சனி, 10 டிசம்பர், 2011

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-5(ஆ)


இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-5(ஆ)


சென்ற நூற்றாண்டில் எதிர் சிந்தனை எதிர் அரசியல் பத்திரிகைகளைப் பொருத்தவரையில் விட்டுவிட்டே வெளிவந்தன. நீண்ட காலமாக வெளிவரும் ஆற்றலை அவை பெற்றிருக்கவில்லை. காரணம் அவை தனிநபர்களின் முயற்சியாகவும் அல்லது தொடர்சியாகச் செலவளிக்க முடியாத குழுக்களின் முயற்சிகளாகவும் இருந்தன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் உம்மத்தின் உணர்வில், பிரக்ஞையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக இஸ்லமிய வாதப்போக்கிலான அல்லது தேசியவாதப் போக்கிலான சஞ்சிகைகள் விட்டுவந்தாலும் பொதுவான சிந்தனைப் பண்பாட்டுத்தளத்தில் விரிவான தாக்கத்தை விளைவிக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பேராசிரியர் அஹ்மத் ஹஸன் அஸ்ஸையாத் வெளியிட்ட அர்ரிஸாலா சஞ்சிகையைக் குறிப்பிடலாம். இஸ்லாமிய உணர்வுள்ள அறபுத் தேசியவாதப் போக்கைச் சுமந்த கலைத்துவ ஆக்கங்களைச் சுமந்துவந்தது. அறபு சமூகம் முழுவதும் அதற்குப் பெரும் தாக்கம் இருந்தது. அதிலே இஸ்லாமிய உலகின் பல கல்வியலாளர்கள் கலை இலக்கிய வாதிகள் எழுதிவந்தனர். அறிவியல் பூர்வமான சஞ்சிகைள் குறைவாகவும் வரையறுக்கப்பட்ட அளவிலும் இருந்த அக்காலத்தில் அதன் தாக்கம் பன்மடங்காக இருந்தது. அவ்வாறே ரஸீத் ரிழா வெளியிட்ட அல்-மனாரைக் குறிப்பிடலாம். சிந்தனை மற்றும் இஸ்லாமிய பிக்ஹு புத்துயிர்பாக்கத் தளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலே ரஸீத் ரிழா தனது முக்கியமான சிந்தனைச் சாதனைகளை முன்வைத்து வந்தார். அது பிக்ஹை யதார்த்த வாழ்வோடு இணைக்கும் பணியைச் செய்ததோடு மற்றொரு கோணத்தில் புத்துயிர்ப்பு இயக்கத்தை ஸலபியா இயக்கத்தோடு இணைத்தது. சென்ற நூற்றாண்டில் அதன் ஆரம்ப வெளியீடுகளில் ஸலபி சிந்தனைகளையும் அதன் முன்னோடிகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. இப்னுத் தைமியாவின் நூல்கள் அக்காலத்தில் பரவின என்றால் மனார் சஞ்சிகை அதன் வாசகர்களுக்கு அதை வெளிப்படுத்தியதே காரணமாகும்.
அவ்வாறே ஸயீத் ரமழான் ஆரம்பத்தில் எகிப்திலும் பின்னர் அதற்கு வெளியிலும் வெளியிட்ட அல் முஸ்லிமூன் சஞ்சிகையைக் குறிப்பிடலாம். எனது பார்வையில் அது சென்ற நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சஞ்சிகையாகும்.
ஜமாலுத்தீன் அத்திய்யா வெளியிட்ட அல் முஸ்லிமுல் முஆஸிர் சஞ்சிகையைக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் அச்சஞ்சிகையால் நான் மிகவும் தாக்கம் பெற்றுள்ளேன். 1974 நவம்பர் வெளிவந்த அதன் அறிமுக இதழ் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. இச்சஞ்சிகை இஸ்லாமிய சிந்தனைப் புணரமைப்புப் பாசறையின் எல்லாப் பகுதிகளையும் தொட்ட சஞ்சிகையாகக் குறிப்பிடலாம்.
