரவும் வெயில் ( பக்கம் 38)

என்று, சோக மொழியில் அவர் சொன்ன போதும்,மழையானாலும், வெயிலானாலும் கூடு தேடாத பறவையைப் போன்றவள்தான் தானென்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் அனார் .

இரு விழிகளைக் கொழுத்தி
உயிரூற்றி எழுதுகிறேன்
உயிரைக் கொழுத்தி வைத்து
நீ விழிகளால் வாசி
…………………………
சாமத்தின் பனித்தூவலில்
கவிதை கிடந்து
சுருளட்டும் புரளட்டும் விடு (வருந்(த்)துதல்)

ஓர் முத்தத்ததைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு (தணல் நதி )

இந்தக் குரல் தமிழ்ச்சூழலில் முற்றிலும் புதுக்குரல் என்பதை ஒத்துக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்கலாம். வேட்கையில் பூத்துக்கிடந்த சங்ககாலப் பெண் கவிகளின் தொடர்ச்சியான குரல்தான் இது என்று நம் புத்தி உரைக்கலாம்.ஆனால், வேட்கையும், மன்றாட்டமும், எதிர்பார்ப்பும், ஏக்கமும் கொண்ட சங்க காலப் பெண் மொழி வேட்கை மொழி மட்டுமே. ஆனால் அனாரின் “ எனக்குக் கவிதை முகம்” காட்டுவது ஆளுமையின் மொழிப்பரப்பில் எழுந்து நிற்கும் வேட்டை மொழி.

பாணணின் இசை உரக்க ஒலிக்க வேண்டுமா என்ன? பாடுவதின் சுதந்திரம் பாணணின் கைகளில் இருக்கிறது. அனாரின் படைப்புக்குள் தகித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களின் சுதந்திரம், நம் எண்ணங்களைப் பின் தள்ளிவிட்டுக் காலத்தின் முன்போய் நிற்கிறது. வேட்கை குறித்தத் தனது உணர்வுகளையும், தனது தேவைகளையும் முன் வைத்து மொழியப்பட்டது சங்கக்காலப் பெண் குரல். ஆனால் அனாரின் குரல் வேட்கையில் ஊறித் திளைத்து, வெற்றியின் பின் எழுந்து நிற்கும் மொழிதல்.மறைக்க விரும்பாத வேட்கையின் சித்திரங்களை மென்மையான மொழிகளால் எழுதிச் செல்லும் அனார் தற்காலப் பெண் கவிஞர்களில் முதலிடத்தில் நிற்கிறார்.

”உன் குரலுக்கு இன்று நீ
புரவிகளைப் பூட்ட வில்லையா
………………………………
அகோரப் பசி எடுக்கையில்
அந்தப்புரத்தின் அரசி
ஆர்வத்துடன் பருகும்
அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன்குரல் என்ற திராட்சை ரசம் ” (குரல் என்ற நதி)

அந்தப்புரத்தின் அரசிக்கு அரியணை அடங்கிக்கிடந்தது வரலாறு.அகோரப் பசி எடுக்கையில் ஆதிவனத்தின் கனிகளைப் புசித்தவளாக ஆரம்பித்து அனைத்து ருசிகளும் உள்ளது தான் உன் குரல் என்ற திராட்சை ரசம் என்ற வார்ததைகளில் முடிக்கும்போது, தீராத வாழ்க்கையின் மெல்லியல்புகளை வெவ்வேறு சாயல்களில் நம்மோடு அனார் பகிர்ந்து கொள்கிறார்.

'' வண்ணத்துப் பூச்சிகளின் பிரம்மாண்டமான,
கனாக்கால கவிதை நானென்பதில் ,
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும் , ''

ஒரு துண்டு வானத்தைக் கைகளில் தருவது போல் சந்தேகம் மறுத்த தன் சுதந்திரத்ததை எழுதிச் செல்லும் இந்த வரிகள் கேள்விகளுக்குள் அடங்க மறுப்பவை. ஆதியில் விடுபட்டக் கனவை, நிகழ்காலக் கவிதையாக்கிக் காலத்தில் நிரப்புவதென்பது பருவ காலங்களைச் சூடித்திரியும் இந்தக் கடற்கன்னிக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

“ என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது”


“ஓநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை”

''வேட்டையாட்டப்பட இரையை
சத்தமின்றி புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்”

போன்ற படிமங்கள் தனிமையை , அதன் கொடுமையை நம்மிடம் தெரிவிக்கின்றன. தனிமையின் முகம் கொடூரமானது. தனித்திருக்க விரும்புபவர்கள் உண்டு. தனிமையில் இருக்க யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் உயிர்களுக்கு அது இயலாதது. தனிமையின் கோர முகம் பல வடிவங்களில் தன்னைத் திறந்து கொள்ளும். அதை எதிர் கொள்ள அசாத்திய உணர்வு வேண்டும். தனிமையின் பள்ளம் நிரப்பப்பட முடியாதது. தனிமை அனாரின் மொழிகளில் வேட்டையாடப்பட்ட இரையை சத்தமின்றிப் புசித்தபடியிருக்கும் அரூப மிருகமாகிறது. தனிமையின் அகோரத்தை வார்த்தைகளில் வடித்துக்காட்டிய அனார், அதிலிருந்து விடுபட்டப் பெண்ணாய்:

“ சாபத்தை உடைத்துப் பூத்திருக்கிறேன்”.
“என் மீது கனவு போல் பெய்கின்றது உன் மழை”

என்னும் போது தனிமையின் போர்வை விலகிக் கொள்கிறது. பின்பு,

”மேகங்களுக்கு மேலேறிச் சென்று
நிலவின் கதவைத் திறந்து
எடுத்துக் கொள்
கொஞ்சமும் குறையாத என்னை ”(பூக்க விரும்புகின்ற கவிதை)

என்னும் வரிகளில் ஆளுமையின் இறுமாந்த குரலாக அது வெளிப்படுகிறது.

“ அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்”. என்ற உணர்வில், பக்தி மார்க்கத்தில் நின்று கடவுளைக் காதலால் கைது செய்து கட்டளைகள் பிறப்பித்துக் தன்னாளுகைக்குள் நிறுத்தி உன் ஆதியந்தம் எனதாகும் என்ற ஆண்டாளின் குரலைக் கேட்க முடிகிறது.


அனாரின் காதல் உணர்வுகள் பொதுப்படையானவை, ஆனால் அவரது காதல் மொழிகள் தனித்துவமானவை . நம் ஒவ்வொருவருக்குள்ளும் காதலை ஊற்றி எரிய விடுகிறார். அவருடைய காதல் ஓர் உயிருக்கானது என்பது பட்டாம் பூச்சிகளின் உலகத்தை உள்ளங்கைக்குள் மூடி வைப்பது போன்றதாகும். காதல் விரிந்து பரவும் விருட்ச நிழல். யார் வேண்டுமானாலும் அதற்குள் தன்னை அடைக்கலப்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அனார்.

“ காற்றைத் தின்ன விடுகிறேன் என்னை “ (காற்றின் பிரவாகம்) என்ற அனாரின் ஆளுமைக் குரல்,”நான் பாடல் எனக்கு கவிதை முகம்” உடல் பச்சை வானம் “ என்று அறிமுக படுத்திக்கொள்ளும் இத் தொகுப்பில் சற்று அடங்கித் திரும்பவும் எதார்த்தத்துக்குத் திரும்புவதாக உள்ளது. தாய்மை, கோரிக்கை, சுய அடையாளம் என்பன போன்ற மொழிகளால் நிரம்பியுள்ளது “உடல் பச்சை வானம்” என்ற அவரது தொகுப்பு. எனினும்,

“ பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்
காற்றில் வசிப்பவன்
காலத்தை தோன்றச் செய்பவன்
இன்று என்னைத் தீண்டலாம் ….. (பக்கம் 27)
எனும் போது அனாரின் குறையாத ஆளுமையைக் காணமுடிகிறது.

’ திரும்பத் திரும்பக் கேட்கும் குரல்’எனவும், ’வெற்றுப் புலம்பல்கள் தான் பெண்ணியம்’ என்றும் பெண் கவிஞர்களின் எழுத்துகளை நிராகரிப்பவர்களிடத்தில் அனாரை முன்னிறுத்தி நாம் கேள்விகளைத் தொடுக்கலாம். காதல், அன்பு, வாஞ்சை, வேட்கை என்பவற்றைக் காத்திரமாக வெளிப்படுத்தும் அனாரின் மொழியில், வலிகளையும், எதிர்ப்புகளையும், தன் இருப்பின் அடையாளத்தையும் இடையிடையே நாம் கேட்க முடிகிறது. சமூகத்தில் நிராகரிப்பும், அவமதிப்பும், அடக்குமுறையும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு அவை தவிர்க்கவே முடியாததாக இருக்கின்றன என்பதை அனாரின் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. காதலின் அனுபவத்தை, அதன் இன்பியல்புகளைப் பாடிச் செல்லும் குறிஞ்சியின் தலைவிக்கும்கூட இந்தச் சமூகத்தின் ஒடுக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி இருக்கவே செய்கிறது.

நீ அறுவடை முடித்துத் திரும்புகின்றாய்
இன்னுமிருக்கின்றது விளைச்சல் (பக்கம் 58)

இவ்வரிகள் காதல் பகிர்வின் வரிகளாகத் தோன்றினாலும், எடுக்க எடுக்கக் குறையாத பெண்ணிய இருப்பைப் பெண் ஆளுமைகளை முன் வைப்பவையாகவும் திகழ்கின்றன.

அனார் தற்காலச் சூழலில் செயல்படும் சக ஆளுமைகளிடமிருந்து தனித்து நிற்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. முதலில், அவர் தன் மத அடையாளத்தை முன்னிறுத்திக் கவனத்தை ஈர்க்கவில்லை. படைப்பின்மீது முழுமையான நம்பிக்கைகொண்டவராக அவர் உள்ளார். ஒரு படைப்பாளியின் நம்பிக்கை, தன் படைப்பு சார்ந்த விஷயமாக மட்டுமே இருப்பதுதான் படைப்பின் உச்சம். மத, இன, வர்க்கச் சிக்கல்களையும், அதன் கோரல்களையும் எழுத்துக்களாக வெளிப்படுத்துதல் என்பது வேறு ஆனால் அவற்றையே தன்னை நோக்கிக் கவனத்தை ஈர்ப்பதற்கும், தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குமானத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்திக்கொள்வதென்பது வேறு.நமது சூழல் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தன்னலவாதிகளாலேயே நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கிடையே படைப்பை மட்டுமே தனது அடையாளமாக முன்வைக்கும் அனார் மகிழ்ச்சியளிக்கிறார்.

பெண்ணியம் என்பது தன்னை நிறுவுவதாகவும், தன் இருப்பை அடையாளப் படுத்துவதாகவும், சமூக மற்றும் மரபின் வெற்றுக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதாகவும், ஆண்மையநிலைக் கூறுகளை எதிர்பதாகவும் மட்டுமே பலரால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. “ ஒவியம் வரையாத தூரிகையில்”இந்தச் சூழலுக்குள் ஒன்றிப் போனவராகவே அனார் வெளிப்பட்டார். ஆனால் அதன்பிறகு வெளிவந்த மற்றைய இரண்டு தொகுதிகளிலும் பெண்ணியம் கடந்து, தன் விடுதலையைத் தானே எழுதுவதாகவும், தன் சுதந்திரத்தைத் தானே நிறுவிக்கொள்வதாகவும், எல்லைகளற்ற ஆளுமையுடன் காதல் என்பதை வாழ்வாக்கி, அதில் திரண்டெழும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அனார் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.இதைப் பெண்ணிய படைப்புச்செயல்பாட்டின் அடுத்த கட்டம் என்று சொல்வதில் தவறில்லை.