புத்தகங்களைப் பொருத்தவரையில் என்னிடம் பல பெயர்கள் இல்லை. ஆனால் ரஸீத் ரிழாவின் தப்ஸீருல் மனாரைக் குறிப்பிட விரும்புகின்றேன். பதினைந்து பாகங்களோடு அது இடைநிறுத்தப்பட்டாலும் சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த தப்ஸீர் நூலாகும். அஷ்ஷெய்க் முஹம்மத் அல்ஹஸ்ஸாலி எல்லாத் தப்ஸீர் நூல்களிலும் அதை முதன்மைப்படுத்துவார். அதன் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் எனக்கருகில் எப்போதும் தப்ஸீருல் மனாரை வைத்துக் கொள்வோன் என்று கூறுவார். அல் மனார் முஹம்மத் அப்துஹுவின் சிந்தனைத் தொடர்ச்சியாகும். குர்ஆனுக்குத் தப்ஸீர் எழுதுவதாக இருந்தால் ரஸீத் ரிழா விட்ட இடத்தில் இருந்தே தொடங்குவேன் என இமாம் ஹஸனுல் பன்னா கூறுவார். இது அவரது கோட்பாட்டை தப்ஸீர் வழிமுறையை ஏற்றுக் கொள்கிறார் என்பது மட்டுமல்ல முஸ்லிம் உம்மத்தின் முஜத்திதுகளுக்கிடையிலுள்ள சிந்தனை ஊடாட்டத்தை வெளிக்கொணர்கின்றார். ஷஹீத் ஸையித் குத்பின் ழிலால் தப்ஸீரைத் தெரியாமல் இருக்க முடியாது என்பதைப் போல நவீன இஸ்லாமிய அறிவு உற்பத்தி செய்த மிக உன்னத முயற்சியாகும். தனது தனித்துவ இலக்கியப் புலமையாலும் க்ரியா சக்தியாலும் நாம் இதுவரை பார்த்திராத அழகிய வியாக்கியானத்தை நம்மிடம் கையளித்துள்ளார்.
அஷ்ஷெய்க் முஹம்மத் அல் ஹஸ்ஸாலியின் நூல்கள், அஷ்ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியின் நூல்கள் அத்தாஹிர் பின் ஆசுர் போன்றோரின் படைப்புக்களையும் குறிப்பிடலாம்.
மாற்று செல்நெறியைப் பொருத்தவரையில் அலி அப்துல் ரஸாக் அவர்களின் அல் இஸ்லாம் வ உஸுலுல் ஹுக்கும் என்ற நூலும் தாஹா ஹுஸைனின் பிஸ்ஸிஃரில் ஜாஹிலி என்ற நூலும் சென்ற நூற்றாண்டில் முஸ்லிம் உம்மத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய நூல்களாகும். முதல் நூல் சிந்தனைத்தளத்தில் மிகவும் பலவீனமானது. அந்நூலின் கதை பல மயக்கங்களைக் கொண்டுள்ளது. அலி அப்துல் ரஸாக்கோடு அந்நூல் இணைக்கப்படுவது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக அதன் முதற்பதிப்பு திகதி இன்றி இந்தியாவில் வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பு 1926 இல் கைரோவில் வெளிவந்தது. அக்காலத்தில் அது பெரும் அதிர்வை உண்டுபண்ணியது. அலி அப்துர் ரஸாக் அந்நூலிலுள்ள அனைத்துச் சிந்தனையும் கருத்துக்களையும் வாபஸ் வாங்கினார். அவருக்குப் பின் அவரது குடும்பம் வாபஸ் வாங்கியது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் மதச்சார்பற்றவர்கள் குறிப்பாக மார்க்சியவாதிகள் சென்ற நூற்றாண்டில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அந்நூலை மீள உயிர்ப்பித்தனர். நூலாசிரியரைவிட அந்நூலுக்காக அவர்கள் வாதாடினர். இடதுசாரிச் சஞ்சிகையான அத்தலீஆ ஆசிரியரின் விருப்பம் இன்றி அவரது குடும்பத்தின் ஒப்புதலின் அந்நூலை மறுபதிப்புச் செய்தது.
இதே நிலை தாஹா ஹுஸைனின் நூலுக்கும் நடந்தது. அவரது எல்லா நூல்களும் இஸ்லாத்தை கடுமையாகத் தாக்கின. அல்லது இஸ்லாத்தில் குறை கண்டன. காலித் முஹம்மத் காலித்துக்கு நடந்தது போல தாஹாவின் தோழர்கள் அவரது நூல்களுக்காக வாபஸ்வாங்கினர். மதத்தையும் உலகத்தையும் பிரிக்கும் அவரது “மின்ஹுனா நப்தஃ’ என்ற அவரது நூலை மதச்சார்பற்றவர்கள் அவர் அத்தவ்லா பில் இஸ்லாம் என்ற நூலில் வாபஸ் வாங்கியவை மறந்துவிட்டு பற்றிப்பிடித்துக் கொண்டனர்.
முஸ்லிம் உம்மத்தைப் பொருத்தவரையில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வுகள் யாவை?
உஸ்மானியர் பேரரசு வீழ்ச்சி, கிலாபத் வீழ்ச்சிதான் முஸ்லிம் உம்மத்தின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வாகும். அரசியல் தலைமைத்துவம் பறிபோனபின் அதற்குப்பதிலீடாக புதிய தலைமைத்துவம் உருவாகாமையும்தான் முஸ்லிம் உம்மத் இன்றுவரை அனுபவிக்கின்ற எதிர்மறை சவால்களுக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால் இது முஸ்லிம் உம்மத் இதற்கு முற்றாகப் பணிந்து தனது தலைமையை உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதைக் காட்டாது. ஆனால் அது மக்கள் மயப்பட்ட தன்னெழுச்சியின் வடிவத்திலேயே வந்தது. அரசு வடிவில் அல்ல. அதாவது இஹ்வான் முஸ்லிமூன் இயக்கத்தின் விடயம் முஸ்லிம் உம்மத் தனது கட்டமைப்பை மீளாக்கம் செய்வதற்கான விருப்புறுதியின் மிகப்பெறும் வெளிப்பாடாகும். ஆனால் அது மக்கள் மயப்பட்டு இயங்கும் தன்மை கொண்ட குழுவாகத்தான் வந்தது. உத்தியோக பூர்வமாக வரவில்லை. மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதச்சார்பற்ற திட்டத்தை எதிர்த்து வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் இஸ்லாம் மூலாதாரம் என அதன் முழுமையிலும் பொதுமையிலும் எழுந்த மக்கள் குழுவே இஹ்வான் இயக்கம் ஆகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனித்துவ அலை எழுந்தாலும் இருபதாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம் உம்த்தின் எல்லா அங்கங்களிலும் தனது ஆளுகையை முழுமையாக பதிக்கின்றது. அடுத்ததாக தனக்கெதிரான விடுதலை இயக்கங்கள் தோன்ற வழிவகுத்தது. அவையும் மக்கள் மயப்பட்டவையாய் இருந்தன. ஈற்றில் உம்மத் விடுதலையைப் பெற்றுக் கொண்டுக்கொள்கின்றது. அதன் தாக்கம் எஞ்சி இருந்தாலும் அல்லது வேறு வடிவத்திற்கு மாறினாலும் அது ராணுவ வடிவத்தோடு மட்டும் சுறுங்கி இருக்கவில்லை.
அவ்வாறே ஒற்றுமையிலும் விடுதலையிலும் முஸ்லிம் உம்மத் பேரவாக் கொண்டிருந்தாலும் பாரிய இடைவெளிகளை ஏற்படுத்தி முஸ்லிம் உம்மத்தை அரசியல் ரிதியாகத் துண்டாடுவது ஏக இஸ்லாமிய தாயகத்தை பல்வேறு சிற்றரசுகளாகப் பிரிப்பதோடு தொடர்பான நிகழ்வுகளும் முக்கியமானவை. ஒன்றுபட்ட அரசொன்றை அல்லது கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அழைப்பாளர்களின் உள்ளத்தில் இல்லாவிட்டாலும் கிலாபத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான இஸ்லாமிய ஐக்கியத்திற்கான அவர்களின் அழைப்பில் இதனைத் தெளிவாகக் காணலாம். முஸ்லிம் உம்மத்தை ஒன்றுபடுத்துவது, ஏக தலைமையை உருவாக்குவது முடியுமான எல்லா வடிவிலும் நிறைவேற்றத்தான் வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஆளுமைகளாக யாரைக் கருதுகிறீர்கள்?
குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய ஆழுமைகள் தவறிவிடுவார்கள் என நான் அஞ்சுகிறேன். இதனால் துலாம்பரமாக இல்லாமல் பருன்மையான ஒரு விளக்கத்தைத் தருகிறேன். எனது கருத்தின்படி முதலாவது குறிப்பிடப்பட வேண்டியவர்கள் எமது இஸ்லாமிய நாடுகளில் விடுதலைப் போராட்டங்களை நடாத்திய தலைவர்களாவர். இவர்கள் இஸ்லாமிய அணி சேராதவர்களாக இருந்தவர்களாக இருந்தாலும் பறவாயில்லை. ஏனெனில் முஸ்லிம் உம்மத்தின் முன்னால் இருந்த மிகப் பெரும் பிரச்சினையைத் தடுத்து நிறுத்தினார்கள். அதுவே அந்நியக் காலனித்துவத்திலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாகும்.