அனாரிடம் அடையாளப்படுத்தவேண்டிய இன்னுமொரு தனித்தன்மை அவர் தனது சூழலிலிருந்து தன்னை எப்படி விலக்கி வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதாகும். போரால் சிதைவுண்ட நிலத்தில் காதலைப்பாடவும், இன்னும் போரின் எச்சங்களாக மீந்து கிடக்கும் வாழ்வைக் கொண்டாடவும் வேண்டுமெனில் சூழலால் பாதிக்கப்படாத அதிதீவிர மனத்திட்பம் இருக்கவேண்டும்.அது அனாருக்கு வாய்த்திருக்கிறது. போரின் அவலங்களை எழுதவில்லையே என அவரைக் குற்றம் சாட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் அதுதான் அனாரின் பலமாக இருக்கிறது.வாழ்வின் உணர்வுகளைப் படிமங்களாக உருவாக்கிக்காட்டும் படைப்பாற்றல் அவரிடம் குவிந்துகிடக்கிறது, அது நம்மை வியக்க வைக்கிறது. சூளையில் இட்டுப் பொசுக்கியபோதும் குளிர் நிலாவை வர்ணித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு ஈசன் அருள் அந்த மன உறுதியைத் தந்ததென்றால், அனாருக்கு படைப்பு மனமே அந்த ஆற்றலை அளித்திருக்கிறது. ஆயிரம் போர்கள் நடந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிக் காதல் பேசும் வீரக்குடியின் தொன்ம விழுதுகள் நாங்கள் என அனார் நிரூபிக்கிறார்.
சமகாலத் தமிழ் எழுத்துகளில் புதிய பரிமாணம் கொண்டதாகவும், நிராகரிக்கப்பட முடியாததாகவும், முக்கியத்துவும் வாய்ந்ததாகவும் இருக்கும் அனாரின் கவிதை வயலில் நாம் அறுவடை முடித்துத் திரும்பினாலும் இன்னும் மீதமிருக்கும் விளைச்சலே அனாரின் வெற்றி.

(27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை )
...மேலும்

Jun 12, 2011

முதல் பிரவேசம் - 'கவிதையின் ஒற்றைக்கயிறு' -குட்டி ரேவதி


எழுத்துலகிற்குள் முதல் பிரவேசம் என்பது, முதல் தொகுப்பை வெளியிட்டதாக இருக்கமுடியாது. முதல் படைப்பு பெற்ற பிரசுரமாகத்தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், தொகுப்புகளாய்ப் பதிப்பிப்பது என்பது சமீப காலங்களில் எவ்வளவு அதிகாரமும் வியாபாரமும் சார்ந்தது என்பதை நான் தெள்ளத்தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். அதிலும், கவிதையை நூலாக வெளியிடுவதற்கும்,அதை வைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்குமென நிறைய உத்திகளை எழுத்தாளர் கையாளவேண்டியது இருக்கலாம். அது ஒரு படைப்பாளியின் மனநிலைக்கு ஆரோக்கியமானது இல்லையே!

திருநெல்வேலியில், என்னுடைய கல்லூரிப்பருவம் அது. பாளையங்கோட்டையில், ஜங்ஷனில், டவுனில், ஹைகிரவுண்டில் என்று இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள் எப்பொழுதும் ஏதேனும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நான் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடர்ந்து வனம்’ கவிதைத் தொகுப்பிற்கான திறனாய்வுக் கூட்டமொன்று சிறு மொட்டைமாடிக் கூட்டமாய் நிகழ்ந்தது. அதில் முதல் முறையாக அந்நூலைப் பற்றிய சிறு கட்டுரையை எழுதி வாசித்தேன். இப்படியாகத் தான் கவிதையினுடான என் முடிச்சு விழுந்தது.

அத்தொகுப்பு, என் மொழியின் வெளி தேடி என்னை எனக்குள்ளேயே வேகமாய் உந்தித்தள்ளியது. கவிதை பற்றி அதுவரை இருந்த மதிப்பீடுகளை சிதிலம் செய்ததில் முக்கியமான பங்கை ஆற்றிய தொகுப்பு அது. அவரவர்க்கான மொழி உலகின் கதவுகள் வேறு வேறு என்பதை வெளிச்சப்படுத்திய தொகுப்பு. எழுதத்தொடங்கினேன். அப்பொழுது நான் பயின்று கொண்டிருந்த சித்தமருத்துவத்தின் பாடநூல்கள் எல்லாமும் வளமான சித்தர்கள் மொழியும் கருத்தும் ஊன்றிய நவீனக் கவிதையின் இன்னொரு செய்யுள் வடிவமாக விளங்கியதால், அதன் சொற்களும் கிளைச்சொற்களும் என்னுள் வேரூன்றின. தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.

அப்பொழுது ‘புது விசை’ இதழின் ஆசிரியராக இருந்த நண்பர், ச.தமிழ்ச்செல்வன், அவ்விதழுக்குச் சில கவிதைகள் அனுப்பும்படிக் கூறினார். அவ்விதழில் கொத்தாக என் கவிதைகள் பிரசுரமாயின. இன்றும் அவ்விதழின் அகண்ட பக்கங்களில் வெளியாகி இருந்த கவிதைகள் கண்களில் நினைவின் எழுச்சிகளாக எழுந்து நிற்கின்றன. அதையே எனக்கான முதன்மையான அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதற்குப் பின்பு, அங்கீகாரம் என்பது பெரும்பாலும் சுய மனித அதிகாரத்தினுடன் தொடர்புடையதாக மாறிவிட்டதால் அதன் பின்பாக நிகழ்ந்த எதையுமே நான் அங்கீகாரமாகவோ நினைவு வைத்துக்கொள்வதற்கான விஷயமாகவோ கருதவில்லை.

முதல் தொகுப்பு என்பது எப்படி நிகழ்ந்தது என்பதை விட முதல் கவிதை பிரசுரம் தான் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எழுதும் மனதிற்கு வீசமுடியும். கவிதை இலக்கியம் என்பது எந்த ஒரு சமூகத்திலுமே ஊசலாடும் ஓர் ஒற்றைக் கயிறு என்பதை நான் எழுத முயற்சித்த தொடக்கக் காலங்களிலேயே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் முக்கியமான விஷயம். இந்தப் புரிதல் எந்தவோர் அதிகாரத்திற்கும் எதிரான திசையிலேயே என்னை பயணிக்கத் தூண்டியது. அம்மாதிரியான ஆளுமைகளையே நான் தொடர்ந்து சந்தித்தேன். அவர்களுடைய படைப்புகளையே தேடிப்படித்தேன். அதற்குப் பின்பு மலிவான, ரசம் குறைந்த படைப்புகளின் மீதான நாட்டம் குறைந்தது. இன்னும் சொல்லப்போனால், முற்றுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த விஷயம் தான், சிற்றிதழ் வெளியில் தொடர்ந்து இயங்குவதற்கான ஆரோக்கியத்தை இன்றும் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மைய நீரோட்டத்திலிருந்தும், விளம்பரக்கூடாரங்களிலிருந்தும் என்னை விலகி நிற்கவும் சொல்கிறது!

கவிதை என்பது வரிகளாலான ஒற்றைக் கயிறு. அது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி திரிந்து திரிந்து முறுகி உருவாகிறது. அது அவரவர் இரத்தத்தாலும் உணர்ச்சிகளாலும் அவர்கள் பிறந்து வந்த சமூகச் சூழலாலும் வளர்க்கப்பட்ட முறைகளாலும் குழந்தைப்பருவ நினைவுகளாலும் ஆனதொரு கலவையாகத் தான் ஆகிவருகிறது. என்றாலும் அதன் மலினங்களைத் தன்னைத் தானே உதறிச் சிதறி, விட்டு விலகி, முறுக்கேற்றிக் கொள்வது மிக மிக அவசியமென பிரமிள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கும், அவரைப்பற்றிக் கேள்விப்படும், நிரூபிக்கப்படும் விடயங்களுக்கும் உள்ள இடைவெளி உணர்த்தியது.

நான் எழுத வந்தபொழுது, புனைவு எழுதுவதில் அம்பை தீவிரமான ஒரு படைப்பாளியாகவும் பெண்களின் மன எழுச்சிக்கு உகந்தவராகவும் இருந்தார். அவர் தவிர, சில பெண்கள் புதுக்கவிதையின் பொதுவெளியில் ஆண்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தனர். அது, நவீன இலக்கியத்தின் ‘செவ்விலக்கியக் காலக்கட்டம்’ போல வரைமுறையற்ற கடும் விதிகள் எழுத்திலும், உரையாடல்களுக்கு இடையேயும், வெளியேயும் இருந்து கொண்டே இருந்தன. ஆனால், என்னை ஈர்த்த படைப்பாளிகள் எல்லோருமே, சமூகத்தின் ஒப்பனைகளைச் சூடிக் கொள்ள மறுத்தவர்களாக இருந்தனர். தங்களை விளம்பரக்கண்ணாடிகளால் எதிரொளிக்க விரும்பாதவர்களாக இருந்தனர்.

அவர்கள் தாம் பிறந்து வந்த குடும்ப மூலம், சாதி, பிறந்து வந்த பால்நிலை, இதன் அடையாளங்கள் இவற்றைத் துறந்தவர்கள். அல்லது, துறக்கத்தீவிரமான முயற்சியையும் பயிற்சியையும் எடுத்தவர்கள். பிறப்பு அடிப்படையிலான எல்லா அடையாளங்களையும் எழுத்தின் கயிறு, நம்மையே தன் சாட்டையால் அடித்து அடித்து தோல் உரித்துக் கொள்ளச் செய்யவேண்டும். இந்தச் செயல்முறைகளில் ஈடுபட்ட, தொடர்ந்து ஈடுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளைத் தேடித்தேடித் தின்றேன் என்று தான் சொல்லவேண்டும். படைப்பாளிகளின் இந்தச் செயல்முறை, அவர்கள் பிறந்து வந்த குடும்பம், பெற்றோர், சாதி, பால் நிலை, மன இயல்பு, சுபாவம் எல்லாவற்றிலிருந்தும் படைப்பாளியைப் பிரித்து அறுத்து வருவதாகவும், கசடுகளாலான மனித வாழ்க்கையிலிருந்து எவரையும் உய்யச் செய்வதான மன எழுச்சியைத் தன்னகத்தே பெருக்குவதாகவும் இருக்கிறது. இதுவே கவிதையின் ஒற்றைக் கயிறு மீது என்னையும் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்கத் தூண்டுகிறது, ஒரு கழைக்கூத்தாடியைப் போல்!