இஸ்லாமிய அணியைப் பொருத்தவரையில் சுல்தான் அப்துல் ஹமீத் சுல்தான் என்ற நிலையைத் தாண்டி இஸ்லாமியத் தலைவராக மாறினார். அவ்வாறே பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜமாலுத்தீன் அல் ஆப்கானி முதன்மையானவர். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மரணித்தாலும் அவரது தாக்கம் தொடர்ந்திருந்தது. வீழ்ந்த கிலாபத்திற்குப் பிரதியீடாக முஸ்லிம் உம்மத்தின் மாதிரித் தலைவராக புதிதாக இஸ்லாமிய இயக்கத்தை மீளாக்கம் செய்தவர் ஷெய்க் ஹஸனுல் பன்னா ஆவார். அஷ்ஷெய்க் முஹம்மத் அல் ஹஸ்ஸாலி, கலாநிதி யூசுப் அல் கர்ளாவி இஸ்லாமியப் புத்துயிர்ப்பு இயக்கத்தின் முன்னணி வீரர்களாவர். அல் அஸ்ஹர் ஷெய்க்மார்களைப் பொருத்தவரையில் அவர்களில் முதன்மையானவராக அப்துல் ஹலீம் மஹ்மூத், அஷ்ஷெய்க் ஜாதல் ஹக் அலி ஜாதல் ஹக் ஆகிய இருவரும் அஸ்ஹரின் தரத்தை உயர்த்தியதோடு அதைக் குறைத்து மதிப்பிடும் நிலையையும் நீக்கினார்கள். அல்லாமா அப்துல் ரஸாக் அஸ்ஸன்ஹுரி சென்ற நூற்றாண்டின் மிகப் பெரும் சட்டவல்லுனர். இஸ்லாமிய ஷரிஆவைப் புத்துயிர்ப்பாக்கி கோவைப்படுத்தியவர். அடுத்து இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தை உருவாக்கியவராக ஷஹீத் இஸ்மாயீல் அல் பாரூக்கியைக் குறிப்பிடலாம். இஸ்லாமிய உலகின் சிந்தனைச் சிக்கலுக்கு பரிகாரம் காணும் பணியிலும் அதன் மீளெழுச்சிக்கும் பெரும்பங்காற்றியவராக அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபி வருகிறார். இவருக்கு முன் அல் ஜீரிய ஜம்இயதுல் உலமாவை உருவாக்கிப் பாடுபட்ட அப்துல் ஹமீத் பின் பாதீஸைக் குறிப்பிடலாம். ஷீஆக்களின் தரப்பில் பேராசிரியர் அலி ஷரிஅத்தி சமகால இஸ்லாமிய சிந்தனைக்கு மகத்தான பங்காற்றியுள்ளார். ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியில் அவரது தாக்கத்தைத் தெளிவாகக் காணலாம்.
முஸ்லிம் உம்மத்தை ஒரு கட்டமைப்பாகவும் சிந்தனையாகவும் பேசும் போது அது சென்ற நூற்றாண்டில் எப்படிப் பிரவேசித்தது? சென்ற நூற்றாண்டில் இருந்து எப்படி வெளியேறுகிறது என்று கூறமுடியுமா?
முஸ்லிம் உம்மத் சென்ற நூற்றாண்டில் பலவீனமான கிலாபத் கட்டமைப்புடனேயே பிரவேசிக்கின்றது. பிரவேசித்தவுடன் முழுமையாக வீழ்ச்சியடைகின்றது. சிதறிய பல்வேறு பிராந்திய அரசுகளாக பிளவுபடுகின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலையே தொடர்ந்திருக்கின்றது. ஆனால் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியது போல மக்கள் மட்டத்தில் மீண்டும் இந்தக் கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என்ற முயற்சி பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம் உம்மத்தை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை இஸ்லாமிய இயக்கங்கள் அதற்காக உழைத்து வருகின்றன. அதன் முன்னணியில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைக் குறிப்பிடலாம். ஓரளவு உத்தியோகப் பற்றுள்ள முறையில் சர்வதேசத் தன்மை கொண்ட பல்வேறு அமைப்புக்கள் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இஸ்லாமிய சம்மேளனம் ஏனைய அறபு ஒன்றியங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் மருத்துவ, நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் மிகக் குறைந்த தாக்கவீதத்தையே கொண்டிருந்தன. ஆனால் இவையாவும் முஸ்லிம் உம்மத்தின் கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை மீளாக்கம் செய்யவே முயற்சித்தன. ஒற்றை அரசாக அல்லாமல் ஏற்கனவே முஸ்லிம் உம்மத் அனுபவித்த கட்டங்களின் இயல்பை எதிர்கொண்ட சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய அரசை உருவாக்கவே விரும்பி நின்றன.
முஸ்லிம் உம்மத்தின் சிந்தனை கட்டமைப்பைப் பொருத்தவரை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தைவிட இறுதிக் கட்டத்தில் உம்மத்தின் பொது நினைவில் அதிக முனைப்புடனேயே காணப்பட்டது. உதாரணமாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளை நீங்கள் படித்துப் பார்த்தால் அவை முஸ்லிம் உம்மத்தின் செய்திகளை எல்லாப் பாகங்களிலிருந்தும் கொண்டுவருகின்ற விடயத்தில்தான் பேரார்வம் காட்டி வந்துள்ளதைக் காணலாம். இப்போது நிகழ்வதைப் போல மேற்குலகத்தைவிட இஸ்லாமிய பிரக்ஞையில் உலகம் பற்றிய சிந்தனை குறுகியதாக இருக்கவில்லை. ஆனால் கிலாபத்தின் வீழ்ச்சியோடு சிந்தனையும் கோட்பாடும் சுருங்கத் தொடங்குகிறது. ஐம்பதுகளில் அறுபதுகளில் அதன் உச்சத்தை அடைகிறது. தேசியவாதம் இஸ்லாம் என்ற இரு சிந்தனைகளுக்கிடையில் நிகழ்ந்த மோதுகை ஒரு காரணமாக இருக்கலாம். எதனோடு இணைந்திருப்பது என்ற தவறான ஒழுங்குபடுத்தலாகவும் இருக்கக் கூடும். ஈற்றில் தேசியவாத இணைவுக்கும் இஸ்லாமிய இணைவுக்கும் இடையில் ஒரு மோதுகையாக உருவெடுத்தது. அவ்வாறே அறபிஸத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான மோதுகையாகவும் அது இருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியோடு சிந்தனை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றது. இஸ்லாமிய இயக்கங்களின் தொடர்வளர்ச்சியே முஸ்லிம் உம்மத்தின் சிந்தனை மீண்டும் ஒருமுறை புத்துயிர்ப்பாக்கம் பெறுவதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
சென்ற நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கில் முஸ்லிம் உம்மத் சாதித்த மிக முக்கிய சாதனைகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
சாதனைகளின் பட்டியலை நாம் வரையறுத்துத்தான் கூறமுடியும்.
அடிப்படைகளைப் பாதுகாக்கும் இயக்கத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைப் புத்துயிர்ப்பாக்க இயக்கத்திற்கும் இடையில் ஏலவே நாம் குறிப்பிட்டது போல சென்ற நூற்றாண்டு முழுவதும் நடைபெற்ற மோதுகைக்குப் பின் ஒருங்கிணைவும் சமாதானமும் ஏற்பட்டமை ஒரு சாதனையாகும்.
கிலாபத் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தேசியவாத சிந்தனைகளோடு முட்டி மோதிய பின்னர் சிதைவடைந்திருந்த முஸ்லிம் உம்மத்தின் சிந்தனையும் தனது சுயம் பற்றிய பிரக்ஞையும் மீளாக்கம் பெற்றமை மற்றொரு சாதனையாகும்.
பல்வேறு இணைவுகளுக்கு மத்தியில் நடைபெற்ற சிக்கலான மோதுகைகளின் விளைவின் பின்னர் மிகச்சரியான ஒரு முறையில் முஸ்லிம் உம்மத்தின் கிளை இணைவுகள் முறைப்படுத்தப்பட்டமை ஒரு சாதனையே. அவற்றில் பிரதானமானதுதான் இஸ்லாமிய சிந்தனைக்கும் இனவாத சிந்தனைக்குமிடையில் நடந்த கசப்பான மோதுகையாகும். தற்போது இஸ்லாமிய அணிகளிலும் தேசியவாத அணிகளிலும் இப்பிரச்சினை குறித்து தெளிவான பார்வை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக தேசியவாத சிந்தனை, மதச்சார்பற்ற சிந்தனைகளை பல இடங்களில் தாண்டிச் சென்றுவிட்டபின்னரே இது நடந்தேறியது.