நன்றி: புத்தகம் பேசுது
...மேலும்

May 24, 2011

ஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை


விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம்
நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம்
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை
மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை.
இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த
அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை
கல் கொண்டு எறிந்தான்
அதை அன்பென்று கற்பனை செய்துக் கொண்ட நான் பருவம் எய்தினேன்.
மாதம் மழை பொழிந்தேன்
தன் உறுப்பைக் கீறிப் பார்த்தும்
நிலா அவனுக்கு கருணை காட்ட வில்லை.
சூரியனின் புத்திரனாயினும்
அவனால் பருகவே முடியாத வெள்ளத்தை
வாய்க்கால் கட்டி தன் நிலத்தில் பாய்ச்சினான்
காதல் என்றான்
நம்பினேன்
என் தோழிகள் தர முடியாதது என்று சவால் செய்து விந்துறைந்தான்
அவன் விதைகளின் பழுப்பு மணம் ஒரு போதும்
அவளின் நாக்கு தரும் ஆம்பல் பூக்களை ஈடு செய்யவில்லை
சூல் கொண்டேன்
அவனால் கருத்தரிக்க முடியவில்லை என்ற பயம்
மீண்டும் கல் எறிந்தான்
சிசுவை ரத்தப் பெருக்கினேன், அவன் பெயரையும்


முடிவில்லாமல் அதைக் கழுவத் தொடங்கினான் அவன்


(மணிமொழிக்கு')

(புதிய இலக்கியக் காலாண்டிதழ் 361 டிகிரியில் வெளிவந்த கவிதை)

...மேலும்

May 21, 2011

'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒரு விமர்சனப் பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து, வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்....

'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'.

நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார்.

சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில்

ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்
தலை நீட்டலுக்கிடையில்
த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த
மாதம் தோறும் பணம் கேட்கையில்
அம்மாக்களின் இருதயங்களில்
ஆலமரம் சரியும் அரவம்....

என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது.

இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது.

அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப் பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண் முன்னே
கலையப்படும் போது - அது
தருகிற வழியும்... ரணமும்...
வேதனையாகி விரக்தியாகிறது...

மன உறுதிகள் குழைந்து
வீரம் தளர்ச்சியுற்று
உடம்பைக் கூறுபோடுகிறது...

இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது.

வாழ்வில்
அறியாத பக்கங்களை
தெரியாதென விட்டுவிட்டேன்...
அன்று அறியப்படாத - சில
பக்கங்களை அனுபவிக்கிறேன்
இன்று
அடுப்பங்கரையினுள்ளே
அடைபட்டுக்கொண்டு...

உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.

பாழ்பட்ட மண்ணில்
கால்பதித்த மக்கள்
சீர்கெட்ட சனத்தால்
சீரழிந்தது போதும்...

வாள்பட்டு நித்தம்
சீர்கெட்ட மக்கள்
சிதைந்தொழிந்தது போதும்...

நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு....

நெஞ்சில கைய வச்சா
சத்தமும் இல்ல
ஆனா நான்
சாகவும் இல்ல!

ஓடுதில்ல ஒருவேல
நெனப்பெல்லாம் உங்கமேல
நொந்து கிடக்கிறேன் நான்
நொடிப்பொழுதில் வாங்க..
தேய்ந்து போற என்ன
தேற்றிவிட்டுப் போங்க

அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.

பெண்களை
வாழ வைக்க
வக்கில்லாதவன்
பெற்றுக் கொள்ளும்
பிச்சைக் காசு...

மஹர் கொடுத்து
மணம் முடிக்கத் துணியாத
நீங்களெல்லாம் - ஏன்
காற்சட்டை அணிந்த
ஆண்கள் என்று
சொல்லிக் கொள்கிறீர்

எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

...மேலும்

Apr 28, 2011

தடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்


எப்போதேனும் தடுப்புக் காவல் கைதியாக
நீங்கள் இருந்திருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எப்போதேனும் உங்களது கால்கள்
விலங்குகளால் பிணைக்கப்பட்டிருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எவரேனும் அறையை விட்டு வெளியில் போகும்போது
நீங்கள் இருக்கிற அறை உள்ளிருந்து அல்லாமல்
வெளியிலிருந்து தாழிடப்படுமானால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

சுற்றிலுமுள்ளவர்கள் எங்கிருந்தாலும்
எவராலும் எனது குரலைக் கேட்க முடியாது
உங்களது வாய் இறுகக் காட்டப்பட்டிருக்கும்
உங்கள் உதடுகள் தைக்கப்பட்டிருக்கும்
நீங்கள் பேச விரும்பினால் அது உங்களால் முடியாது
நீங்கள் பேசினாலும் எவரும் கேட்க முடியாது
எவரேனும் அதனைக் கேட்க நேர்ந்தாலும்
அதனைப் புறக்கணிப்பர்.

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
எவரேனும் கதவைத் திறப்பார்கள்
எவரேனும் விலங்குகளிலிருந்து விடுவிப்பார்கள்
எவரேனும் தைக்கப்பட்ட உதடுகளைப் பிரிப்பார்கள் என
நீங்கள் அவாவுற்றிருபது போலவேதான்
நானும் வேட்கையுருகிறேன்

மாதமொன்று போய்விட்டது
எவரும் இந்த வழியால் வரவில்லை
இந்தக் கதவு திறக்கப்படுமானால்
என்ன நடந்திருக்கும் என எவர் தான் அறிவார்
என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
கடுமையாக உங்களுக்கு வலிக்கும்போது
நான் இதை எப்படி இதனை அனுபவித்திருப்பேன் என்பதை
நினைத்துப் பாருங்கள்


ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் வைக்க வேண்டும்
காரணமில்லாமல் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டவர்
எவராக இருக்கலாம்
அது நீங்களாகவும் இருக்கலாம் எனில்
நானும் நீங்களும் எல்லோரும் ஒன்று தான்
கொஞ்ச நஞ்சமான வித்யாசமும் இல்லை

நீங்கள் என்னைப் போன்றவர்தான்
ஒரு மனிதனுக் காகக்காத்திருப்பவர்
இருள் மண்டிக்கொண்டிருக்கிறது
எந்த மனிதனும் வரவில்லை.


தஸ்லிமா நஸ்ரின் -
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்
...மேலும்

Apr 27, 2011

இது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்



என்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட
மாதிரியிலான நகரம் இல்லை இது.
குள்ளநரித் தனமான அரசியல்வதிகளுடையது இந்த நகரம்
பழி பாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகளின்
சதை வியாபாரிகளின் கூட்டிக் கொடுப்பவர்களின்
பொறுக்கிகளின்,வன்புனர்வாளர்களின் நகரமேயல்லாது
இது எனது நகரமாக இருக்க முடியாது

வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும் ஊமை
சாட்சிகளாயிருப்பவர்களுக்கனது இந்நகரம்
எனக்கானது இல்லை

அயோகியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்
அனாதரவனவர்கள் குறித்த உணர்ச்சியற்று
பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்.

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்
பிச்சைகாரர்கள் மடிகிறார்கள்.
தப்பித்தல்வாதிகளுடைய இந்த நகரம்
குறைந்தபட்ச இன்னல் என்றாலும்
அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது.
அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்
பேய்களின் நகரம் இது.

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி
வீராவேசமாக இங்கு வாயடித்துக்கொண்டிருப்பார்கள்
முகத்துதிக்காரர்களின் நகரம் இது
தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்
சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது
இதனை ஒரு போதும்
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்
இனி ஒரு போதும்

பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
மதவெறி அயோக்கியர்கள்
இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய
ஆண்களும் பெண்களும்தான்
இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன்,
சுதந்திர சிந்தனைகளுடன்,
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு
இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது எனது நகரம் இல்லை தொகுப்பு

தஸ்லிமா நஸ்ரின் -இது எனது நகரம் இல்லை தொகுப்பு
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்
...மேலும்

Apr 13, 2011

நிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்

நிக்கி ஜியோவன்னி
''மனித சுவாசத்தின் மீது எழுதவேண்டும் என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் நமக்குக் கற்பிக்கின்றார். Ulysses மற்றும் Finnegan's wake என்னும் நூல்களை வாசிக்கும்போது குழப்பம் ஏற்படுவது இதன் காரணமாகத்தான். நிறுத்தங்கள் இல்லை - அவற்றை எப்படி வாசிப்பதென்று தெரியவில்லை. ஆனால் ஜாய்ஸ் தான் சுவாசித்தது போல எழுதினார். நாம் சுவாசிப்பது போல எழுதவேண்டும்.''

- நிக்கி ஜியோவன்னி

தன் கவிதையில் சந்தமிருக்கிறது, தன் கவிதைகளை வாசிக்கும்போது ஒருவர் தன் பாதங்களால் தட்டவேண்டும் என்று கூறும் ஜியோவன்னி, தன்னை ஒரு தன்னுணர்ச்சிக் கவிஞராகக் (lyricist) கருதுகிறார்.

''கருப்புக் கவிதையின் புரோகிதை' என்றழைக்கப்படும் ஜியோவன்னி கவிதையை வாழ்ந்து காட்டுகிறார் என்றெண்ணுகிறார் லூயி ரோஜெந்தால்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவந்துள்ள ஜியோவன்னி (கி.பி .1943) ஆஃப்ரோ- அமெரிக்கக் கவிஞரும் போராளியும் பேராசிரியையும் ஆவார்.

'கருப்புக் கலைகள் இயக்கத்தின்போது முக்கிய கவிஞராக அறியப்பட்டவர். மிகவும் கொண்டாடப்பட்டவர். மிகுதியும் சர்ச்சைக்குள்ளானவர். தனிப்பட்ட எதிரிவினையினை அரசியல் எதிர்வினையுடன் இணைத்துக் கொண்டவர். குறிப்பானதில் தொடங்கி உலகளாவியதாக விரிவு பெறச் செய்பவர். எதிர்கொள்ளும் எல்லாவற்றின்பாலும், பொருட்கள், நபர்கள், இடங்கள் என எதுவாயினும், தன் கரிசனத்தைக் காட்டுபவர். சாதாரணமானதைப் போற்றி அசாதாரணமானதைத் தேடுபவர்.'

வாழ்வில் எதனைச் செய்தாலும் அதனை அதிகபட்ச உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புவர். எழுத்தாளராகவும் போராளியாகவும் விளங்கும் அவர், எழுந்து, எல்லாவற்றையும் பிரகனடப்படுத்துவதில்லை. ''யாருடைய மனதையும் எழுத்தாளர்கள் எப்போதும் மாற்றி இருப்பதாக நான் கருதவில்லை. காப்பாற்றப் பட்டவர்களிடமே நாம் எப்போதும் போதிக்கிறோம் என்றெண்ணுகிறேன்''.

தம் யதார்த்தங்களையும் தம்மையும் வெளிப்படுத்துவதற்கான குரல் ஒன்றினைக் கண்டறிவதே கறுப்பினக் கலைஞனுக்கு அடிப்படையாக உள்ளது என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டுள்ளார். ''தன் தெய்வங்கள் நாட்டவன், புதியதொரு குரலுக்காக தன் இருதயத்தைத் தேடினான். வெய்யிலிலும் வியர்வையிலும் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் இதன் பிறகான வாழ்க்கையின் சாத்தியப்பாட்டையும் தேடினான். இருதயத்தின் சந்தங்களை விடுவிப்பதற்காக, அவர்தம் பாதங்களைத் தட்டினர். கைகளைக் கொட்டினர் ஒன்று சேர்ந்து சுவாசித்தனர. தம்மை வழிநடத்திச் செல்லவும், அழைப்புக்குப் பதிலளித்திடவும் ஒரு மானுடக்குரல் அவசியம் என்பதை அந்த இருண்ட தினங்களில் உறுதிப்படுத்தினர்.''

மானுட நிலையிலுள்ள தனிமையினைப் போக்கும் தொடர்புக் கண்ணியாக கலையினை அவர் கருதினார். கலை என்பது இணைப்பது. தன் கவிதையும் உரைநடையும் உண்மையாய் இருக்கும் காரணத்தால் கலை' என்பார். லாங்ஸ்டன் ஹக்ஸ் என்னும் ஆஃப்ரோ-அமெரிக்கக் கவிஞனின் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளவர். கவிதையினை மக்களின் பண்பாடாகக் காண்பவர்.

நம் மக்களின் கதையைச் சொல்வதை ஒரு துறையாக வரலாற்றிடமோ சமூகவியலிடமோ அறிவியலிடமோ பொருளாதாரத்திடமோ விட்டுவிட முடியாது. அது எழுத்தாளர்களால் சொல்லப்பட வேண்டும்'' என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.
நாம் பயணித்துள்ள பாதையைக் கொண்டாடுதல்....வரப்போகும் பாதைகளுக்கான பிரார்த்தனை'' என்னும் ஜியோவன்னியின் வரி அவர் கவிதைகளுக்கு அப்படியே பொருந்திப்போவது.

ஒவ்வொருவரும் கவிஞராகிவிட்டால் உலகம் இன்னும் நன்றாயிருக்கும் என்றெண்ணும் ஜியோவன்னி, தன் மனத்திற்கான வடிகாலாக கவிதை உள்ளது என்றொரு நேர்முகத்தில் விவரிக்கிறார்.

'' என் மனத்திற்கான வடிகாலாக நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன். இது வாழ்தலுக்கான என் நியாயம். ஆனால், என் மனத்தைப் பேசிவிடுவது என் வாழ்வின் முக்கிய அம்சமாகும் -அது மக்கள் விரும்பும் ஒன்றாக இல்லையாயினும், ஒவ்வொருவருக்கும் அவரவரின் இருதய கட்டளைக்கு அடிபணியும் உரிமை உண்டு. மக்களிடமிருந்து எடுத்துவிட முடியாத ஒன்று, நாணயம் குறித்த அவர் தம் உணர்வாகும். என் நாணயம் மோதுண்டுபோவதை நான் விரும்பாதது போலவே, இன்னொருவரது நாணயத்தின் மீதும் என் நாணயம் மோதுவதையம் நான் விரும்பவில்லை.

ஆதாரங்கள்

1. The collected poetry of Nikki Giovanni, William Morrow, N.Y. 2003
2. Nikki Giovanni / Lois ரோசெந்தால்

அறிமுகக்குறிப்பும் கவிதைகள் தமிழாக்கமும் - சா.தேவதாஸ்


குளிர்காலக் கவிதை

ஒரு சமயம் பனிக்கட்டி ஒன்று விழுந்தது
என் நெற்றி மீது அதனை நான் நேசித்தேன்
பெரிதும் அதனை முத்தமிட்டேன்
சந்தோஷமான அது தன் ஒன்றுவிட்ட சோதரரையும்
சோதரரையும் அழைத்தது
அப்போது ஒரு பனிவலை என்னைச் சுற்றி வளைத்தது
அவர்களனைவரையும் நேசிக்க நெருங்கினேன்
அவர்களைப் பிடித்துப் பிழிந்தேன் அவர்கள்
வசந்த மழையாகினர் ஆடாது அசையாது
நின்றேன் பூவாய் இருந்தேன்

பெண்கள் ஒன்றுகூடுகின்றனர்
(ஜோ ஸ்டிரிக்லேண்டிற்கு)

பெண்கள் ஒன்று கூடுகின்றனர்
ஏனெனில் அது விசித்திரமானதில்லை
பதற்றமான நேரங்களில் ஆதரவுதேடுவது
ஒருவன் புதைக்கப்பட வேண்டும்

அது விசித்திரமானதில்லை
முதியோர் இளையோரைப் புதைப்பது
அது அருவருப்பானது ஆயினும்

அது விசித்திரமானதில்லை
அறிவற்றோரும் கண்ணியமற்றோரும்
மனிதாயத்தின் பதாகை ஏந்துவது
அது ஆன்மாவைக் காயடிப்பது ஆயினும்

அது நம் அறிவாற்றலை நொறுக்குவதில்லை
யுத்தம் புரிவோர்
தம்மை ராஜதந்திரிகள் என்றழைத்துக் கொள்வது

நாம் ஆச்சரியப்படுவதில்லை
விசுவாச மற்றோர் உரத்துப் பிரார்த்திப்பது
ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு தேவாலயத்திலும்
சிலவேளைகளில் கிழக்கு நோக்கிய அறைகளிலும்
அது ஒரு பாவம், அவமானம் ஆயினும்
ஆக நாம் ஒருவனை மதிப்பீடு செய்வது எப்படி

பெரும்பாலானோர் நேசிக்கிறோம் நேசிக்க வேண்டாம்
என்னும் நம் தேவையிலிருந்து
ஏனெனில் தகுதியுடைய ஒருவனைக் காண்கிறோம்
பெரும்பாலானோர் மன்னிக்கிறோம் நாம் அத்துமீறி
இருப்பதாலேயழிய
பெருந்தன்மையானவர்கள் என்பதால் அல்ல

ஒரு கவிதை
(லாவ்ஸ்டன் ஹக்ஸுக்கு)

வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. . . எண்ணெய்
கண்டறியப்படுகின்றது
தங்கம் தேடிஎடுக்கப்படுகிறது. . . ஆனால் சிந்தனைகள்
திறக்கப்படுகின்றன
கம்பளி கத்தரிக்கப்படுகிறது. . . பட்டு நெய்யப்படுகிறது
நெசவு சிரமமானது... ஆனால் வார்த்தைகள் வேடிக்கையானவை

நெடுஞ்சாலைகள் அளாவிக் கிடக்கின்றன. . . பாலங்கள்
இணைக்கின்றன
கிராமச் சாலைகள் அலைந்துதிரிகின்றன. . .ஆனால்
நான் சந்தேகிக்கிறேன்

வானவில்லேறி நானேகினால்
உன்னருகே நானிருக்க முடியும்

உருவகத்திற்குத் தன்நோக்குநிலை உண்டு
குறிப்பீடு மற்றும் மாயக்காட்சியும் . . . கூட

அணி.. . செய்யுள். . . செவ்வியல். . . சுயேச்சா
கவி கேளே நீ எனக்கு எழுதுவது

இதனை நோக்குவோம் மேலும் ஒருமுறை
இந்த வரிகளுக்கு நான் சந்தம் அமைத்திருப்பதால்

வானவில்லேறி நானேகும்போது
என்னருகே நீயிருப்பாய்
ஹே பாப் ஹே பாப் ஹே ரீ ரீ பாப்

தனித்து

என்னால் இருக்க முடியும்
நானாகத் தனித்து

நான் இருந்தேன்
தனித்து நானாக
இப்போது தனித்திருக்கிறேன்
உன்னுடன்
ஏதோ கோளாறு உள்ளது
ஈக்கள் இருக்கின்றன
எங்கிலும் நான்போகும்

புரட்சிகர கனவுகள்

எப்படி இருக்கவேண்டும்
என்று வெள்ளையருக்கு எடுத்துக் காட்டுவதற்காக
அமெரிக்காவைக் கைக்கொள்ளும்
தீவிரக் கனவுகள்
நான் காண்பதுண்டு

என சரியான பகுப்பாய்வு
அறிதல் ஆற்றல்களால்
ஒவ்வொருவரையும் தூக்கி எறிந்திடும்
ஆவேசக் கனவுகள்
நான் காண்பதுண்டு

கலவரத்தை நிறுத்தி சமாதானத்தைக்
கொண்டு வர முற்படுவது நானே
என்று எண்ணிக்கொள்வதும் உண்டு

அப்போது நான் விழித்தெழுந்து
பெண் இயற்கையாய் இருக்கையில்
என்ன செய்வாளோ என்று
இயற்கைக் கனவுகள் கண்டேன்
என்றுணர்ந்தால்
புரட்சி ஒன்று பெற்றிருப்பேன்

இரவு

ஆஃப்ரிக்காவில் இரவு
நடந்துபோகிறது பகலுக்குள்
சுடர் மீதான வேட்கையால்
அழிந்துபடும் பூச்சிபோல் அவ்வளவு விரைவாக

மேகங்கள் இரவினைக்
கொண்டு செல்கின்றன கரீபியன்கடலில்
நீலவானில் கருப்புப் புள்ளிகளாகச்
சொட்டும் குறிவிரைப்புடன் செல்லும்
இளைஞனைப் போல
சூரியனின் காதலியான காற்று
ஓலமிடுகிறது தன் வேதனையை
அறியாது நிகழ்ந்த கூடலுக்காக

ஆனால் நியூயார்க்கில்
இரவுகள் வெண்ணிறமானவை
அதிருப்தியின் அங்கிகள்
மறைக்கின்றன
தனிமையின் போர்வைகளுக்கிடையே
நோக்கிடும் நம் பீதியை

நேசம் - ஒரு மானுட நிலை

ஓர் அமீபா அதிருஷ்டவசமானது அது சிறியதாக
இருப்பதால்.. இல்லாதுபோனால், அதன் தன்மோகன் யுத்தத்திற்கு
இட்டுச்சென்றிருக்கும்... தன் - நேசம் தார்மிக
நிலைக்கு (self-righteousness) அடிக்கடிகொண்டு
செல்வதாகத் தோன்றுவதால். . .

மக்களை விடவும் அமீபாக்கள் அதிகம்
உள்ளன. . . என்று வைத்துக் கொள்வோம். .
பௌதிகப் பெரும்பான்மை கொண்டுவிடுகின்றன
அதன்காரணமாக தார்மிக உரிமை.. . ஆனால்
அதிருஷ்டவசமாக அமீபாக்கள் மேலான
தெய்வங்களிடம் தொலைக்காட்சி கோரிக்கை
கள் வைப்பது அரிதாகவே. . . மற்றும்
இழிந்த உள்ளுணர்வுகள். . .ஆக தன்னைத் திறம்பட
விருத்தி செய்திடும் திறமை, நேசத்துடன்
ஏதேனும் தொடர்பு கொண்டுள்ளதா என்று
ஒருவர் வினவவேண்டும்

இருளுடன் விளையாடும் நட்சத்திரங்
களை இரவு நேசிக்கின்றது. . சூரியனைத்
தழுவிடும் ஒளியைப் பகல் நேசிக்கின்றது
நாம் நேசிக்கின்றோம். . நேசிப்பவர்களை
ஒளியும் இருளும் தேவைப்படும் உலகில் நாம்
வாழ்கின்ற காரணத்தால் . . சேர்ந்து கொள்ளல்
மற்றும் தனிமைப்படல்.. ஒத்தன்மை மற்றும்
பேதம்... பரிச்சயமானது மற்றும் அறியாதது
நாம் நேசிக்கின்றோம், அது மட்டுமே நிஜமான
சாகசமாக இருப்பதால்

நான் ஒரு அமீபா இல்லை என்பதில் சந்தோஷப்
படுகிறேன்... நம்மைவிடவும் கூடுதலாய்
இருக்கின்றது நம்மனைவரது வாழ்க்கைகளிலும்
மற்றும் அதனையே மேல்திகமாக செய்திடும் நம் திறமை...
(and out ability to do mine of the same)

நன்றி - கூடு
...மேலும்