சாதிக்க முடியாமல் போனவை யாவை?
சாதிக்க முடியாமல் போனவற்றை நான் இரண்டு பகுதிகளாக பிரித்துப் போசுகின்றேன். ஒன்று, இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டோடு தொடர்பானது. இவ்விணக்கப்பாடு இன்னும் தேவைப்படுவதாகவே இருக்கின்றது. அறபு வட்டாரத்தில் இப்பிரச்சினை மிகக்குறைவான கூர்மையே பெற்றுள்ளது. அறபு ஐக்கியவாத அழைப்பு அதன் பின்வாங்கள் இருந்த போதிலும் நாடுகளுக்கிடையிலான சிக்கல், முரண்பாடுகள் நிலவியபோதும் பல்வேறு விடயப்பொருட்களில் கட்டங்களில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக மக்கள் மட்டத்திலான இணைவு இயக்கம், அரச மட்டத்திலான இணைவுகளைவிட பலம்வாய்ந்ததாக விளங்குகின்றது. ஏனைய இஸ்லாமிய வட்டாரங்களைப் பொருத்தவரையில் இந்தத் தரத்தை இன்னும் அடையவில்லை என்றே கூறவேண்டும். அறேபியர், துருக்கியர், பாரசீகர், ஆபிரிக்கர், தென்ஸஹாரா, இந்தியர் போன்றவர்களுக்கிடையிலான உறவுகள் பலவீனமானதாக இல்லை. மாறாக அறவே இல்லாத நிலையிலேதான் இருக்கின்றது. சிலபோது எமது பிரக்ஞையில் கூட அவ்வுறவுகள் எழுவதில்லை. அவ்வாறே தென்னாபிரிக்காவிலுள்ள முஸ்லிம்களுடனான எமது உறவுகளைப் பொருத்தவரையில் உள்ள அதே நிலைதான் துருக்கியரோடும் பாரசீகரோடும் ஏற்றத்தாழ்வுடன் வைத்திருக்கின்றோம்.
சாதிக்க முடியாமல் போனவற்றில் இரண்டாம் பகுதியாக நான் விளக்குவது அரசுகளுடனான இயக்கங்களின் உறவாகும். எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இவ்வுறவு பெரும் குழப்பதிலேயே இருக்கின்றது. அச்சுறுத்தல், நம்பிக்கையீனம், குருட்டுத்தனமான செயற்பாடுகள் என்று நிலமை தொடர்கிறது. இஸ்லாம் ஆட்சி பீடத்தில் இல்லாத எமது நாடுகளிலிலுள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் அங்குவரையப்படும் அரசியல் திட்டங்களில் மிகமோசமாகவே நடந்து கொள்கின்றனர். இஸ்லாமிய நடவடிக்கைகளில் குறைந்த பட்சம் இவற்றைக் கவனிக்க வேண்டும் என்றே நான் கருதுகின்றேன். பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இருதரப்புகளுக்குமிடையில் நம்பிக்கைப் பாலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன்.
முஸ்லிம் உம்மத்தின் எதிர்கால ஒளியில் அதன் அசைவியக்கம் ஏறிச்செல்கிறதா? அல்லது இறங்கிச் செல்கிறதா?
முஸ்லிம் சமூகத்தின் அசைவியக்கம் தொடர்ந்து ஏறுவரிசைப்படிதான் சென்று கொண்டிருக்கிறது. அது பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட போதும் கூட. சிலநேரங்களில் இடைநிறுத்தப்பட்டாலும் பெரும்பாலான வேளைகளில் தொடங்கிய புள்ளியை நோக்கி மீளாமல் தொடர்ந்தும் முன்னேறிச் செல்கிறது. இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சி எனது பார்வையில் உறுதியானதே. சாதிக்கத் தவறியவற்றை அதுதான் தாண்டித்தான் செல்கிறது. குறிப்பாக அரசுக்கும் இயக்கத்துக்குமிடையிலான உறவில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரிகிறது.
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-5(அ)
தொடர்புடைய பதிவுகள்:
  1. இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-2
  2. இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-3
  3. இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்-4
  4. பெருவெளி நேர்காணல் 5
  5. பெருவெளி நேர்காணல் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக